நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுது, கர்த்தருடைய ஜெபத்தை மனப்பாடமாக சொல்லக் கற்றுக்கொண்டேன். “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” (மத். 6:11) என்ற வரியைக் கூறும்பொழுது, எங்களுடைய வீட்டில் என்றைக்கோ ஒரு நாள் தான் கிடைக்கக்கூடிய ரொட்டியை என்னால் நினைவு கூராமல் இருக்க இயலவில்லை. எங்களது தகப்பனார் நகரத்திற்கு சென்று திரும்பும் பொழுது மட்டும்தான் எங்களுக்கு ரொட்டி கிடைக்கும். ஆகவே அனுதினமும் எங்களுக்கு ரொட்டி வேண்டும் என்று தேவனிடம் கேட்பது மிகவும் அர்த்தமுள்ள ஜெபமாக எனக்கு இருந்தது.
சில ஆண்டுகள் கழித்து நமது அனுதின மன்னா என்ற புத்தகத்தை நான் கண்டபொழுது, அதைப்பற்றி அறிந்துகொள்ள மிகவும் ஆர்வமுள்ளவனாக இருந்தேன். கர்த்தருடைய ஜெபத்திலிருந்துதான் அந்த புத்தகத்தின் தலைப்பு வந்தது என்று அறிவேன். அத்தோடுகூட ரொட்டிக் கடையிலிருந்து கிடைக்கும் ரொட்டியைப்பற்றி அது கூறவில்லை என்பதையும் அறிந்திருந்தேன். அந்த சிறிய புத்தகத்தை நான் ஒழுங்காக வாசிக்க ஆரம்பித்தபொழுது, அன்றாட அப்பம் என்பது வேதபகுதிகளையும், பயனுள்ள குறிப்புகளையும் உடைய ஆத்துமாவிற்குரிய உணவாக இருந்தது.
மரியாள் இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவருடைய வார்த்தைகளைக் கவனமாகக் கேட்டபொழுது அவள், அவளுடைய ஆத்துமாவிற்கு தேவையான ஆன்மீக உணவை உட்கொள்ளுவதை தேர்ந்தெடுத்தாள். (லூக்கா 10:39) மார்த்தாளோ சரீரப்பிரகாரமான உணவை தயாரிப்பதில் கவனம் செலுத்தி களைப்படைந்த பொழுது, மரியாள் அவர்களது வீட்டிற்கு வந்த விருந்தாளியான இயேசுவின் பாதத்தண்டையில் அமர்ந்து அவருடைய வார்த்தைகளைக் கேட்டாள். அதுபோல நாமும் அவருடைய வார்த்தைகளைக் கவனிப்பதற்கு நேரத்தை செலவழிப்போம். அவர் ஜீவ அப்பம் (யோவா. 6:35), நம்முடைய ஆத்துமாவை ஆவிக்கேற்ற ஆகாரத்தால் நிரப்புகிறார். நம்மைத் திருப்திபடுத்தும் அப்பம் அவரே!