ஒரு சாலைக் கட்டுமான மேஸ்திரி விபத்தில் மரித்துப்போன பொழுது, அந்த மனிதன் தன் குடும்பம், சக ஊழியர், சமுதாயத்தின் மீது வைத்திருந்த அன்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, ஓர் பேரிழப்பை உணர வைத்தது. அவனுடைய ஊர் தேவாலயமானது அடக்க ஆராதனையில் துக்கத்துடன கலந்து கொள்ள வரும் மக்களுக்கு இடம் போதாதபடியினால், ஓர் பெரிய கட்டடத்தில் அடக்க ஆராதனைக்கு ஒழுங்கு செய்தனர். நண்பர்களாலும், குடும்பத்தினராலும் அந்த அரங்கம் நிரம்பி வழிந்தது! அவனுக்கு உரிய தனித்தன்மையினால் ‘டிம்’ அநேகருடைய வாழ்க்கையைத் தொட்டிருந்தான். அவனுடைய அன்பு, நகைச்சுவைபடப் பேசும் தன்மை, வாழ்க்கையில் ஆர்வம் போன்றவற்றை அநேகர் இழக்க நேர்ந்தது.
அடக்க ஆராதனை முடிந்தபின் நான் திரும்பி வந்த பொழுது யோராம் ராஜாவின் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கலானேன். என்ன வேறுபாடு! 2 நாளாகமம் 21ம் அதிகாரத்தில் அவனது குறுகிய கால “பயங்கர ஆட்சி” விவரிக்கப்பட்டுள்ளது. தன் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள தன் இரண்டு சொந்த சகோதரரையும், பிரபுக்களையும் கொன்று போட்டான் (வச. 4). யூதா மக்களை விக்கிரக வணக்கத்திற்கு வழி நடத்திச் சென்றான். “விரும்புவாரில்லாமல் அவன் இறந்து போனான்” (வச. 20) என்று வேதம் கூறுகிறது. மிருகத்தனமான தன் அதிகாரம் பரம்பரை, பரம்பரையாகத் தனக்கு உத்திரவாதம் அளிக்கும் என்று எண்ணினான். அது அப்படியே நடந்தது. ஆனால் அவன் ஓர் பொல்லாத மனிதன் என்றும், சுயநலமிக்க தலைவன் என்றும் வேதம் அவனைப் பரம்பரை பரம்பரையாக நினைவு கூருகிறது.
இயேசு ராஜாவாக இருந்தாலும் அவர் இவ்வுலகிற்கு ஓர் ஊழியக்காரனாகவே வந்தார். அவர் நன்மை செய்கிறவராகச் சுற்றித்திரிந்த பொழுது அதிகாரத்தை பிடித்திருந்தவர்களின் வெறுப்பை அனுபவித்தார். காலப் போக்கில் இந்த ஊழியத்திற்காக தம் ஜீவனையே கொடுத்தார்.
இன்றும் இயேசு தன் பின் சந்ததியாருக்கு ஓர் மாபெரும் ஆஸ்தியாக விளங்குகிறார்.
தங்கள் வாழ்க்கை தங்களுக்கானது அல்ல என்று புரிந்து வாழும் மக்கள் கூட்டத்தை உள்ளடக்கியதே அந்த பரம்பரை சொத்து. அவரிடம் வரும் அனைவரையும் தன் மன்னிக்கும் கரங்களால் கட்டித்தழுவி அணைப்பார். அப்படிப்பட்டவர் தான் இயேசு.
