சிறந்த அன்பு
இயேசுவின் சிலுவை தியாகத்தை நினைவுகூரும் அந்த புனித வாரத்தில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் தியாகமான அன்பை நினைவுகூர்ந்து அவருடைய உயிர்த்தெழுதலை கொண்டாடும்வேளையில், தென்மேற்கு பிரான்சில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கி சூடு நடத்தி அங்கிருந்த இருவரைக் கொன்றான். பேச்சு வார்த்தைக்கு பின்னர், அவன் தன் கைவசம் பிடித்துவைத்திருந்த மக்களை விடுவித்தான்;. ஆனால் அவனுடைய பாதுகாப்புக்காக அதில் ஒரு பெண்ணை மட்டும் பினையக்கைதியாய் பிடித்து வைத்திருந்தான். ஆபத்தை அறிந்த போலீஸ் அதிகாரி அர்னாட் பெல்ட்ரேம், எதிர்பாராத ஒன்றைச் செய்தார். அவர் அவன் பிடித்து வைத்திருந்த பெண்ணுக்கு பதிலாக, தன்னை பிடித்து வைத்துக்கொள்ளும்படிக்கு முன்வந்தார். தீவிரவாதியும் அதை ஒப்புக்கொண்டு அவளை விடுவித்தான். ஆனால் அதற்கடுத்து நடந்த சண்டையில், பெல்ட்ரேம் காயமடைந்து பின்னர் இறந்துபோனார்.
அந்த போலீஸ் அதிகாரியை நன்கு அறிந்த போதகர் ஒருவர், அவருடைய அந்த துணிச்சலான செய்கையை தேவன் மீதான விசுவாசத்திற்கு ஒப்பிட்டு யோவான் 15:13ஐ மேற்கோள் காண்பிக்கிறார்: “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.” பூமியில் தன்னுடைய கடைசிபோஜனத்தை புசித்த இயேசு இவ்வார்த்தைகளை தன்னுடைய சீஷர்களைப் பார்த்து கூறினார். “நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும்” (வச. 12) என்று போதித்த அவர், ஒருவர் தன் சிநேகிதருக்காக ஜீவனைக் கொடுக்க துணிவதே அந்த மெய்யான அன்பு என்று கூறுகிறார் (வச. 13). அதைத்தான் அடுத்த நாளில் அவர் செய்தார். நம்மை பாவத்திலிருந்து மீட்கும்பொருட்டு, அவர் சிலுவையில் தன் ஜீவனையே ஒப்புக்கொடுத்தார்.
அர்னாட் பெல்ட்ரேம் செய்த அந்த துணிச்சலான தியாகத்தை செய்வதற்கு நமக்கு அழைப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் தேவனுடைய அன்பில் நிலைத்திருக்கும்போது, நம்முடைய மாம்ச திட்டங்களை விட்டுவிட்டு, அவருடைய அந்த சிறந்த அன்பின் மேன்மையை மற்றவர்களுக்கு அறிவிக்க பிரயாசப்படுவோம்.

தோலுக்கு உள்ளே கிரியை
சிறுவயதில் நானும் என் சகோதரியும் அடிக்கடி மோதிக் கொண்டேயிருப்போம். அதில் ஒரு குறிப்பிட்ட தருணம் என் நினைவில் இன்னும் இருக்கிறது. நாங்கள் இருவரும் சத்தத்தை உயர்த்தி ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருந்தவேளையில், அவள் சொன்ன ஒரு காரியம் என்னால் மன்னிக்கவே முடியாத வகையில் இருந்தது. எங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பகைமையைக் கண்ட என் பாட்டி, “தேவன் உங்களுக்கு வாழ்க்கையில் ஒரேயொரு சகோதரியைத் தான் கொடுத்திருக்கிறார். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பரிவு காண்பிக்க பழக வேண்டும்” என்று ஒருவரையொருவர் நேசிக்க வேண்டிய எங்களது பொறுப்பை எங்களுக்கு எடுத்துச் சொன்னார். எங்களை அன்பினாலும் புரிதலினாலும் நிரப்பும்பொருட்டு தேவனிடத்தில் நாங்கள் ஜெபித்தபோது, ஒருவரையொருவர் நாங்கள் எந்தவிதத்தில் காயப்படுத்தினோம் என்பதையும் எப்படி மன்னிக்கவேண்டும் என்பதையும் தேவன் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.
