ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் மாக்கே என்பவர் 1878ம் ஆண்டில் இன்று உகண்டா என்று அழைக்கப்டும் நாட்டிற்குச் சென்று மிஷனரி பணியாற்றிய பொழுது, முட்டீசா என்ற அரசன் அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்தான், அங்கு மாக்கே, கொல்லன் பட்டறை ஒன்றை முதலாவது நிறுவினார். புதிதாக வந்தவர் தன் கைகளினால் வேலை செய்வதைப் பார்த்து குழப்பத்திற்குள்ளாகி அந்த கிராம மக்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர். ஏனென்றால், அவர் செய்யும் வேலை பெண்கள் செய்யும் வேலை என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருந்தார்கள். அந்தக் காலத்தில் உகண்டாவில் உள்ள ஆண்கள் தங்கள் கைகளினால் ஒருபோதும் வேலை செய்ய மாட்டார்கள். வேறு கிராமங்களுக்குச் சென்று மனிதர்களைச் சிறைப்பிடித்து அவர்களைப் பிற மக்களிடம் அடிமைகளாக விற்று வந்தார்கள். ஆனால், இந்த வெளிநாட்டவர் விவசாயக் கருவிகளைத் தன் கைகளினால் செய்தார்.

மக்கேயின் நீதிநெறியான பணியும், வாழ்க்கையும் அக்கிராமமக்களிடையே இனிய உறவுகளை ஏற்படுத்தி, அரசனைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தையும் உருவாக்கியது. அடிமை வியாபாரத்தைக் கைவிடும்படி மாக்கே முட்டிசாவிடம் ஆலோசனைக் கூறினார். அதன்படி அரசனும் அடிமை வியாபாரத்தை ஒழித்துவிட்டான்.

வேதத்தில், ஆசரிப்புக் கூடாரத்தில் தேவனை ஆராதிக்கத் தேவையான சகல பணி முட்டுக்களையும் தங்கள் கரங்களினால் செய்ய ஞான இருதயமுள்ள பெசலெயேலையும், அகோலியாபையும் தேவன் தெரிந்து கொண்டதைப் பற்றி வாசிக்கிறோம் (யாத் 31:1-11). மாக்கேயைப் போல, அவர்கள் இருவரும் தேவனைக் கனப்படுத்தி தங்கள் தாலந்துகளையும், திறமைகளையும் தேவனுக்கென்று அர்ப்பணித்து பணி செய்தார்கள்.

ஆலய சம்பந்தமான பணிகளானாலும், உலகப் பிரகாரமான பணிகளானாலும் எந்தவித நிபந்தனையுமின்றி நமது பணிகளை நேர்மையாகச் செய்ய எதிர்பார்க்கப்படுகிறோம். உண்மை என்பதில் எந்த விதமான பாகுபாடும் இல்லை. தேவனுடைய இராஜ்ஜியத்தின் பணியில் நாம் ஒவ்வொருவரும், நமக்கே உரிய தனித்தன்மையுடன், அர்த்தமுள்ள செயலை நமது பங்காகச் செய்ய தேவன் நம் ஒவ்வொருவரையும் நியமித்திருக்கிறார். நாம் எங்கு, எவ்வாறு பணிபுரிய வேண்டும் என்பதை நாம் குறைவாக அறிந்திருந்தாலும், நாம் தேவனை முழுமையாக அறிந்து கொள்ள அழைக்கிறார். அவருக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பதை அவர் நமக்கு இப்பொழுதே வெளிப்படுத்துவார்.