நான் சிறுவனாக இருந்தபொழுது, எனது தகப்பனார் புதர்களுக்குள்ளாக ஒளிந்து கொண்டு சிங்கத்தைப் போல் உறுமி எங்களைப் பயமுறுத்துவார். 1960களில் நாங்கள் கானாவின் கிராமப்புறங்களில் வசித்து வந்தோம். அப்பகுதியில் ஒரு சிங்கம் அருகில் பதுங்கி இருப்பது என்பது நடக்க முடியாத காரியமாகும். நானும், என் சகோதரனும் சிரித்துக் கொண்டு அந்த உறுமல் சத்தம் வரும் இடத்தை நோக்கிப் சென்று, ஒளிந்திருக்கும் எனது தகப்பனாரைக் கண்டு மகிழ்ச்சியடைவோம்.

ஒரு நாள் ஒரு இளம் வயதுடைய சிநேகிதி எங்களைப் பார்க்க வந்தாள். நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, வழக்கமான உறுமல் சத்தத்தைக் கேட்டோம். எங்களது சிநேகிதி பயந்து அலறிக்கொண்டு ஓடினாள். நானும் என் சகோதரனும் அது எங்களது தகப்பனாரின் சத்தம் என்று அறிந்திருந்தோம். “ஆபத்து” என்பது சிங்கத்தின் மாயத் தோற்றத்தினால் வரும் கற்பனை என்பதை அறிந்திருந்தோம். ஆனாலும் ஒரு வேடிக்கையான செயல் நிகழ்ந்தது. நானும் என் சகோதரனும் எங்களது சிநேகிதியோடு சேர்ந்து பயந்து ஓடினோம். எங்களது சிநேகிதி பயந்துவிட்டாள் என்பதை அறிந்த எனது தந்தை மிகவும் வருத்தப்பட்டார். மற்றவர்கள் பயத்தினால் ஆட்கொள்ளப்பட்டு செய்யும் செயலினால் நாம் பாதிக்கப்படக் கூடாது என்ற பாடத்தை நானும் என் சகோதரனும் கற்றுக் கொண்டோம்.

மற்றவர்களது பய உணர்ச்சியினால் பாதிக்கப்படாமல் காலேபும், யோசுவாவும் தனித்துநின்றார்கள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்கும் முன்பு, மோசே 12 வேவுகாரர்களை அந்த தேசத்தை வேவு பார்க்க அனுப்பினான். அவர்கள் அனைவரும் மிகவும் அழகான அந்த தேசத்தை சுற்றிப்பார்த்தார்கள். ஆனால் அவர்களில் 10 பேர் அங்கிருந்த தடைகளையே அதிகமாக பார்த்து, இஸ்ரவேல் மக்கள் அனைவரையும் அதைரியப்படுத்தினார்கள் (எண் 13:27-33). அவர்கள் கூறியதைக் கேட்ட அனைத்து மக்களும் திகில் அடைந்தார்கள் (14:1-4). காலேபும், யோசுவாவும் மட்டும் அந்த சூழ்நிலையை சரியான கண்ணோட்டத்துடன் பார்த்தார்கள் (வச.6,9). இம்மட்டும் தேவன் அவர்களை நடத்தி வந்ததைப்பற்றி அவர்கள் நன்கு அறிந்திருந்ததினால் நிச்சயமாக தேவன் அவர்களுக்கு வெற்றியைத் தருவார் என்று நம்பினார்கள்.

“சில சிங்கங்கள்” உண்மையான பயத்தை உண்டு பண்ணும் மற்றவைகள் வெறும் மாயத் தோற்றம்தான். எப்படி இருந்தாலும் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாக, நாம் நன்கு அறிந்திருக்கிற சத்தத்தையும், செயல்களையும் உடைய நம்முடைய தேவனையே நம்பியிருக்கிறோம்.