விசுவாசத்தை ஓர் மந்திர சூத்திரமாகக் கருதுவது ஓர் சோதனையாக இருக்கிறது. இதிலே நாம் வளர்ந்து பெருகினால் நாம் ஐசுவரியவான்களாகவும், ஆரோக்கியமுள்ளவர்களாகவும், எல்லா ஜெபத்திற்கும் பதில் பெற்றுக்கொண்டவர்களாய் திருப்திகரமான ஓர் வாழ்க்கை வாழுவோம். ஆனால், எப்பொழுதுமே வாழ்க்கை நேர்த்தியான ஓர் சூத்திரமாக அமையாது. அதற்கு சாட்சியாக எபிரெய நிரூபத்தின் ஆக்கியோன் எபிரெயர் 11ம் அதிகாரத்தில் அனைவரையும் உலுக்கும் வகையில் பழைய ஏற்பாட்டில் “உண்மை விசுவாசத்தை” வெளிப்படுத்தும் வகையில் விசுவாச வீரர்களின் பட்டியலைக் கொடுத்திருக்கிறார்.

“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்” என்று (எபி. 11:6)ல் ஆணித்தரமாகக் கூறியிருக்கிறார். வசனம் 27ல் விசுவாசத்தை “விடாமுயற்சி” அல்லது “உறுதி” என்ற வார்த்தையில் விவரிக்கிறார். விசுவாசத்தினாலே சில விசுவாச வீரர்கள் சோதனையில் வெற்றி பெற்றார்கள், இராஜ்ஜியங்களைச் ஜெயித்தார்கள், பட்டயத்திற்குத் தப்பினார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள். ஆனால் வேறு சிலருடைய முடிவு துக்ககரமாக இருந்தது. சிலர் வாரினால் அடிபட்டார்கள், கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள். இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சி பெற்றும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை அடையாமற் போனார்கள்” என்று இவ்வதிகாரம் முடிவடைகிறது (வச.39).

இவ்வாறு விசுவாசத்தை உருவகப்படுத்திப் பார்க்கும் பொழுது அது இலகுவான ஓர் செயலாகக் காணப்படவில்லை. சில சமயங்களில் அது ஜெயத்தையும், மாபெரும் வெற்றியையும் பெற வழி நடத்துகிறது. சில வேளைகளில் வாழ்க்கையில் “என்ன நேர்ந்தாலும்”  என்ற மன உறுதியுடன் நிலைத்திருப்பது அவசியமாகிறது. இப்படிப்பட்டவர்களைக் குறித்து வசனம் 16 கூறுகிறதாவது, “ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே”.

தேவனே நமது வாழ்க்கையை முற்றிலும் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறாரென்றும், அவர் தம் வாக்குத்தத்தங்களை இம்மையிலும் மறுமையிலும் நிச்சயமாக நிறைவேற்ற வல்லவர் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்வதுதான் விசுவாசம்.