மடகாஸ்கரின் தேசிய சாலை எண் 5ல் செல்லும்பொழுது, அழகிய வெண்மணல் பரப்பிய கடற்கரை, தென்னந்தோப்புகள், இந்து மகாசமுத்திரம் என்ற பல அழகிய காட்சிகளைக் காணலாம். 125 மைல் நீளமுள்ள அந்த இருவழிச் சாலை பாறைகள், மணல், களிமண்ணால் நிறைந்து காணப்படும். உலகிலுள்ள மோசமான சாலைகளில் ஒன்றாக இந்த சாலையும் பெயர் பெற்றுள்ளது. பேரழுகு வாய்ந்த காட்சிகளைக் காண இந்த சாலை வழியாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் நான்கு சக்கரங்களையும் தனித்தனியே இயக்கக் கூடிய சக்தி வாய்ந்த (Four Wheel Driver) வாகனத்தில் தான் செல்ல வேண்டும். அதை அனுபவமிக்க ஓட்டுநர்தான் இயக்க வேண்டும். வாகனத்தை பழுதுபார்க்கும் நபர் ஒருவரும் கூடச்செல்ல வேண்டும்.

கரடுமுரடான பாதைகளிலும், வனாந்தரத்திலும் பயணம் பண்ணும் மக்களுக்கு மேசியாவின் வருகையைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க யோவான் ஸ்நானகன் வந்தார். அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏசாயா தீர்க்கதரிசி எழுதின “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள்” (லூக். 3:4–5; ஏசா. 40:3) என்ற வார்த்தைகளை மறுபடியும் மறுபடியும் கூறினார்.

எருசலேமிலுள்ள மக்கள் நீண்ட காலம் காத்திருந்த மேசியாவின் வருகைக்கு ஆயத்தமாக வேண்டுமென்றால் அவர்களுடைய இருதயங்களில் மாற்றம் ஏற்படவேண்டுமென்று யோவான் அறிந்திருந்தார். மதத்தைக் குறித்த மலையளவு பெருமை தாழ்த்தப்பட வேண்டும். உடைந்துபோன வாழ்க்கையினால் நம்பிக்கையற்ற பள்ளங்களில் வாழ்பவர்களுடைய வாழ்க்கை உயர்த்தப்பட வேண்டும்.

மேற்கூறிய இரண்டும், மனித முயற்சியினால் மட்டும் செய்யப்படக் கூடியதல்ல. தேவ ஆவியானவருக்கு செவி சாய்க்க மறுத்து, யோவான் கொடுத்த மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தை ஏற்றுக்கொண்டவர்கள், மேசியா வந்தபொழுது அவரை அடையாளம் கண்டுகொள்ள அவர்களால் இயலவில்லை (லூக். 7:25–30). ஆயினும் எவர்கள் தங்களுக்கு மனமாற்றம் தேவை என்று உணர்ந்தார்களோ அவர்கள் இயேசுவின் மூலமாக தேவனின் சிறந்த தன்மையையும், அவரது அதிசய தன்மையையும் கண்டுகொண்டார்கள்.