எங்களுக்கு அருமையான சிநேகிதி சின்டிக்குப் புற்றுநோய் என்று அறிந்த போது எங்கள் மனம் மிகவும் சோர்வடைந்தது. சின்டி மிகவும் துடிப்புடன் செயல்படுபவள். அவளுடன் தொடர்பு கொண்ட அனைவரின் வாழ்க்கையும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவே இருந்தது. அவள் வியாதி குறைந்துவிட்டதை அறிந்து நானும், என் மனைவியும் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் சில மாதங்களில் அந்த நோய் அவளை அதிகமாய்த் தாக்கியது. அவள் மிகக்குறைந்த வயதிலேயே மரிக்கப்போவதாகவே எங்களுக்குத் தோன்றியது. அவள் வாழ்க்கையின் கடைசி நிமிடங்களைப்பற்றி அவள் கணவன் என்னிடம் பகிர்ந்து கொண்டார். மிகவும் பெலவீனமாக, நடக்க முடியாத நிலையில் இருந்தபொழுது “என்னோடு இருங்கள் அது போதும்” என்று சின்டி மெல்லிய குரலில் கூறினாளாம். அந்த இருண்ட வேளையில் எல்லாவற்றிற்கும் மேலாக கணவனின் அன்பின் பிரசன்னத்தை விரும்பினாள்.

எபிரெய நிருபத்தை ஆக்கியோன் அதை வாசிப்பவர்களுக்கு ஆறுதலாக உபாகமம் 31:6ஐ மேற்கோள் காட்டுகிறார். “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்று தேவன் தம் மக்களுக்குக் கூறுகிறார் (எபி. 13:5). நம் வாழ்க்கையின் இருண்ட சமயங்களில், அவருடைய அன்பின் பிரசன்னம் நம்மோடு இருக்கிறது என்ற நம்பிக்கை நாம் தனிமையாக இல்லை என்ற மன உறுதியை நமக்களிக்கிறது. நாம் தாங்கிக் கொள்வதற்கான கிருபையையும், அவர் நமக்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்ற ஞானத்தையும், கிறிஸ்து நமது பெலவீனங்களைக் குறித்து நமக்காகப் பரிதபிக்கிறார் என்ற நிச்சயத்தையும் கொடுக்கிறார் (எபி. 4:15).

“கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபி. 13:6) என்று நாம் தைரியமாய் அறிக்கை செய்து அவரின் அன்பின் பிரசன்னத்தை நாம் அனைவரும் அரவணைத்துக் கொள்ளுவோம்.