பழைய ஏற்பாட்டில் நடந்த இறுதிக்கட்ட வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த நிகழ்ச்சியாகிய இஸ்ரவேல் மக்கள் தங்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பி மறுபடியுமாக எருசலேமில் வந்து குடியேறிய நிகழ்ச்சியை எஸ்றா, நெகேமியா புத்தகங்களில் வாசிக்கிறோம். தாவீதின் நகரம் மீண்டும் எபிரேயக் குடும்பங்களால் ஜனத்தொகை பெருகியது, தேவாலயம் கட்டப்பட்டது, சுவர்கள் பழுதுபார்க்கப்பட்டு கட்டப்பட்டது.
பின் மல்கியா தீர்க்கதரிசி மூலம் சில காரியங்களைத் தெரிந்து கொள்கிறோம். நெகேமியாவுடன் ஒரேகாலத்தில் வாழ்ந்த மல்கியா பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்ட பகுதிகளை மக்களுக்கு கொண்டுவருகிறார். அதில் முதலாவதாக இஸ்ரவேல் மக்களுக்குக் கூறியது என்னவென்றால் “நான் உங்களை சிநேகித்தேன் என்று கர்த்தர் சொல்கிறார்” என்பதே. அதற்கு அவர்கள் கூறிய பதில் என்னவென்றால், “எங்களை எப்படி சிநேகித்தீர்கள்?” என்பதாகும் (மல்கியா 1:2).
இது அதிசயிக்கத்தக்க ஒன்றல்லவா? அவர்களின் வரலாறு முழுவதிலும் தேவனுடைய உண்மைத்தன்மை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், பல நூறு ஆண்டுகளாக தேவன் தாம் தெரிந்து கொண்ட ஜனங்களுக்கு தொடர்ச்சியாக (பல அற்புதமான வரிகளில்), அவர்களின் அன்றாடத் தேவைகளை சந்தித்து வந்திருக்க, அவர் எவ்விதத்தில் தம்முடைய அன்பை நமக்குக் காண்பித்தார் என்று ஆச்சரியப்பட்டார்கள். தொடர்ந்து அந்த அதிகாரத்தில் மல்கியா அவர்களுடைய நன்றியற்ற செயலை உணர்த்துவதை நாம் வாசிக்கிறோம் (மல்கியா 1:6-8). அவர்களைப் போஷித்தும் அவர்களின் கீழ்ப்படியாமையையும், தேவன் அவர்களை சிட்சித்து சீர்படுத்துவதையும் அவர்களது நீண்ட வரலாற்றில் நாம் காணலாம்.
வெகுவிரைவில் ஓர் புதிய வழிக்கு திரும்ப இதுவே காலம். இச் செய்தியை மல்கியாதீர்க்கன் மல்கியா 4:5-6 வசனங்களில் குறிப்பிட்டுக் கூறுகிறார். மேசியா வரப்போகிறார்; ஓர் இரட்சகர் வரப்போகிறார். அவர் தமது அன்பை நமக்கு வெளிக்காட்டி, நமது பாவங்களுக்காக, அதற்கான விலைக்கிரையத்தை ஒரே தரம் செலுத்தித் தீர்ப்பார் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு.