பிரான்ஸ் கஃப்கா (Franz Kafka 1883-1924) தன்னுடைய “சோதனையும், கோட்டை அரண்மனையும்” (The Trial and The Castle) என்னும் நாவலில், மனுக்குலம் தனிமனித அடையாளமோ, மதிப்போ இன்றி வெறும் முகங்களாகவே மாறும் அவல நிலைக்கு அவர்களைத் தள்ளும் மனிதத்தன்மையற்ற ஜீவியமாகவே இவ்வாழ்வை சித்தரித்துள்ளார். மேலும் கஃப்கா (Kafka) “ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டுச் செல்லும் கண்வேயர் பெல்ட்டை (Conveyor Belt) போல இவ்வாழ்க்கை, நம்மை ஒரு உயிரினமாகக் கருதாமல் உயிரற்ற பொருளாகவே கருதி சுமந்து செல்கிறது” என கூறியுள்ளார்.
இயேசு கிறிஸ்து, தன்னுடைய ஊழியத்தின் ஆரம்ப நாட்களில் ஓர் நாள், நாசரேத் என்னும் ஊரிலுள்ள ஒரு ஜெப ஆலயத்திற்கு (Synagogue) சென்று, அக்கூட்டத்தின் முன் எழுந்து நின்று, ஏசாயா தீர்க்கதரிசன புஸ்தகத்திலிருந்து, கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார்” என்ற பகுதியை வாசித்தார் (லுக்கா 4: 18-19).
பின்பு அவர் அமர்ந்து, “உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையதினம் நிறைவேறிற்று” (வச.21) என்று அறிவித்தார். பல நூற்றாண்டுகளுக்கு முன் ஏசாயா உரைத்த அத்தீர்க்கதரிசன வாக்குத்தத்தம் (ஏசா 61: 1-2) இன்று இயேசுவின் மூலம் நிறைவேறிற்று என்று அறிவித்தார்.
ஏழைகளையும், இருதயம் நருங்குண்டவர்களையும், கட்டப்பட்டவர்களையும், குருடர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் விடுவிக்கவே இயேசு வந்தார். பாவத்தினால் மனிதத்தன்மை இழந்து, நொறுங்குண்டு துயரத்தில் தவிக்கும் மக்களுக்காகவே வந்தார். அவர் நமக்காகவே வந்தார்.