நம்மில் அநேகர் ஒரு நல்ல அரசாங்கம் வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆகவே நாம் நீதியென்றும், நியாயமென்றும் எண்ணும் காரியங்களுக்காக ஓட்டுப் போடுகிறோம், சேவை செய்கிறோம் மற்றும் அதற்காக குரல் கொடுக்கவும் செய்கிறோம். ஆனால் நம்முடைய இருதய நிலையை மாற்றக் கூடிய வல்லமை அரசியல் தீர்வுகளுக்குக் கிடையாது.
இயேசுவை பின்பற்றிய அநேகர், தங்களைக் கடுமையாக, தன் பலத்த கைக்குள் அடக்கி ஆண்ட ரோம சாம்ராஜ்யத்திற்கு பலமான பதிலடி கொடுக்கக்கூடிய மேசியாவையே எதிர்பார்த்திருந்தனர். பேதுருவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆகவேதான், ரோம சேவகர்கள் இயேசுவை கைது செய்ய வந்தபொழுது, பேதுரு தன்னுடைய பட்டயத்தை வீசி பிரதான ஆசாரியனுடைய வேலையாளின் காதை வெட்டி வீசினான்.
ஆனால், பேதுருவின் இந்த ‘ஒரு மனித யுத்தத்தை’ இயேசு தடுத்து, “உன் பட்டயத்தை உறையிலே போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ” (யோவா. 18:11) என்று கூறினார். சில மணி நேரங்கள் கழித்து, “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே” (வச. 36), என பிலாத்துவினிடம் இயேசு கூறுகிறார்.
இப்பூமியில் தேவனுடைய பணியின் தீவிரத்தை நாம் அறிந்துகொள்ளும் பொழுது, தான் மரணத்தை நெருங்கிய அவ்வேளையிலும் கூட, இயேசு காட்டிய சுயக்கட்டுப்பாடு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஆனால் எதிர்காலத்தில் ஒரு நாள் பரலோக சேனையை யுத்தத்திற்குள் கூட்டிச் செல்வார். “அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்” என்று யோவான் எழுதியுள்ளார் (வெளி. 19:11).
ஆனால், அவர் தன்னுடைய கைது, விசாரணை மற்றும் சிலுவை மரணத்தின் கடுமையான வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்த பொழுது, தன்னுடைய பிதாவின் சித்தத்தையே தன் முன் நிறுத்தியிருந்தார். சிலுவையிலே மரணத்தை தழுவினதால், உண்மையாகவே இருதயங்களை மறுரூபமாக்கும் சம்பவங்கள் சங்கிலி போல் ஒன்றன் பின் ஒன்றாக தொடரச் செய்துவிட்டார். இந்த தொடர் செயலில், நம்முடைய பலசாலியான வெற்றிவீரர் மரணத்தையே வென்று விட்டார்.
உண்மையான சுய கட்டுப்பாடு பலவீனமல்ல,
அது உண்மையான பெலத்திலிருந்து வருகிறது.