என் தந்தை அடிக்கடி எனக்குக் கூறும் ஞானமுள்ள ஆலோசனைகளில் நான் மதித்து ஏற்றுக்கொள்ளும் ஆலோசனை, “ஜோ, நல்ல நண்பர்கள் வாழ்க்கையில் நாம் பெற்றுக்கொள்ளும் மாபெரும் பொக்கிஷங்களில் ஒன்று ஆகும்”. இது எவ்வளவு உண்மை! நல்ல நண்பர்கள் நமக்கிருக்கும் பொழுது நாம் ஒருபோதும் தனிமையாகவே இல்லை. அவர்கள் உங்கள் தேவைகள் என்ன என்பதில் கண்ணோக்கமாயிருப்பதுடன், உங்கள் சுக, துக்கங்களில் மிகவும் கரிசனையுடன் பங்கு கொள்வார்கள்.

இயேசு இவ்வுலகிற்கு வருவதற்கு முன் இரண்டு நபர்கள் மாத்திரம் தேவனின் சிநேகிதர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். “ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவது போல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்” (யாத். 33:11). அடுத்து ஆபிரகாம் “தேவனுடைய சிநேகிதனெனப்பட்டான்” (யாக். 2:23) (2 நாளா. 20:17; ஏசா. 41:8ஐ பார்க்கவும்).

இயேசு தமக்குச் சொந்தமானவர்களை சிநேகிதர்கள் என்று அழைப்பது எனக்கு மிகுந்த ஆச்சரியமாயிருக்கிறது. “நான் உங்களைச் சிநேகிதர் என்றேன். ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” (யோவா. 15:15). நமக்காகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கும் அளவிற்கு அவருடைய சிநேகம் மிக ஆழமானது. “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவா. 15:13).

இயேசுவை நம் சிநேகிதனாகக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய சிலாக்கியம், ஆசீர்வாதம்! இயேசு நம்மை விட்டு ஒருபோதும் விலகவும், கைவிடாதவருமான நண்பர். தேவனுடன் பரிந்து பேசுகிறவராய் நம் தேவைகள் எல்லாம் சந்திக்கிறார். அவர் நம் பாவங்களையெல்லாம் மன்னிக்கிறார், நம் கவலைகளையெல்லாம் அறிகிறார், கஷ்டமான வேளைகளில் போதுமான கிருபையை நமக்களிக்கிறார். ஆம், அவர் நமது சிறந்த நண்பர்!