மாடலினோ, ஒரு கட்டடம் கட்டும் தொழிலாளி திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை, கட்டடங்களின் சுவர்களைக் கட்டுவான், கூரைகளைப் பழுது பார்ப்பான் அவன் மிகவும் அமைதியானவன், நம்பிக்கைக்குரியவன், கடின உழைப்பாளி. வெள்ளிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரை, மலைகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு தேவனுடைய வார்த்தைகளை போதிக்கச் சென்று விடுவான். மாடலினா “நகூஅட்ல்” என்ற மெக்சிகன் மொழி பேசுவான். ஆகவே அம்மலைப் பகுதியிலுள்ள மக்களுக்கு அவர்களுடைய மொழியில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை எளிதாக பகிர்ந்து கொள்வான். 70 வயதிலும் அவன் வீடுகளைக் கட்டுவதோடு, தேவனுடைய குடும்பத்தைக் கட்டும் பணியையும் செய்தான்.
அவனுடைய உயிருக்கு பலமுறை அச்சுறுத்தல்கள் ஏற்பட்டன. இரவில் திறந்த வெளியில் தூங்கி உள்ளான். வாகன விபத்தினாலும் கீழே பலமுறை விழுந்ததினாலும், மரணத்தின் விளிம்பிற்கே சென்று வந்துள்ளான். பலமுறை ஊர்களை விட்டு வெளியே தள்ளப்பட்டுள்ளான். ஆனால் அவன் எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமென்று தேவனால் அழைக்கப்பட்டானோ, அதை மகிழ்ச்சியோடு தேவனுக்கென்று செய்து வருகிறான். மக்கள் கர்த்தரை அறிந்து கொள்ள வேண்டுமென்று அவன் நம்புவதால் அதற்கான பணி செய்ய தேவையான பெலனிற்காக தேவனையே சார்ந்துள்ளான்.
மாடலினாவின் உண்மைத் தன்மை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சுற்றிப் பார்த்து, அது பற்றிய செய்தியை இஸ்ரவேல் மக்களுக்கு கொண்டு வரும்படி, மோசேயினால் அனுப்பப்பட்ட காலேப், யோசுவா இவர்களது உண்மைத் தன்மையை எனக்கு நினைப்பூட்டியது (எண்ணாகமம் 13; யோசுவா 14:6-13) அவர்கள் இருவருடன் சென்ற மற்றவர்கள், அங்கு வசித்து வந்த மக்களைக் கண்டு பயந்தார்கள். ஆனால் காலேப்பும், யோசுவாவும் நிச்சயமாக தேவன் அந்த தேசத்தை சுதந்தரிக்கச் செய்வார் என்று நம்பினார்கள்.
இன்று நம்மிடம் ஒப்புவிக்கப்பட்ட பணி மாடலினா, மற்றும் காலேப் யோசுவா செய்துவந்த பணிகளிருந்து வேறுபட்டதாக இருக்கலாம். ஆனால் நமது நம்பிக்கை, அவர்களது நம்பிக்கையைப் போலவே இருக்கலாம். மற்றவர்களிடம் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை பகிர்ந்து கொள்ள நம்மை நாமே சார்ந்திருக்காமல், தேவனுடைய பெலத்தையே சார்ந்திருக்கிறோம்.