சிறுபிள்ளைகளுக்கான பிரசங்கத்தைக் கேட்கும்படி கூடியிருந்த சிறுபிள்ளைகளைப் பார்த்து,  எங்கள் சிறுவர்களுக்கான போதகர்,  “இன்று நாம் ஒன்றைப் போல நடிக்கும் விளையாட்டை விளையாடப் போகிறோம். நான் ஏதாவது ஒன்றின் பெயரைக் கூறுவேன்,  உடனே நீங்கள் அதன் செயலைச் செய்து காட்ட வேண்டும். தயாரா? கோழிக்குஞ்சு” என்று கூறினார். உடனே அக்குழந்தைகள் தங்கள் கைகளை சிறகு போல சிறகடித்து,  கோழிக்குஞ்சு போல கீச் கீச்சென்று கத்தினார்கள். அடுத்ததாக யானை,  பின்பு கால் பந்து வீரர்,  அதனை தொடர்ந்து நடன மங்கை (ballerina), கடைசியாக இயேசு என்றார் . அநேகர் என்ன செய்வது எனத் தயங்கினபொழுது,  ஒரு ஆறு வயது சிறுவன்,  தன் முகத்தில் பெறிய புன்முறுவலுடன் உடனடியாக தன்னுடைய கரங்களை வரவேற்கும் விதமாக அகல விரித்து காண்பித்தான். சபையார் அனைவரும் பாராட்டினர்.

இயேசுவைப் போல இருப்பதே நம்முடைய அழைப்பு என்பதை எவ்வளவு எளிதாய் நம்முடைய அன்றாட வாழ்வில் மறந்து விடுகிறோம். “ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள் (எபே. 5:1-2).

கடினமான சூழ்நிலையிலும் தங்கள் விசுவாசத்தை வெளியரங்கமாக செயல் படுத்தின தெசலோனிக்க கிறிஸ்தவர்களையும் பவுல் இவ்வண்ணமாக பாராட்டுகிறார். “எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி, இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள்” (1 தெச. 1:6,   7).

இந்த உலகத்தில் நாமும் கிறிஸ்துவைப் போல தேவனின் அன்பாகிய நற்செய்தியை பறைசாற்றவும்,  அகல விரித்த கரங்களிளால் அனைவரையும் வரவேற்கவும்,  நமக்குள் இருக்கும் கிறிஸ்துவின் ஜீவனே நம்மை ஊக்கப்படுத்தி பெலப்படுத்துகிறது.