ஓர் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும், ஓர் புதிய பிரச்சனையை சந்திக்க வேண்டிய ஓர் சூழ்நிலையின் வழியாக நீங்கள் கடந்து சென்று கொண்டிருக்கிறீர்களா? அப்பிரச்சனைக்கு முடிவு வந்துவிட்டது என்று இரவில் தேவனுக்கு நன்றி செலுத்துகிறீர்கள். ஆனால் அப்பிரச்சனை தீராமல், ஏதோ ஒரு புதிய தவறு நடந்து பிரச்சனை தீராமலேயே இருக்கிறது.

அப்படிப்பட்ட அனுபவத்தின் வழியாக நான் கடந்து கொண்டிருந்த பொழுது லூக்கா நற்செய்தி நூல் 18ம் அதிகாரத்தில் முதல் வசனத்திலுள்ள வார்த்தைகள் என்னைப் பிரமிப்பிற் குள்ளாக்கியது. “சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும் என்பதைக் குறித்து இயேசு தம் சீடர்களுக்கு ஓர் உவமையைச் சொன்னார்” (லூக்கா 18: 1). விடாப்பிடியாக, உறுதியுடனிருந்த அந்த விதவையின் கதையை பல முறை வாசித்திருக்கிறேன். ஆனால் ஏன் இயேசு அந்த உவமையைச் சொன்னார் என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை (வச.2-8). இப்பொழுது நான் முதல் வசனத்துடன், அந்த உவமையை இணைத்துப் பார்த்தேன். “சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும்” என்று ஏன் சொன்னார் என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டேன்.

ஜெபம் என்பது நமக்கு விருப்பமானதை தேவன் செய்ய வேண்டுமென்று என்று அவரைக் கட்டாயப்படுத்தும் ஒரு வழியல்ல, அது நம்முடைய வாழ்க்கையில் அவருடைய வல்லமையையும், திட்டத்தையும் அறிந்து கொள்ளக் கூடிய ஒரு வழிமுறையாகும். ஜெபத்தில் நம் வாழ்க்கையையும், சூழ்நிலை, சந்தர்ப்பங்களையும் அவரிடம் ஒப்புக் கொடுத்து அவருக்கு ஏற்ற வேளையிலும், வழியிலும் அவர் செயல்பட அவரை சார்ந்திருக்க வேண்டும்.

தேவனுடைய கிருபையின் மீது நாம் சார்ந்திருக்கும் பொழுது நம் ஜெபத்திற்கு கிடைக்கும் பதிலுக்கு மாத்திரம் அல்லாது அது செயல்படும் விதத்திற்காகவும், அடிக்கடி அவர் சமூகத்தில் ஜெபத்தில் தரித்திருந்து, அவருடைய ஞானத்தின் மீதும், நம்மீது அவர் கொண்டுள்ள கரிசனையின் மீதும் சார்ந்திருக்க வேண்டும்.

நமக்கு தேவன் அருளும் ஊக்கம் தெளிவாகக் காணப்படுகிறது. சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணுங்கள்!