ஒரு இசையை ரசிக்கும் ஒவ்வொருவரும் அதை வெவ்வேறு விதமான கோணங்களில் ரசிக்கிறார்கள். அந்த இசையை இயற்றியவர், அவரின் கற்பனைக்குள்ளாக அதைக் கேட்கிறார். ரசிகர்கள் அவர்களது புலன்களிலும் உணர்வினாலும் கேட்கிறார்கள். இசைக்கருவிகளை இயக்கும் குழுவிலுள்ள அங்கத்தினர்கள் அவர்களுக்கு அருகிலுள்ள இசைக்கருவிகளின் சத்தத்தின் மூலம் இசையைக் கேட்கிறார்கள்.
ஒரு வகையில் நாம் அனைவரும் தேவனது இசைக்குழுவிலுள்ள அங்கத்தினர்கள். பொதுவாக நாம் நமக்கு அருகிலுள்ள இசையையே கேட்கிறோம் அனைத்து வழிகளிலும் இசையை நாம் ரசிக்கும் சமநிலை இல்லாதபடியினால் “இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன்”. (யோபு 30:9) என்று மிகவும் உபத்திரவத்திற்குள்ளான யோபு போல இருக்கிறோம்.
பிரபுக்களும், அதிகாரிகளும் அவனை எவ்வளவாக மதித்தார்களென்று யோபு நினைவு கூருகிறான். “என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணை நதிபோல ஓடிவந்தது” (யோபு 29:6) என்று அவனது முன்பு இருந்த வாழ்க்கையைப்பற்றி யோபு கூறுகிறான். ஆனால் இப்பொழுதோ அனைவராலும் பரிகாசப்படுத்தபடுபவனாக இருந்தான், “என் சுரமண்டலம் புலம்பலாக மாறினது” (யோபு 30:31) என்று யோபு புலம்புகிறான். யோபுவின் வாழ்க்கை என்ற இசைக்குழுவில் மேலும் அதிகமான இசைகள் இருந்தன. ஆனால் யோபு முழுமையான அந்த இசையைக் கேட்கவில்லை.
ஒரு வேளை இன்று நீங்கள் உங்களது வயலின் இசைக் கருவியினால் இசைக்கப்பட்ட துக்ககரமான இசையை மட்டும் கேட்கலாம். மனம் தளர்ந்து போகாதிருங்கள் உங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் தேவனால் இயற்றப்பட்ட இசையாகும். அல்லது ஒருவேளை புல்லாங்குழலினால் இசைக்கப்பட்ட இனிய ராகத்தை ரசித்துக் கொண்டிருக்கலாம். அதற்காக தேவனைத் துதித்து உங்களது சந்தோஷத்தை யாராவது ஒருவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவனின் தலைசிறந்த இசையாகிய இரட்சிப்பை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இறுதியில் அனைத்தும் அவரது நல்நோக்கங்களுக்காக செயல்படும். தேவன் தாமே நமது வாழ்க்கையின் இசை இயக்கனராக உள்ளார். அவரது இசை எல்லா விதத்திலும் பரிபூரணமானது. நாம் அவரை நம்பலாம்.