என்னுடைய கணவன் 18 வயதாக இருக்கும் பொழுது காரை சுத்தம் செய்யும் தொழிலை ஆரம்பித்தார். ஓர் கார் நிறுத்தும் இடத்தை வாடகைக்கு எடுத்து உதவிக்கு ஆட்களை வேலைக்கு அமர்த்தி விளம்பரத்திற்காக நோட்டீஸ்களை அச்சிட்டு வெளியிட்டார். தொழில் லாபகரமாக இருந்தது. அவருடைய நோக்கம் என்னவெனில் தான் செய்யும் தொழிலை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயைத் தன் கல்லூரிப்படிப்பிற்கு செலவு செய்ய வேண்டும் என்றிருந்தார். அதை வாங்குவதற்கு ஒரு நபர் விருப்பம் தெரிவித்தது அவரை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று காரியம் முடிந்து விடும் என்ற நிலையிலிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் அதுநிறைவேறாமல் போய்விட்டது. பின் அநேக மாதங்கள் கழித்து அதை விற்கும் காரியம் வெற்றிகரமாக முடிந்தது.

எதிர்பார்ப்பிற்கு ஏற்றவிதத்தில் தேவனுடைய காலமும், திட்டமும் நமது வாழ்க்கையில் இணைந்து செயல்படாவிட்டால் நாம் ஏமாற்றமடைவது சகஜமான ஒன்றே. தாவீது தேவனுக்கு ஓர் ஆலயம் கட்ட வேண்டும் என்று எண்ணியது சரியான நோக்கமே அதற்குத் தேவையான தலைமைத்துவ திறமைகளும், அனைத்து வசதிகளும் அவனுக்கு இருந்தது. ஆனாலும், அவன் பல பெரிய யுத்தங்களில் ஈடுபட்டு திரளான இரத்தத்தைச் சிந்தியுள்ளதினால் அவன் அந்த ஆலயத்தைக் கட்ட வேண்டாம் என்று தேவன் கூறிவிட்டார் (1 நாளா 22:8).

இதனால் தாவீது கோபத்தில் வானத்திற்கு நேராக தன் கை முட்டியை உயர்த்தி தன் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கலாம். கோபத்தில் தன் உதட்டைப் பிதுக்கி தன் திட்டத்தின்படி செய்ய முயன்றிருக்கலாம். ஆனால் தாவீது “தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டு வந்ததற்கு நான் எம்மாத்திரம்?” என்று தன்னைத் தாழ்த்தினான் (1 நாளா 17:16). தாவீது தேவனைப் புகழ்ந்து பாடி அவர் மீது தான் கொண்டுள்ள பக்தியை உறுதிப் படுத்தினான். தன் விருப்பத்தைக் காட்டிலும் தேவனுக்கும், தனக்கும் உள்ள உறவையே முக்கியப்படுத்தினான்.

நமது எதிர்பார்ப்புகளையும், கனவுகளையும் நிறைவேற்றுவதா? அல்லது தேவன் மீது உள்ள அன்பா? இவற்றில் எது முக்கியத்துவம் வாய்ந்தது?