2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி விமானம் ஒன்று சோதனை ஓட்டத்தின் போது உடைந்து, மோஜோவ் பாலைவனத்தில் விழுந்து நொறுங்கியது. அவ்விபத்தில் துணை விமானி மரித்துப்போனார். ஆனால் அதன் விமான ஓட்டியோ அற்புதவிதமாக பிழைத்துக் கொண்டார். அதைக்குறித்து விசாரணை நடத்தினவர்கள் என்ன நடந்தது என்பதை விரைவில் கண்டறிந்த போதிலும், ஏன் நடந்தது என்பதை அறியவில்லை. அச்சம்பவத்தைக் குறித்து செய்தித்தாளில் வெளியான கட்டுரை ஒன்றின் தலைப்பு, “கேள்விகள் தொடர்கின்றன” என துவங்கிற்று.
நாம் நம் வாழ்நாள் முழுவதும் சந்திக்கும் துயரங்களுக்கு போதுமான விளக்கங்கள் இல்லை. சில சம்பவங்கள் ஒட்டுமொத்தமாக அநேகரை பெரிய அளவில் பாதிக்கக்கூடியதாய் இருக்கிறது. மற்றவை தனிப்பட்ட விதத்தில் நம்முடைய வாழ்வை, குடும்பத்தை பாதிக்கக் கூடிய துயர சம்பவமாய் இருக்கிறது. இவை ஏன் என தெரிந்துகொள்ள நினைக்கிறோம். ஆனால் பதிலை விட இன்னும் அநேக கேள்விகளையே கண்டடைகிறோம். “ஏன்?” என்ற கேள்வியோடு போராடிக்கொண்டிருக்கிற இவ்வேளையிலும் கூட தேவன் தம்முடைய உண்மையான அன்பை நமக்கு அளிக்கிறார்.
ஒரே நாளில் தன்னுடைய பிள்ளைகளையும் செல்வத்தையும் யோபு இழந்த பொழுது (யோபு 1:13-19), கோபமாக தாங்கொண்ணா துயரத்திற்குள் மூழ்கிப் போனான். தன்னுடைய நண்பர்களின் விளக்கங்களையும் அவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், என்றாவது ஒருநாள் தேவனிடத்திலிருந்து தனக்கு பதில் வரும் என்ற நம்பிக்கையோடிருந்தான். அந்த இருண்ட காலத்திலும் கூட, “நான் போகும் வழியை அவர் அறிவார், அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” என யோபுவால் சொல்ல முடிந்தது (23:10).
“நம் ஒவ்வொருவருக்கும் தேவனுடைய தொடுதல் வரும். அந்நாளிலே, நம்முடைய ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் மனக்குழப்பங்களுக்கும், ஒவ்வொரு கொடுமைக்கும், துன்பத்திற்கும், ஒவ்வொரு வேதனைக்கும், வலிகளுக்கும் மற்றும் அநீதிக்கும், அதர்மத்திற்கும் முழுமையான, போதுமான மற்றும் மேலான விளக்கம் கிடைக்கும்” என்று ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் (Oswald Chambers) கூறியுள்ளார்.
இன்று நம்முடைய வாழ்வில் பதிலற்ற கேள்விகளை எதிர்நோக்கும் நாம், தேவனுடைய அன்பிலும் வாக்குத்தத்தங்களிலும் உதவியையும் நம்பிக்கையையும் காணலாம்.