அயர்லாந்திலுள்ள அநேக கிராமப்புற நகரங்களில் சமீபகாலம் வரை வீட்டுக்கு எண்களோ, அல்லது தபால்துறை குறியீட்டு எண்களோ (பின்கோட்) பழக்கத்தில் இல்லை. எனவே, ஓர் ஊரில் மூன்று பாட்ரிக் மர்ஃபிக்கள் இருந்தால், புதிதாக அங்கு குடியேறிய அந்தப் பெயர் கொண்ட நபருக்கு கடிதம் வழங்கப்படமாட்டாது; நீண்ட நாட்களாக அங்கு வசித்து வரும் முதல் இரண்டு பாட்ரிக் மர்ஃபிகளுக்கும் வழங்கப்பட்டு பின் அது அவர்களுடைய கடிதம் இல்லையென்றால் தான் புதிதாக வந்த பாட்ரிக் மர்ஃபிக்கு வழங்கப்படும். புதிதாக வந்த பாட்ரிக் மர்ஃபி என்னுடைய அண்டை வீட்டுக்காரர்கள் தான் முதலாவது கடிதத்தை வாங்குவார்கள் என்று கூறுவார். நன்கு அறிமுகமான அவர்களிடம் கடிதம் போகும்பொழுது அவர்கள் இல்லை இது எங்களுடையதல்ல என்று கூறிவிடுவார்கள். இவ்வாறு இந்த கடிதப்பட்டுவாடா குழப்பங்களைத் தீர்க்க, அயர்லாந்து அரசாங்கம் சமீப காலத்தில் முதல் முறையாக தபால் குறியீட்டு எண் முறையை அறிமுகப்படுத்தியது. இம்முறை சரியான முறையில் கடிதங்கள் சேர வேண்டியவர்களுக்கு போய் சேர்வதை உறுதிப்படுத்தும்.

சில சமயங்களில் நாம் ஜெபிக்கும் பொழுது நம் உள்ளத்தில் உள்ளவைகளை தேவனிடம் தெரிவிக்க உதவி தேவைப்படுவதைப் போல் உணருவோம். தேவனிடம் பேச சரியான வார்த்தைகள் கிடைக்கவில்லையென்றும், நம் ஆழமான வாஞ்சையை எப்படி வெளிப்படுத்துவது என்றும் நமக்குத் தெரியாதிருக்கலாம். ரோமர் 8ம் அதிகாரத்தில் பரிசுத்த ஆவியானவர் பெருமூச்சுகளோடு நமக்காகப் பிதாவினிடத்தில் வேண்டுதல் செய்து நமக்கு உதவுகிறார் என்று பவுல் அப்போஸ்தலர் கூறுகிறார். “நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால் ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் (ரோம 8:26). ஆவியானவர் எப்பொழுதும் தேவனுடைய சித்தத்தின்படியே வேண்டுதல் செய்கிறார். பிதாவும் ஆவியானவரின் சிந்தையை அறிந்திருக்கிறார்.

நாம் ஜெபிக்கும் பொழுது தேவன் அதைக் கேட்கிறார் என்றும் நம்முடைய அத்தியாவசியத் தேவைகளை அறிந்திருக்கிறார் என்றும் நாம் தைரியப்படுவோம்.