கோபத்தையும் கசப்பையும் உள்ளுக்குள் வைத்திருப்பது சாதாரணமாய் தெரியலாம். ஆனால் தேவனின் துணையோடு நம்முடைய எரிச்சலின் ஆவியை விட்டுவிட்டு, தேவன் கொடுக்கும் சமாதானத்தை நாம் உணரவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (எபேசியர் 4:31). இந்த மாம்சத்தின் உணர்வுகளுக்கு அடிமைப்படாமல், கிறிஸ்துவை மாதிரியாய் வைத்து, ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை மன்னித்ததுபோல, நாமும் ஒருவருக்கொருவர் மன்னிப்பை செயல்படுத்துவோம் (வச. 32). நமக்கு மன்னிப்பது கடினமாய் தோன்றினால், அவர் ஒவ்வொரு நாளும் நமக்கு அருளும் கிருபையை நாம் சார்ந்துகொள்வோம். நாம் எத்தனை முறை விழுந்தாலும், அவர் கிருபை நம்மை விட்டு விலகுவதில்லை (புலம்பல் 3:22). தேவன் நம்முடைய இருதயங்களில் இருக்கும் கசப்பை நீக்குவதற்கு நமக்கு உதவிசெய்வார். அதினால் நாம் நம்பிக்கையோடு அவருடைய அன்பிற்கு உட்பட்டவர்களாய் நிலைத்திருப்போம்.

மலைமுகடுகளின் பாதை
ஒரு கவிஞரும், ஆன்மீக எழுத்தாளருமான கிறிஸ்டினா ரோசெட்டி, தனக்கு எதுவும் எளிதில் வரவில்லை என்பதை உணர்ந்தார். அவள் தனது வாழ்நாள் முழுவதும் மனச்சோர்வு மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டார். அவளுடைய வாழ்க்கையில் மூன்று நிச்சயதார்த்தங்கள் நிறுத்தப்பட்ட துக்கத்தை தாங்கினார். இறுதியில் அவள் புற்றுநோயால் மரித்துப்போனாள்.
தாவீது இஸ்ரவேலின் ராஜரீகத்தில் அமர்த்தப்பட்டபோது, அவன் ஒரு வெற்றிகரமான போர்வீரனாக அடையாளப்படுத்தப்பட்டான். ஆனால் அவனுடைய வாழ்நாள் முழுவதிலும் அவன் பாடுகளை சகிக்கவேண்டியிருந்தது. அவனுடைய ஆட்சியின் இறுதியில், அவனுடைய நம்பிக்கைக்கு பாத்திரமாயிருந்த நபர்களோடு சேர்ந்து அவனுடைய சொந்த குமாரனே அவனுக்கு விரோதமாய் திரும்பினான் (2 சாமுவேல் 15:1-12). ஆகையினால் தாவீது ஆசாரியனாகிய அபியாத்தார், சாதோக் மற்றும் தேவனுடைய உடன்படிக்கை பெட்டியையும் எடுத்துக்கொண்டு எருசலேமை விட்டு ஓடினான் (வச. 14,24).
அபியாத்தார் தேவனுக்கு பலிகளை செலுத்திய பின்பு, தாவீது ஆசாரியர்களைப் பார்த்து, “தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத் திரும்ப வரப்பண்ணுவார்” (வச. 25) என்று சொன்னான். அவனுடைய குழப்பத்தின் மத்தியிலும் தாவீது, “(தேவன்) உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்பாராகில், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்” (வச. 26). அவனால் தேவனை நம்ப முடியும் என்பதை அறிந்திருந்தான்.
கிறிஸ்டினா ரோசெட்டி தேவனை நம்பினாள். அவளுடைய வாழ்க்கை நம்பிக்கையோடு நிறைவடைந்தது. நாம் கடந்து செல்லும் பாதையானது, மலைமுகடுகளாய் தென்படலாம். ஆனால் அங்கே நம்மை விரிந்த கைகளோடு வரவேற்கும் நம்முடைய பரமபிதா நமக்காய் காத்திருக்கிறார்.

நீலக்கல் திருச்சபை மணிகள்
நீலக்கல் பாறை என்பது ஆச்சரியமான ஒரு பாறை. அதை அடைக்கும்போது, அதில் சிதறும் சில நீலக்கற்கள் இசையொலி ஏற்படுத்தும். “மணியோசை” என்று பொருள்படும் மேன்க்ளோசோக் என்ற ஒரு வெல்ஷ் கிராமத்தில், பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்த நீலக்கற்களை தேவாலய மணிகளாகப் பயன்படுத்தினர். இங்கிலாந்தின் பிரபலமான ஸ்டோன்ஹென்ச் என்ற நீலக்கற்பாறை மிச்சங்கள், இசையை ஏற்படுத்தும் விதமான அமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க தோன்றுகிறது. சில ஆராய்ச்சியாளர்கள், ஸ்டோன்ஹென்சில் இடம்பெற்றுள்ள இந்த நீலக்கற்கள் அதிலிருந்து இருநூறு மைல் தொலைவில் அமைந்திருந்த இந்த மேன்க்ளோசோக் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கணிக்கிறார்கள்.
