கிறிஸ்டோபர் ரெட் எழுதிய ‘நான் புரிந்து கொள்ள இயலாத கடவுள்’ என்ற புத்தகத்தில், எதிர்பாராத நபர்தான் முதல்முதலாக தேவனுக்கு பெயர் சூட்டியுள்ளார். அதுதான் ஆகார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆகாரின் கதை மனித வரலாற்றைப் பற்றி மிக உண்மையான பார்வையைத் தருகிறது. தேவன், ஆபிராம், சாராயிடம் அவர்களுக்கு ஒரு குமாரன் பிறப்பான் என்று சொல்லி ஆண்டுகள் பல கடந்து விட்டன. சாராய் வயது முதிர்ந்தவளாகி பொறுமையை இழந்து விட்டாள். தேவனுக்கு “உதவி செய்யத்தக்கதாக”, அக்காலத்து வழக்கத்தின்படி மோசமான ஒரு காரியத்தைச் செய்தாள். அவளது அடிமைப் பெண்ணாகிய ஆகாரை அவளது கணவனுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள். ஆகார் கர்ப்பம் தரித்தாள்.
எதிர்பார்த்தபடி சாராய்க்கும் ஆகாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால், ஆகார் ஓடிப்போனாள். வனாந்திரத்தில் தனிமையாக இருந்தபொழுது, கர்த்தருடைய தூதனை சந்தித்தாள். அவர், ஆபிராமிடம் இதற்கு முன்பாக தேவன் அருளிய வாக்குத்தத்தைப் போன்றதொரு வாக்குத்தத்தை அவளுக்கு அருளினார் (ஆதி. 15:5). “உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும்” (ஆதி. 16:10). “தேவன் என் அங்கலாய்ப்பைக் கேட்டார்” என்று அர்த்தமுடைய இஸ்மவேல் என்ற பெயரை ஆகாரின் மகனுக்கு தேவதூதன் சூட்டினார் (வச.11). இதற்கு மாறுத்தரமாக கண்களிருந்தும் காணாத, காதுகளிருந்தும் கேட்காத பல கடவுள்களை வணங்கும் சமுதாயத்திலிருந்து வந்த ஆகார் என்ற அடிமைப்பெண், தேவனுக்கு “நீர் என்னை காண்கிற தேவன்” என்று பேரிட்டாள் (வச.13).
“நம்மை காண்கிற தேவன்”, பொறுமையற்ற பல தலைவர்களுக்கும், மேலும் பெலனற்று ஓடிப்போனவர்களுக்கும் தேவனாக இருக்கிறார். அவர் ஐசுவரியவான்களுக்கும், நல்ல உறவுகளை உடையவர்களுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும், தனிமையானவர்களுக்கும் தேவனாக இருக்கிறார். நம் ஒவ்வொருவரைக் குறித்தும், நம்முடைய தேவைகளை ஆழமாக உணர்ந்தவராக கரிசனையோடு நமது வேண்டுதல்களுக்கு செவிகொடுத்து நம்மை கண்கானிக்கிறார்.