“உனக்கு விசுவாசம் தேவை” என மனுஷர்கள் சொல்லுவார்கள். ஆனால், அதன் அர்த்தம் என்ன? எந்த விசுவாசமானாலும் அது நல்ல விசுவாசமா?

“உன்னிலும், உன்னிலிருக்கிற அனைத்தின் மேலும் விசுவாசம் வை” என ஒரு நூற்றாண்டு முன்பு சிந்தனையாளர் ஒருவர் எழுதினார். “எப்பேர்பட்ட தடையைக் காட்டிலும் மகத்தான ஒன்று உனக்குள் இருக்கிறது என்பதை அறிந்துக்கொள்.” இது கேட்க நன்றாக இருந்தாலும், நடைமுறை வாழ்வை எதிர்கொண்டு மோதும் பொழுது, இக்கூற்று சுக்குநூறாகிவிடும்.

தேவன் ஆபிரகாமைப் பார்த்து உன் சந்ததியார் எண்ணற்றவர்களாயிருப்பார்கள் என வாக்குத்தத்தம் பண்ணினார் (ஆதி. 15:4-5). ஆனால், அவனுக்கு முன்பாக ஒரு பெரிய தடை இருந்தது. அதாவது அவன் பிள்ளையில்லாதவனும் வயது முதிர்ந்தவனுமாயிருந்தான். தேவன் செய்த வாக்குதத்தத்தை அவர் நிறைவேற்றும் வரை காத்திருக்க பொறுமை இழந்து, அந்த தடையை தாங்களாகவே மேற்கொள்ள முயற்சித்தார்கள். இதன் விளைவாக அவர்கள் குடும்பத்தில் உடைந்து தேவையில்லாத மனஸ்தாபங்கள் ஏற்பட்டது (ஆதி. 16 மற்றும் 21:8-21).

ஆபிரகாம் தன் சுயபெலத்தினால் செய்த ஒன்றும் நன்மை பயக்கவில்லை. ஆனால் முடிவிலே மகத்தான விசுவாசத்தையுடைய மனுஷனாக அறியப்பட்டான். “உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோட விசுவாசித்தான்” (ரோம. 4:18) என பவுல் அவரைக்குறித்து எழுதியுள்ளார். மேலும் பவுல், “இந்த விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது” (வச. 22) எனக் கூறுகிறார்.

தன்னைக்காட்டிலும் மிகப்பெரிய ஒன்றான மெய்த்தேவனின் மேல் ஆபிரகாமின் விசுவாசம் இருந்தது. நாம் எதன் மேல் நம் விசுவாசத்தை வைக்கிறோமோ அதைப்பொறுத்தே விளைவும் இருக்கும்.