கோடை காலத்தில் ஒரு நாள் இரவு, என் தகப்பனாருடன் கூட, தரையில் விரிக்கப்பட்டிருந்த பாயில் படுத்திருந்தேன். அப்பொழுது எனக்கு நான்கு வயது. எனது தாயார் குழந்தையோடு ஒரு தனி அறையில் இருந்தார்கள். எப்பொழுதும் வெப்பமாக இருக்கும் வட கானாவில் இது நடந்தது. என் உடல் முழுவதும் வியர்த்து, என் தொண்டை தாகத்தால் மிகவும் வறண்டது. அதனால் என் தகப்பனாரை எழுப்பினேன். எனது தாகத்தைத் தீர்க்க என் தகப்பனார் அந்த நடு இரவில் எழுந்து ஒரு குவளையிலிருந்த தண்ணீரை எனக்கு ஊற்றிக் கொடுத்தார். அன்றிரவு செய்ததுபோல என்னுடைய வாழ்க்கை முழுவதும் கரிசனை உள்ள தகப்பனாருக்கு அவர் மாதிரியாக இருந்தார். எனக்குத் தேவையானவைகளை எனக்குக் கொடுத்தார்.

சிலருக்கு அவர்களுடைய வாழ்க்கையில் அன்பான, கரிசனையுள்ள தகப்பன் இல்லாமலிருக்கலாம். ஆனால், நம் அனைவருக்கும் வல்லமையுள்ள, எப்பொழுதும் நம்மோடு இருக்கக்கூடிய, நம்மை ஏமாற்றம் அடையச் செய்யாத ஒரு பிதா நமக்குண்டு, “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” (மத்தேயு 6:9) என்று ஜெபிக்க இயேசு நமக்கு கற்றுக்கொடுத்தார். உணவு, உடை, தங்குமிடம், பாதுகாவல் போன்ற அன்றாட தேவைகள் நமக்குத் தேவைப்படும்பொழுது (வச.31) – “உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்” (மத். 6:8) என்று இயேசு கூறினார்.

எப்பொழுதும் நம்மோடு இருக்கக்கூடிய பிதா நமக்கு இருக்கிறார். இரவோ, பகலோ, எப்பொழுதெல்லாம் நமது வாழ்க்கை கஷ்டமாக இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் அவர் நம்மை ஒருக்காலும் கைவிட மாட்டார் என்று அவரை நம்பலாம். அவர் நம்மை கரிசனையோடு கவனிப்பதாக வாக்குப் பண்ணியுள்ளார். நமக்குத் தேவை என்ன என்பதை நம்மைவிட அவர் நன்கு அறிந்திருக்கிறார்.