நியூயார்க் (New York) நகரில், வாசனை திரவியப் பொருட்கள் செய்யும் ஒரு பெண், சில வாசனை திரவியங்களின் கலவைகளை அடையாளம் கண்டு, அந்நறுமணத்தின் தயாரிப்பாளரை தன்னால் யூகிக்க முடியும் எனக் கூறினார். ஒரே ஒரு தரம் வாசனையை முகர்ந்து பார்த்தே அவளால், “இது ஜென்னியின் கைவண்ணம்” என்று கூற முடியும்.
அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து பட்டணத்திலுள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதும் பொழுது, ஒரு முறை தாங்கள் கைப்பற்றிய பட்டணத்தில், தூபம் காட்டும் வெற்றிச்சிறந்த ரோமப் படையை உதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார் (2 கொரி. 2:14). படைத் தலைவர் முன்னே செல்ல, அவரைப் பின் தொடர்ந்து படைவீரர்களும், பிறகு தோல்வியுற்ற சேனைகளும் வரும். அந்த ரோமர்களுக்கு தூபத்தின் நறுமணம் வெற்றியைக் குறிக்கும், எதிரியான கைதிகளுக்கோ அது மரணத்தை குறிக்கும்.
நாம், தேவனுக்கு, பாவத்தை வென்ற கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம் என பவுல் கூறுகிறார். கிறிஸ்துவின் சுகந்த வாசனையை தேவன் நமக்களித்ததால், நற்கந்தம் வீசும் துதி பலிகளை ஏறெடுப்பவர்களாகவுள்ளோம். ஆனால், நாம் எப்படி வாழ்ந்தால், மற்றவர்களுக்கு நறுமணம் வீசுகிறவர்களாய் இருப்போம்? நாம் பெருந்தன்மையையும், அன்பையும் வெளிப்படுத்தலாம். மேலும் நற்செய்தியை பகிர்ந்து கொள்வதின் மூலம் இரட்சிப்பின் வழியை அவர்களுக்குக் காண்பிக்கலாம். ஆவியின் கனியாகிய அன்பு, சந்தோஷம் மற்றும் தயவை ஆவியானவர் நம்மில் வெளிப்படுத்தி காண்பிக்க இடங்கொடுக்கலாம் (கலா. 5:22–23).
பிறர் நம்மைக் கவனித்து, “இது இயேசுவின் கிரியை தானே?” என்று கூறுகிறார்களா? அவருடைய நற்கந்தம் நம்மூலம் பரவ அனுமதிக்கிறோமா? அவரைப் பற்றி மற்றவர்களிடத்தில் கூறுகிறோமா? இனி எங்கும் காணக்கூடாத தலைசிறந்த நற்கந்தம் அவரே.