ஒரு சமயம் நானும், என்னுடைய பிள்ளைகளும் அருகிலிருந்த பூங்காவில் நடந்து கொண்டிருக்கையில், கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த இரண்டு நாய்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அதில் ஒரு நாய் என்னுடைய மகனை தொந்தரவு செய்ய ஆரம்பித்ததை நாயின் உரிமையாளர் கவனிப்பதாகத் தெரியவில்லை. என்னுடைய மகன் அதைத் துரத்த முயற்சித்த பொழுது அது இன்னும் அதிகமாக அவனைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தது.
கடைசியில், என் மகன் மிகவும் பயந்துபோய் சில அடிகள் தூரம் விலகி ஓடினான். ஆனால் அந்த நாய் அவனை விடாமல் துரத்தியது. அப்பொழுது நான், “என்னிடம் ஓடி வா!” எனக் கத்தினேன். என் மகன் இரண்டு மடங்கு வேகத்துடன் என்னிடம் ஓடி வந்து அமைதியானான். அதைக்கண்ட அந்த நாய் வேரிடத்தில் சேட்டை புரிய சென்று விட்டது.
இதைப் போலவே, நம்முடைய வாழ்விலும், “என்னிடம் ஓடி வா!” என தேவன் நம்மை அழைக்கும் நேரங்கள் உண்டு. நம்மைத் தொந்தரவு செய்யும் ஒன்று நம்மை பின்தொடர்ந்து வருகிறது. அதைவிட்டு அதி வேகமாக, மிகத் தூரமாக செல்ல அது நம்மை மிக நெருக்கமாகப் பின் தொடர்ந்து வருகிறது. நம்மால் அப்பிரச்சனையை உதறித் தள்ளவும் முடிவதில்லை, திரும்பிப்பார்த்து அதை நாமாக எதிர்கொள்ளும் தைரியமும் இருப்பதில்லை. ஆனால் உண்மை என்னவெனில் நாம் தனியாக இல்லை. நமக்கு உதவவும், நம்மை ஆறுதல்படுத்தவும், தேவன் நம்மோடிருக்கிறார். நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நம்மைப் பயமுறுத்தும் காரியத்தை விட்டுத் திரும்பி அவரண்டைச் செல்ல வேண்டும். “கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்” (நீதி. 18:10) என வேதம் சொல்லுகிறது.
ஆபத்து காலத்தில் தேவனே நமது அடைக்கலம்.