ஞாயிறு ஆராதனை வேளையிலே, அந்த பாடகர் பாடத் துவங்கியதும் முழு சபையும் நிசப்தமாயிற்று. கார்டன் ஜென்சன் (Gorden Jensen) என்பவர் ஆத்மார்த்தமான வரிகளைக் கொண்டு இயற்றிய ஒரு பழைய பாடலை கனிந்த அடிக்குரலில் அவர் பாடத் துவங்கியதும், அனைவரின் கவனமும்; அவர் மேலேயேயிருந்தது. “அவருடைய நாமத்தை உச்சரிக்கும் தூரத்தில் அவர் நம் அருகில் இருக்கிறார்” என்கிற அப்பாடல் தலைப்பு வெளிப்படுத்தும் உண்மை, நாம் வயதாக ஆக இன்னும் விலையேறப்பெற்றதாய் மாறிவிடுகிறது.

நமக்கு பிரியமானவர்களின் பிரிவை அநேக முறை நாம் அனுபவித்துள்ளோம். உதாரணத்திற்கு மகனோ, மகளோ திருமணமாகி வெகு தூரம் சென்று விடலாம். வேலை நிமித்தமாகவோ அல்லது சரீரசுகத்தை முன்னிட்டோ நம் பெற்றோர் நம்மை பிரிந்து இருக்கலாம் அல்லது மகனோ, மகளோ வேறு மாநிலத்திற்கோ, நாட்டிற்கோ படிக்கச் செல்லலாம். அவர்களோடு தொடர்பில் இருக்க குறுஞ்செய்தி அனுப்பலாம். ஸ்கைப் (Skype) மூலம் பேசலாம் என்பது உண்மைதான். ஆனாலும், அவர்கள் அங்கேயும் நாம் இங்கேயும் தான் இருக்கிறோம். இதையெல்லாம் தாண்டி மரணம் கொண்டு வரும் பிரிவும் உண்டு.

ஆனால் நாம் ஒரு நாளும் தனிமையாய் இல்லை என்னும் அவருடைய வாக்குத்தத்தத்தை கிறிஸ்துவுக்குள் நாம் பெற்றுள்ளோம். நாம் தனிமையாய் உணர்ந்தாலும், அவர் நம்மை விட்டு விலகாமல், நம் அருகிலேயே, இப்பொழுது இருப்பது மாத்திரமல்லாமல் எப்பொழுதும் என்றென்றைக்கும் இருப்பார் என்பதே, உண்மை. இயேசு பூமியை விட்டு பரலோகம் செல்லும் முன், தம் சீஷர்களை நோக்கி, “உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” (மத் 28: 20) என்றார். அதுமட்டுமல்லாமல், “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுதில்லை,” (எபி 13: 5) என்று வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்.

நம் மனதில் வேண்டுதல், அவருடைய நாமத்தை உச்சரிக்கும் மெல்லிய சத்தம், அதுமட்டுமல்ல அவரைக் குறித்து நம்முடைய எண்ணங்களே நமக்கு ஆறுதலையும், இளைப்பாறுதலையும் கொண்டு வரும். “அவருடைய நாமத்தை உச்சரிக்கும் தூரத்தில் அவர் நம் அருகில் இருக்கிறார்.”