ஒரு நாள் ரோஜா நிற டுலிப் மலர்க் கொத்து ஒன்றைப் பெற்றேன். எங்களது சமையலறையிலுள்ள மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஒரு பூச்சாடியில் அந்தப் பூக்கொத்தை வைத்தேன். அந்தப் பூக்கள் அவற்றின் தடித்த தண்டின் மேல் அழகாக நேராக நின்றன. அடுத்த நாள் அந்தப் பூக்கள் வேறு திசையில் திரும்பி இருந்தன, மலர்கள் இப்பொழுது அருகிலிருந்த ஜன்னலின் வழியாக வந்த சூரிய ஒளியை நோக்கிப் பக்கவாட்டில் சாய்ந்திருந்தன.

ஒரு வகையில் நாம் அனைவரும் அந்த மலர்களைப் போலவே இருக்க உருவாக்கப்பட்டுள்ளோம். தேவன் அவரது அன்பை நோக்கி நாம் திரும்புவதற்கு நம்மை அழைத்துள்ளார். “உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு” (1 பேதுரு 2:9) வரவழைக்கப்பட்ட ஆச்சரியத்தைப்பற்றி பேதுரு எழுதுகிறார். தேவனை அறியும் முன்பு நாம் பாவம், மரணம் அவற்றின் கீழ் அடிமைகளாக இருந்தோம். அவைகள் நம்மை தேவனை விட்டு பிரித்து விட்டன (எபேசியர் 2:1-7). ஆயினும் தேவனுடைய இரக்கம், அன்பு இவற்றினால் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதலின் மூலமாக, ஆவிக்கேற்ற அந்தகாரத்திலிருந்து தப்பிக்க ஒரு வழியை உண்டுபண்ணினார் (கொலோ 1:13-14).

இயேசு உலகத்தின் ஒளியாக இருக்கிறார். தங்களது பாவம் மன்னிக்கப்படுவதற்கு அவரை விசுவாசிக்கிற யாவருக்கும் நித்திய ஜீவனை அருளுகிறார். நாம் அவரை நோக்கி திரும்பும்பொழுது மட்டும் தான், அவருடைய நன்மையான தன்மையையும், உண்மையையும் அதிகமதிமாய் பிரதிபலிக்கலாம் (எபேசி 5:8-9).
ஓளியாகிய அவரை நோக்கிச் சாய்வதை நாம் ஒருக்காலும் மறந்துவிடக்கூடாது.