எனக்கு ஒரு நிலத்தடி நீர்த்தொட்டி தேவையாயிருந்தது. அதை எப்படி கட்ட வேண்டும் என்பதை துல்லியமாக முடிவு செய்தபடியால் தெளிவான வழிமுறைகளைக் கட்டுமான பணியாளரிடம் தெரிவித்தேன். ஆனால், அதற்கடுத்த நாள், அப்பணியை மேற்பார்வையிட்ட பொழுது, நான் கூறிய வழிமுறைகளை அந்த கட்டுமான பணியாளர் பின்பற்றாததைக் கண்டு கோபமடைந்தேன். நான் கூறிய திட்டத்தை அவன் மாற்றியதால் நான் எதிர்பார்த்த விளைவும் இல்லை. மேலும், என்னுடைய கட்டளைகளை பின்பற்றாததற்கு அவன் கூறிய காரணங்கள் என்னை எரிச்சலூட்டியது.
பின்பு அக்கட்டுமானர் அப்பணியை மாற்றி அமைத்து கொண்டிருந்ததை கவனித்துக் கொண்டிருக்கையில், என்னுடைய எரிச்சல் குறைந்து, ஒரு குற்ற உணர்வு என்னை ஆட்கொண்டது. தேவனுக்கு கீழ்ப்படியும் பொருட்டு என் வாழ்வில் அநேக காரியங்களை மறுபடியும் சரிசெய்ய வேண்டியிருந்தது.
தேவன் கூறிய காரியங்களை அநேகந்தரம் செய்ய தவறிய அன்றைய இஸ்ரவேலர்கள் போலவே, நாமும் அநேகந்தரம் நம்முடைய வழிகளையே பின்பற்றுகிறோம். ஆயினும் தேவன், அவரோடுள்ள ஆழமான உறவின் அடையாளமாக கீழ்ப்படிதலையே விரும்புகிறார். மோசே ஜனங்களைப் பார்த்து, “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்தபடியே செய்யச் சாவதானமாயிருங்கள்… கர்த்தர் உங்களுக்கு விதித்த வழிகளெல்லாவற்றிலும் நடக்கக்கடவீர்கள் (உபா. 5:32-33). மோசேக்கு நெடுங்காலத்திற்கு பிறகு, இயேசு தம்முடைய சீஷர்களை பார்த்து தன் மேல் விசுவாசம் வைக்குமாறும், ஒருவரை ஒருவர் அன்புக் கூருமாறும் உற்சாகப்படுத்தினார்.
இன்றும் நம்முடைய இருதயத்தின் அர்ப்பணிப்பே நம்முடைய நல் வாழ்வுக்கு வழிவகுக்கிறது. நம்முடைய கீழ்ப்படிதலில் நமக்கு உதவிடும் ஆவியானவர், “தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்
(பிலி. 2:13), என்பதை நினைவு கூருவது நலமாயிருக்கும்.