ஒரு சிறிய நகரத்தில் ஒரு உணவு விடுதியில் நான் தங்கி இருந்தபொழுது, சாலைக்கு மறுபக்கம் இருந்த ஓர் ஆலயத்தில் ஆராதனை நடந்ததைக் கவனித்தேன். சிறியோர், பெரியோர் என அதிக மக்கள் ஆலயத்தின் பக்கவாட்டிலுள்ள இடத்தில் நிற்கத்தக்கதாக ஆலயம் மக்களால் நிரம்பி வழிந்தது. வந்துகொண்டிருந்த ஒரு சவ வாகனத்தை நான் பார்த்தபொழுது, அது ஓர் அடக்க ஆராதனை என்பதை அறிந்தேன். ஆலயத்திலிருந்த கூட்ட நெரிசலை நான் பார்த்தபொழுது, அது அந்த ஊரிலிருந்த ஒரு முக்கியமான நபரின் அடக்க ஆராதனையாக இருக்கலாமென்று நினைத்தேன். ஒருவேளை அவர் ஒரு பெரிய பணக்காரத் தொழில் அதிபராகவோ அல்லது புகழ்பெற்ற மனிதராகவோ இருக்கலாம். யாருடைய அடக்க ஆராதனை என்று அறிந்துகொள்ள ஆவலுடன் உணவு விடுதியின் அலுவலரிடம், “ஒரு அடக்க ஆராதனைக்கு இவ்வளவு பெரிய கூட்டம் வந்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஊரிலுள்ள புகழ்பெற்ற ஒரு மனிதருக்கான அடக்க ஆராதனையாக இருக்கலாமா” என்று கூறினேன். “இல்லை, அவர் பணக்காரனுமல்ல, புகழ்பெற்றவருமல்ல. ஆனால், அவர் ஒரு நல்ல மனிதர்” என்று அவர் பதில் கூறினார்.

“திரளான ஐசுவரியத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்துகொள்ளப்படத்தக்கது” (நீதி. 22:1) என்ற நீதிமொழிகளின் ஞானத்தை எனக்கு நினைப்பூட்டின. நாம் நமது குடும்பம், சிநேகிதர்கள், அயலகத்தாருக்கு எப்படிப்பட்ட சொத்தை நமக்குப்பின் விட்டுச்செல்லவிருக்கிறோம் என்பதைக் குறித்து சிந்திப்பது சிறந்த காரியமாகும். தேவனுடைய பார்வையில் நம்முடைய கல்வித்தகுதியோ அல்லது நமது வாழ்நாளில் சேர்த்து வைத்த ஐசுவரியமோ முக்கியமல்ல. ஆனால் நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தோம் என்பதே முக்கியமாகும்.

எனது சிநேகிதன் ஒருவர் மரித்தபொழுது, அவரது மகள், “இந்த உலகம் ஒரு நீதிமானை இழந்துவிட்டது. அது இந்த உலகில் சாதாரண காரியமல்ல” என்று எழுதினாள். தேவனுடைய மகிமைக்காக நாம் அப்படிப்பட்ட சொத்தை நம்முடைய வாழ்க்கைக்குப்பின் விட்டுச்செல்ல வேண்டுமென்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.