கானா நாட்டில் இறந்தவர்களின் அறிக்கையை விளம்பரப் பலகைகளிலும், கான்க்ரீட் சுவர்களிலும் ஒட்டி வைப்பது வழக்கம். “வெகு சீக்கிரம் சென்று விட்டார்”, வாழ்வின் கொண்டாட்டம்” “என்ன அதிர்ச்சி” போன்ற தலைப்புகளைக் கொண்ட விளம்பரங்களைத் தங்களுக்கு அருமையானவர்கள் இறக்கும் பொழுதும், அடக்க ஆராதனை நடப்பதற்கு முன்னும் காணலாம். நான் ஒன்றை வாசித்தேன் – மாற்றத்தில் (In transition)
மரியாளும், மார்த்தாளும் தங்கள் சகோதரன் லாசரு மரித்த பொழுது துக்கத்தில் ஆழ்ந்திருந்தது போல நமது நெருங்கிய உறவினரோ அல்லது நண்பரோ மரிக்கும் பொழுது துக்கப்படுகிறோம் (யோவா 11:17-27). இயேசு தன் சிநேகிதன் மரித்த பொழுது, கண்ணீர் விட்டது போல நாமும் நம்மைவிட்டு கடந்து சென்றவர்களுக்காக, மனம் நொறுங்குண்டவர்களாய் அழுகிறோம் (வச.35).
ஆனாலும் இந்த துக்ககரமான வேளையில் “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலுமிருப்பான்” என்ற மகிழ்ச்சிகரமான வசனத்தை இயேசு கூறினார் (யோவா 11:25-26).
இந்த வசனத்தை அடிப்படையாகக் கொண்டு விசுவாசிகள் நம்மை விட்டுக் கடந்து செல்லும் பொழுது தற்காலிகமாகவே வழியனுப்பி வைக்கிறோம். “இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம்” என்று பவுல் அப்போஸ்தலன் ஆணித்தரமாகக் கூறுகிறார் (1 தெச 4:17). ஆம்! அருமையானவர்களே! இவ்வாறு ஏற்படும் பிரிவு மிகவும் வேதனை தரத்தக்கது. ஆனால், அவர்கள் தேவனுடைய பாதுகாப்பான கரங்களில் இளைப்பாறுகிறபடியால் நாம் நிச்சயமாய் ஆறுதலடையலாம்.
இவ்வாறு “மாற்றம் அடையும் பொழுது நாம் ஓர் சூழ்நிலையிலிருந்து, மற்றோர் சூழ்நிலைக்கு கடந்து போகிறோம். இவ்வுலக வாழ்க்கை நமக்கு முடிவுற்றாலும், மறுமையில் இதைவிட மேலான ஓர் வாழ்க்கையை இயேசுவுடன் தொடர்ந்து வாழுவோம். “ஆகையால் இந்த வார்த்தைகளினாலே ஒருவரையொருவர் தேற்றுங்கள்” (1 தெச 4:18).