என் தோள்பட்டையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்குப்பின் பல வாரங்களாகியும் தைரியமற்ற நிலையில் பயந்து கொண்டே இருந்தேன். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கையைத் தாங்கிப் பிடிக்கும் தூக்கை (ஸ்லிங்) நான் உபயோகித்ததால் அது எனக்கு மிகவும் வசதியாக இருந்தது. ஆனால் அறுவை சிகிச்சை வைத்தியரும், கைக்கு பயிற்சி கொடுக்கும் வைத்தியரும் ஸ்லிங்கை நான் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ஆலோசனை கூறினர். “காயம் குணமடைந்து வரும் நிலையில் ஸ்லிங் உபயோகிப்பது சுகமடைய உதவாது. அது உங்கள் பலவீனத்தை வெளிக்காட்டவே உதவும்.” என்று அவர்கள் தந்த குறிப்பில் எழுதப்பட்டிருந்தது.

என்னைப் பார்க்க வரும் ஒருவர் ஒருவேளை ஆவலுடன் என்னைச் சேர்த்தணைத்து கட்டிப்பிடித்து விட்டாலோ, அல்லது எதிர்பாராமல் ஒருவர் என்மீது மோதிவிட்டாலோ;
ஆ, என்ன நடக்கும்! நான் காயமடைந்து விடுவேன் என்ற பயத்தில் அந்த அற்பமான நீல நிற ஸ்லிங்கிற்குள் கையை மறைத்துக் கொண்டிருந்தேன்.

இவ்வாறு நாம் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருக்கிறோம் என்ற காரணமற்ற பயத்தை நமக்குள் அனுமதிக்கிறோம். நாம் இருக்கும் நிலையில் பிறர் நம்மை ஏற்றுக்கொண்டு நேசிக்க வேண்டுமென்று விரும்புகிறோம். ஆனால் உண்மையில் நாம் யார் என்று பிறர் அறிந்து கொண்டால் அவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற பயம். அது நம்மை புண்படுத்தும். நாம் புத்திசாலித்தனமானவர்கள் அல்ல….. அன்புள்ளவர்கள் அல்ல….. உண்மையுள்ளவர்கள் அல்ல என்றும் பிறர் அறிந்து கொண்டால் என்ன நேரிடும்?

ஆனால் தேவனின் குடும்பத்தில், அங்கத்தினர்களாகிய நாம் விசுவாசத்தில் வளர ஒருவருக்கொருவர் உதவி செய்யும் பொறுப்பு நமக்கு உண்டு. “ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்” (1 தெச. 5:11). நீடிய பொறுமையும் உடையவர்களாய் அன்பினால் ஒருவரை ஒருவர் தாங்குங்கள் (எபே. 4:2) என்று நமக்கு ஆலோசனை கூறுகிறது.

பிற விசுவாசிகளோடு எப்பொழுதும் நேர்மையாக இருக்க முயற்சிக்கும் பொழுது நமது உறவுகள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படுகிறது. இந்நிலையில் ஒருவரோடு ஒருவருக்குள்ள பிரச்சனைகளோடு போராடும் சோதனையில் அகப்படுகிறோம். அல்லது எப்படி கீழ்ப்படிந்து வாழவேண்டும் என்று கற்றுக்கொள்கிறோம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக நம் வாழ்வில் நாம் பெற்றுக்கொண்ட கிருபை வரங்களைப் பிறருடன் பகிர்ந்து கொண்டு வாழ்வோம்.