இசையை ஏற்படுத்தும் இந்த நீலக்கற்கள் என்பது தேவனுடைய படைப்பில் ஒரு ஆச்சரியமாய் திகழ்கிறது. இயேசு குருத்தோலை ஞாயிற்றில் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது சொன்ன காரியத்தை நினைவுபடுத்துகிறது. ஜனங்கள் இயேசுவைச் சுற்றிலும் கூச்சலிட, அவர்களை அதட்டும்படிக்கு மார்க்கத் தலைவர்கள் இயேசுவை கேட்கிறார்கள். இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக, “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 19:40) என்கிறார்.
நீலக்கற்களினால் இசையெழுப்பக்கூடும் என்றால், கல்லுகளே சிருஷ்டிகரை கூப்பிடும் என்று இயேசு சொல்லுவதை கருத்தில்கொண்டால், நம்மை உண்டாக்கி மீட்டுக்கொண்ட நம்முடைய நேசருக்கு எவ்வளவாய் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்! அவர் நம் அனைத்து துதிகளுக்கும் பாத்திரர். அவருக்கு துதி செலுத்த பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருள்செய்வாராக. அனைத்து சிருஷ்டியும் அவரை பணிகின்றன.

தேவன் நம்மோடு பேசுகிறார்
அறியாத ஒரு எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. பொதுவாய் அதுபோன்ற அழைப்புகளை நான் எடுப்பதில்லை. ஆனால் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அதில் பேசிய நபர், ஒரு சிறிய வேதாகம செய்தியை ஒரு நிமிடத்தில் பகிர்ந்துகொள்ளலாமா என்று கேட்டார். அவர் வெளிப்படுத்தல் 21:3-5இல் உள்ள “கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்” என்ற வசனத்தைக் குறிப்பிட்டு, இயேசுவைக் குறித்தும் அவர் நமக்குக் கொடுக்கும் நிச்சயத்தைக் குறித்தும் குறிப்பிட்டார். நான் இயேசுவை ஏற்கனவே என் சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்டேன் என்று சொன்னேன். அவர் அதை பொருட்படுத்தியதாக தெரியவில்லை. நான் அவரோடு சேர்ந்து ஜெபிக்க அவர் விரும்பினார். அவர் எனக்காய் ஜெபிக்கும்போது, என்னுடைய ஊக்கத்திற்காகவும் பெலத்திற்காகவும் ஜெபித்தார்.
அந்த அழைப்பானது வேதத்தில் இடம்பெற்றுள்ள, சிறுவன் சாமுவேலின் அழைப்பை எனக்கு நினைவுபடுத்தியது (1 சாமுவேல் 3:4-10). சாமுவேல் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, அது ஆசாரியனாகிய ஏலியின் சத்தம் என்று நினைத்துக்கொண்டான். ஆனால் ஏலியின் ஆலோசனையின் பேரில் கடைசி முறை தேவனுடைய சத்தத்தைக் கேட்ட மாத்திரத்தில், “சொல்லும்; அடியேன் கேட்கிறேன்” (வச. 10) என்று பதில் சொன்னான். அதுபோல இரவும் பகலும் தேவன் நம்மோடு பேசக்கூடும். நாம் அவருடைய சத்தத்தை உடனே அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமென்றால், அவருடைய சமூகத்தில் அதிக நேரம் செலவழிக்கிறவர்களாய் இருக்கவேண்டும்.
அந்த அழைப்பை நான் வேறொரு கோணத்திலும் சிந்தித்தேன். நாம் மற்றவர்களுக்கு தேவனுடைய தூதுவர்களாகவும் செயல்பட நேரிடலாம். நாம் மற்றவர்களுக்கு எந்தவிதத்தில் உதவிசெய்யக் கூடும் என்று எண்ணத் தோன்றலாம். தேவனுடைய ஆலோசனையோடு, யாரையாவது தொலைபேசியில் அழைத்து, “நான் உங்களுக்காக இன்று ஜெபிக்கலாமா?” என்ற கேட்க முற்படலாம்