C.S.லூயிசும் அவரது முத்த சகோதரன் வாரன் என்ற வார்ணியும், வின்யாடு என்ற இடத்திலுள்ள ஆங்கிலேய போர்டிங் பள்ளியில் பல ஆண்டுகளாக மிகவும் கஷ்டத்துடன் படித்து வந்தனர். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அங்குள்ள அனைவருடைய வாழ்க்கையையும், தாங்க முடியாத துன்பத்திற்குள்ளாக்கக்கூடிய கொடுமையானவர். பல ஆண்டுகள் கழித்து மந்த அறிவுடையவன் என்று குறைவாக மதிக்கப்பட்ட வார்ணி கீழ்க்கண்ட குறிப்பை எழுதியுள்ளான். “இப்பொழுது எனது வயது 64க்கு மேலாகிறது. வாழ்க்கையின் எந்த நிலையிலும் வின்யாடில் இருந்ததை விட நல்ல நிலையில் உள்ளேன் என்று நினைவு கூராத நேரமே கிடையாது.” அதுபோலவே நம்மில் அநேகர் நமது வாழ்க்கையில் ஏற்பட்ட இருண்ட கஷ்டமான நேரங்களை நினைவு கூர்ந்து முன்பு இருந்ததை விட இப்பொழுது நல்ல நிலைமையில் உள்ளோம் என்ற நன்றியுடன் இருக்கிறோம்.

சங்கீதம் 40:1-5ல் தாவீதின் மனச் சோர்வான நிலைமையில் அவரைக் காப்பாற்றிய தேவனை நோக்கி கதறினதைக் குறிக்கிறது. “பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின் மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி, நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்” (சங் 40:2-3) என்று தாவீது கூறுகிறான்.

ஆனால் மன அழுத்தத்திலிருந்தும், நம்பிக்கையற்ற நிலைமையிலிருந்தும் மீட்கப்படுவது, வாழ்க்கையில் அரிதாக ஒரே ஒரு முறை நடக்கும் செயலல்ல. தேவனுடைய இரக்கம், அன்பு, உண்மை ஆகியவற்றிற்காகத் தாவீது மறுபடியும், மறுபடியும் கெஞ்சுவதை சங்கீதம் 40 தொடர்ந்து விளக்குகிறது. ( வச. 11- 16)

மனம் சோர்ந்திருக்கும் வேளையில் நாமும் கூட தாவீதோடு இணைந்து “நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்” (வச. 17) என்று கூறலாம்.