நான் ஒரு புத்தகத்தை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்த பொழுது என் சிநேகிதி ஒருத்தி, நான் அப்படி என்ன வாசிக்கிறேன்? என்று குனிந்து உற்று நோக்கினாள். அவள் திகிலடைந்தவளாய் என்னைத் திரும்பிப்பார்த்து, “என்ன பயங்கரமான தலைப்பு?” என்று கூறினாள். நான் கிரிம் எழுதிய தேவதைகள் செயல்படும் கட்டுக்கதையாகிய “கண்ணாடி சவப்பெட்டி” என்ற கதையை வாசித்துக் கொண்டிருந்தேன். சவப்பெட்டி என்ற வார்த்தை அவளைக் கலக்கத்திற்குள்ளாக்கியது. நம்மில் அநேகருக்கு மரணத்தைப் பற்றி நினைவுகூர்வது ஓர் விரும்பப்படாத காரியம். உண்மையாதெனில் 1000 பேர் வாழ்ந்தால், 1000 பேரும் மரித்துதான் போவார்கள்.

மரணம் எப்பொழுதும் நம் ஆழமான உள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. இயேசுவின் சிநேகிதன் லாசரு மரித்தபொழுது, தன் சகோதரனை இழந்த மரியாளை இயேசு சந்தித்த பொழுது, ஆழ்ந்த துக்க உணர்வை வெளிப்படுத்தினார் (யோவா 11:33) என்று பார்க்கிறோம். மற்றுமோர் மொழி பெயர்ப்பாளர் “அவருக்குள் அதிகமான ஆத்திரம் பொங்கி வழிந்தது” என்று மொழி பெயர்த்துள்ளார்.

இயேசு கலங்கினார் – ஆத்திரமும் அடைந்தார். ஆனால் எதைப் பார்த்து? ஒருவேளை பாவத்தையும் அதின் விளைவுகளைக் கண்டு, அவருக்கு வெறுப்புடன் கூடிய கோபம் ஏற்பட்டிருக்கலாம். வியாதி, துன்பம், மரணம் போன்றவற்றால் நிறைந்த ஓர் உலகத்தை தேவன் சிருஷ்டிக்கவில்லை. ஆனால் பாவம் உட்பிரவேசித்து தேவனின் மிக நேர்த்தியான திட்டத்தைக் கறைபடுத்திவிட்டது.

இயேசு நமது துக்கத்தில் நம்முடன் இருந்து நமது கவலையில் நம்மோடு பங்குகொண்டு நம்முடன கண்ணீர் விடுகிறார் (வச.35). ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக இயேசு நமக்குப் பதிலாக மரித்து, மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்ததினால் பாவத்தையும், மரணத்தையும் ஜெயித்த வெற்றி சிறந்தார் (1 கொரி 15:56,57).

“உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” (யோவா 11:26) என்று இயேசு வாக்களித்திருக்கிறார். கிறிஸ்துவுக்குள் விசுவாசிகளாகிய நாம் இப்பொழுது நமது இரட்சகருடன் உள்ள ஐக்கியத்தில் மகிழ்ச்சியாயிருக்கிறோம். இனிமேல் கண்ணீர், கவலை, வேதனை, வியாதி அல்லது மரணமே இல்லாத நித்தியத்தில் அவரோடு இருப்போம் என்று நாம் எதிர் நோக்கியிருப்போம்.