அநேக சிறு பிள்ளைகளைப் போல நானும் கிறிஸ்மஸை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவேன். மிகவும் எதிர்பார்ப்புடன் கிறிஸ்மஸ் மரத்தின் அடியிலிருந்து எனக்கு என்ன விளையாட்டுச் சாமான், பொம்மை கிடைக்குமென்று ஆவலுடன் தொட்டுப் பார்ப்பேன். ஆகவே எனக்கு வயதானவுடன் சட்டையும், கால்சட்டையும் எனக்கு பரிசாக கிடைக்க ஆரம்பித்தவுடன் மனம் சோர்ந்து போனேன். பெரியவர்களுக்கு கிடைக்கும் பரிசுகள் அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியை தராது. சென்ற ஆண்டு கிறிஸ்மஸிற்கு எனது பிள்ளைகள் பிரகாசமான நிறங்களும், அலங்கார வடிவமைப்பு கொண்ட மிக நேர்த்தியான காலுறைகளை எனக்கு பரிசாகக் கொடுத்தார்கள் நான் மிகவும் இளம் வயதுடையவனாக உணர்ந்தேன். அதன்மேல் ஒட்டப்பட்டிருந்த குறிப்புத் தாளில் “ஓரே அளவு எல்லோருக்கும் பொருந்தும்” என்று குறிக்கப்பட்டிருந்த வார்த்தைகள் வயது வந்தவர்கள் கூட அவ்வுறைகளை அணிந்து கொள்ளலாம் என்ற நிச்சயத்தை எனக்குக் கொடுத்தது.

“ஒரே அளவு அனைவருக்கும் பொருந்தும்” என்ற அந்த வார்த்தைகள் இயேசு அனைவருக்கும் உரியவர் என்ற கிறிஸ்மஸ் நற்செய்தியான பரிசை எனக்கு நினைப்பூட்டியது. சமுதாயத்தின் அடிமட்டத்திலிருந்த மேய்ப்பர்களுக்கு தூதர்களின் கிறிஸ்மஸ் கீதம் மூலம் அச்செய்தி அறிவிக்கப்பட்டது அதை நிரூபிக்கிறது. சமுதாயத்தில் மிக முக்கியமானவர்களும், ஐசுவரியவான்களுமாகிய சாஸ்திரிகள் நட்சத்திரத்தைப் பின்பற்றி வந்து, கிறிஸ்து பாலகனை பணிந்து கொண்டதின் மூலம் கிறிஸ்மஸ் செய்தி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

இயேசு அவரது ஊழியத்தை துவங்கியபின் ஒரு நாள் இரவு நேரத்தில் யூத மதத் தலைவர்களில் மிக முக்கியமான ஒருவர் வந்து இயேசுவை சந்தித்தார். அவர்களது உரையாடலின் மத்தியில் “விசுவாசிக்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவரண்டை வரலாம்” என்று இயேசு அழைப்பு விடுத்தார். கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைக்கும் அந்த எளிய செயல், அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு நித்தய ஜீவனை அருளுகிறது. (யோவான் 3:16)

இயேசு ஏழைகளுக்கும் தள்ளப்பட்டவர்களுக்கு மட்டும் உரியவர் என்றோ அல்லது புகழ் வாய்ந்த ஐசுவரியவான்களுக்கு மட்டும் உரியவராக இருந்திருந்தால், நம்மில் அநேகருக்கு அந்த நித்திய ஜீவனை அடையும் தகுதி கிடைத்திருக்காது. ஆனால் கிறிஸ்து அனைவருக்கும் உரியவர். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்றோ, ஐசுவரியவான், ஏழை என்றோ அல்லது சமுதாய உயர்நிலையை வைத்தோ இயேசு சொந்தமானவராக இருக்க இயலாது. அவர் அனைவருக்கும் உரியவர். அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரே பரிசு இயேசு தான்.