அமெரிக்க ஐக்கிய நாட்டின் 26வது ஜனாதிபதியாக தியோடர் ரூஸ்வெல்ட் (1901–1909) ஆவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, அவரது மூத்தமகன் தியோடர் ஜுனியருக்கு உடல்நலமில்லை என்பதைக் கேள்விப்பட்டார். அவரது மகனுடைய நோய் சுகம் அடையக்கூடியதாக இருந்தாலும், டெட்டின் சுகவீனத்திற்காக கூறப்பட்ட காரணம் ரூஸ்வெல்ட்டை மிக அதிகம் பாதித்தது. அவரது மகனின் நோய்க்கு அவர்தான் காரணம் என்று மருத்துவர்கள் கூறினார்கள். ரூஸ்வெல்ட் அவரது பெலவீனமான குழந்தைப் பருவத்தில் “சண்டை” வீரனாக வேண்டும் என்ற எண்ணம் அவரது வாழ்க்கையில் செயல்படாததால், அவரது மகன் சிறந்த சண்டை வீரனாக வேண்டுமென்று கடுமையான அழுத்தத்தைக் கொடுத்ததினால் டெட் நரம்புத் தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டான். இந்தக் காரணத்தை கேட்டவுடன், தகப்பனாகிய ரூஸ்வெல்ட் தன் தவறை உணர்ந்து, “டெட்டிற்கு இனிமேல் உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ எந்த அழுத்தத்தையும் ஒருபொழுதும் கொடுக்க மாட்டேன்” என்ற தீர்மானத்தை எடுத்தார்.

தகப்பனார் அவருடைய தீர்மானத்தின்படியே உண்மையாகவே செயல்பட்டார். அப்பொழுதிலிருந்து அவரது மகனை அன்புடன் நடத்துவதில் கவனம் செலுத்தினார். அந்த மகன்தான் பின்னால் ஒருநாள் நேச நாடுகளின் படைவீரர்கள் இரண்டாம் உலகப்போரில் உட்டா பீச்சில் இறங்குவதற்கு தைரியமாக வழிநடத்தி இருந்தார்.

மற்றவர்களுடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தத்தக்கதாக தேவன் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பை கொடுத்துள்ளார். நம்முடைய வாழ்க்கைத் துணை, குழந்தைகள் இவர்களுடன் கூடிய உறவுகளில் மட்டுமல்லாமல், சிநேகிதர்கள், உடன் பணியாட்கள், மேலும் வாடிக்கையாளர்கள் இவர்களுடன் கூட உள்ள உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் பெரிய பொறுப்பு நமக்குள்ளது. கடினமான அழுத்தத்திற்கு உட்படுத்துதல், அளவிற்கு அதிகமாக எதிர்பார்த்தல், முன்னேற வேண்டும் என்று கட்டாயப்படுத்துதல், வெற்றி அடைவதற்கான இரகசிய தூண்டுதல் போன்றவை நம்மை அறியாமலேயே பிறருக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. இந்தக் காரணத்திற்காகவே கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாகிய நாம் ஒருவரோடொருவர் சாந்தத்தோடும், பொறுமையோடும் இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறோம் (கொலோ. 3:12). தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து மிகவும் தாழ்மையாக இவ்வுலகில் வந்திருக்க, ஒருவருடன் ஒருவர் அன்புடன் பழகுவதை நாம் எவ்வாறு தவிர்க்க இயலும்?