ஈஸ்டர் பற்றிய கதையில் ஒரு குறிப்பு எப்பொழுதும் என் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது. சிலுவையில் அறையப்பட்டதினால் ஏற்பட்ட தழும்புகளை இயேசு ஏன் வைத்திருந்தார்? உயிர்த்தெழுந்த பின் அவர் விரும்பிய எந்தவிதமான சரீரத்தையும் அவர் உடையவராக இருந்திருக்கலாம். எளிதில் யாவரும் அடையாளம் கண்டு கொள்வதற்காக அவர் தழும்புகளுள்ள சரீரத்தைக் தெரிந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏன் அப்படி?
இயேசுவுடைய கைகளில் கால்களில் அவருடைய விலாவில் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் இல்லாவிட்டால், ஈஸ்டரைப் பற்றிய விவரங்கள் முழுமை பெற்றவைகளாக இருக்க இயலாது (யோவான் 20:27). மனிதர்கள் முத்துப் போன்ற பற்களையும், சுருக்கமற்ற தோலையும், மிகச் சிறப்பான உடற் கட்டையும் விரும்புகின்றனர். இயற்கைக்கு மாறாக குறை ஏதுமே இல்லாத சரீரம் வேண்டும் என்று நாம் கனவு காண்கிறோம். ஆனால் இயேசுவிற்கு ஒரு எலும்புக் கூட்டுக்குள்ளும், மனித தோலுக்குள்ளும் அடங்கியிருப்பது இயற்கைக்கு மாறானது. அவருடைய காயங்கள் அவர் இந்த உலகில் நமக்காகப் பாடுகளை அனுபவிக்க மானுட சரீரத்தில் அவதரித்தார் என்பதை என்றென்றும் நினைப்பூட்டுவதாக உள்ளன.
பரலோகக் கண்ணோட்டத்தில் அந்தக் காயங்கள் இப்பிரபஞ்சத்தின் வரலாற்றில் நடந்த ஒரு கொடுமையான வன்செயலைக் குறிப்பதாக உள்ளன. அந்த நிகழ்ச்சி ஒரு நினைவாக மாறிவிட்டாலும், இயேசு உயிர்த்தெழுந்த நிகழ்ச்சியினால், நமது சிநேகிதர்கள், நம்மால் நேசிக்கப்பட்ட உறவினர்கள் அவர்களது இழப்பால் நாம் சிந்தின கண்ணீர், கடந்து வந்த போராட்டங்கள், உணர்வுகளின் வேதனைகள், கடும் துயரம் ஆகியவைகள், எப்படியாக அவரது தழும்புகள் நினைவாக மாறினதோ அது போலவே அவைகளும் நினைவுகளாக மாறிவிடும் தழும்புகள் முழுவதுமாக மறைந்து போவது இல்லை. நமக்கு வேதனையும் கொடுப்பதுமில்லை. ஒருநாள் புதிய வானம், புதிய பூமியில் மறுரூபமாக்கப்பட்ட சரீரங்களோடு நாமும் இருப்போம் (வெளி 21:4). ஒரு புதிய துவக்கத்தை, இயேசு உயிர்த்தெழுந்ததினால் ஏற்பட்ட ஈஸ்டர் துவக்கத்தை உடையவர்களாக இருப்போம்.