ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.
நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். யோவான் 6:68-69

2016 ஆண்டு, வில்லியம் ஷேக்ஸ்பியருடைய (William Shakespeare) நானூறாவது நினைவு ஆண்டினை கூறும் வண்ணம் பிரிட்டனிலும் (Britain) மற்றும் உலகெங்கிலும் உள்ள நாடகக் கம்பெனிகள் பல சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தின. காலத்தால் அழிக்க முடியாத நாடகத் தொகுப்புகளை இயற்றிய அதிசிறந்த ஆங்கில நாடக ஆசிரியராக அவரைக் கருதிய மக்கள் அனைவரும் கச்சேரிகள், விரிவுரைகள் மற்றும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள திரண்டனர். ஷேக்ஸ்பியரின் சமகாலத்தவரான பென் ஜான்சன் (Ben Jonson) அவரைக் குறித்து, “அவர் ஒரு காலத்திற்குரியவர் அல்ல,  ஆனால் எக்காலத்திற்கும் உரியவர்” என எழுதியுள்ளார்.

சில கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களுடைய தாக்கம் பல தலைமுறைகளுக்கு இருந்தாலும், இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்வும், கிரியையும் மாத்திரமே காலங்களைக் கடந்து நிலைத்து நிற்கும். அவர் தன்னைக் குறித்து, “வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே… இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான்”
எனறார் (வச. 58).

இயேசுவினுடைய சத்தியத்தை கேட்ட அநேகர் அவருடைய வார்த்தைகளினால் இடறலடைந்து அவரைப் பின்பற்றாமல் பின் வாங்கிப் போனார்கள் (யோவா. 6: 61-66). அப்பொழுது இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி ‘’நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ” என்று கேட்டதற்கு (வச. 67), பேதுரு, “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்’’ என்றான் (யோவா. 6:68-69).

நாம் இயேசு கிறிஸ்துவை,  நம் வாழ்வின் ஆண்டவராய் இரட்சகராக இருக்க அழைக்கும் பொழுது,  அவருடைய ஆதி சீஷர்களுடனும்,  பிறகு அவரை பின் தொடர்ந்த மற்றவர்களுடனும் சேர்ந்து,  காலத்தை கடந்த புதிய வாழ்விற்குள் கடந்து செல்வோம்.