தொடர் ஒட்டங்களை காண எனக்குப் பிடிக்கும். அந்த விளையாட்டு ஓட்ட வீரர்களுக்கு தேவையான உடல் வலிமை, வேகம், திறன், சகிப்புத்தன்மை இவற்றை எண்ணும்பொழுது வியப்பாயிருக்கிறது. ஆனால், அவ்வோட்டத்தின் ஒரு மிக முக்கியமான தருணம் என்னுடைய விசேஷித்த கவனத்தை மட்டுமல்லாமல் கவலையையும் சேர்த்து ஆவல் கொள்ளச் செய்யும். அது, அக்கோல் அடுத்த வீரரிடம் கைமாறும் தருணமே. ஒரு நொடி தாமதமானாலோ, அல்லது கை நழுவி விழுந்தாலோ அந்த ஒட்டத்தில் தோற்றுப் போகலாம்.

ஒரு வகையில் பார்த்தால், கிறிஸ்தவர்களும், விசுவாசம் மற்றும் தேவனையும், அவருடைய வார்த்தையையும் அறிகிற அறிவாகிய கோலை எடுத்துக்கொண்டு, தொடர் ஒட்டத்தில் ஓடுகிறவர்கள் போலவே உள்ளனர். இக்கோலை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்தத் தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய அவசியத்தை வேதாகமம் நமக்கு கூறுகிறது. சங்:78ல், ஆசாப் “என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன். அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள். பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல்,  கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்” (வச. 2-4) என அறிவிக்கிறார்.

இதைப்போலவே மோசேவும் இஸ்ரவேலர்களை நோக்கி, “உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் சாக்கிரதையாய்க் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய்” (உபா. 4:10) என்று கூறுகிறார்.

வருகிற தலைமுறைகளுக்கு, அன்போடும், தைரியத்தோடும் எப்படியாகிலும், “உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு (1 பேது. 2:9), நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.