சோதனைகளின் பரிசு
மனிதர்களும் பறக்கலாம் என்று இருவர் கண்டுகொண்டனர். ஆனால், ரைட் சகோதரர்களின் வெற்றிக்கான பாதை அவ்வளவு எளிதல்ல. எண்ணற்ற தோல்விகள், அவமானங்கள், பண நஷ்டங்கள், இருவரில் ஒருவருக்குக் கடுமையான காயம் என்று எல்லாம் இருந்தபோதிலும், சோதனைகள் இந்த சகோதரர்களைத் தடுக்க இயலவில்லை. “அமைதியிருக்கையில் எந்த பறவையும் உயரே எழும்பாது” என்று ஆர்வில் ரைட் உணர்ந்தார். இவர்களின் சுயசரிதை ஆசிரியரான டேவிட் மெக்கலோ இந்த கருத்தைப் பற்றி குறிப்பிடுகையில், “பொதுவாகவே எதிர்ப்பு தான் நாம் உயரே எழும்புவதற்கான உந்துதலைத் தரும்” என்றார். மேலும் மெக்கலோ, “அவர்களின் சந்தோஷம் மலையுச்சியை அடைவதிலல்ல, மாறாக மலை ஏறுவதே அவர்களின் சந்தோஷம்” என்றார்.
அப்போஸ்தலன் பேதுருவும், உபத்திரவப்பட்ட ஆதி திருச்சபைக்கு இதேபோன்ற ஒரு ஆவிக்குரிய கோட்பாட்டைக் கற்பித்தார். அவர்களிடம், “உங்களைச்சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்” (1 பேதுரு 4:12) இருக்கும்படி சொன்னார். இது பாடுகளின் வேதனையை மறைப்பது அல்ல. கிறிஸ்துவிலான எதிர்பார்ப்பு தேவனுக்குள்ளான நமது நம்பிக்கையை வளரச்செய்யும்.
குறிப்பாக, ஆதி கிறிஸ்தவர்களைப் போல இயேசுவின் விசுவாசிகளாக இருப்பதற்கு நாமும் துன்பப்படுகையில் இது நன்றாகப் பொருந்தும். அவர்களுக்கு பேதுரு, “கிறிஸ்துவின் மகிமைவெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்” (வ.13) என்றெழுதினார். மேலும், “நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்” (வ.14) என்றார்.
ரைட் சகோதரரின் குணாதிசயம் அவர்களின் சுயசரிதை ஆசிரியரால் போற்றப்பட்டதுபோல, தேவ அன்பின் சுபாவம் நம்மில் செயல்படுவதைப் பிறர் காணட்டும். நமக்கு எதிரானதை வைத்தே நாம் புதிய மைல்கற்களை எட்டச்செய்வார்.

என் ஜனங்களைப் போக விடு
ஏரன் டக்ளசின் பிரசித்திபெற்ற ஓவியம் “என் ஜனங்களைப் போக விடு”, இதில் அவர் கண்கவர் வர்ணங்களான இளஞ்சிவப்பு நீலம், பச்சை மற்றும் தங்க நிறம் ஆகியவற்றோடு பாரம்பரியமான ஆப்பிரிக்கப் பின்னணியத்தையும் பயன்படுத்தி, வேதாகமத்தின் மோசேயின் கதையோடு கருப்பு அமெரிக்கர்கள் விடுதலையும் நீதியும் பெற்றிடப் பட்ட பாடுகளை இணைத்து நமக்குச் சொல்லியிருப்பார்.
எரியும் முட்செடியில் மோசேக்குத் தேவன் வெளிப்பட்டு, எகிப்தில் இஸ்ரவேலர்கள் இடும் கூக்குரலைத் தான் கண்டதாக அவர் சொன்னதே இந்த ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது. தேவனையும், “நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா” (யாத்திராகமம் 3:10) என்ற அவரது செய்தியையும் ஒரு ஒளிவட்டத்தில் இதன் ஓவியர் அடையாளப்படுத்தியிருப்பார்.
“என் ஜனங்களைப் போக விடு” எனும் ஓவியத்தில், தேவனின் அறிவுறுத்தல்களுக்கு மோசே கீழ்ப்படிதலுடன் மண்டியிட்டிருப்பார், ஆனால் அவரது கண்களோ தன்னை சூழ்ந்திருக்கும் இருளின் பேரலைகளையும், யுத்த குதிரைகளையும் பார்க்கின்றன. இது இஸ்ரவேலர்கள் எக்பித்திலிருந்து வெளியேறுவதற்கு எதிர்கொள்ளக்கூடும் போராட்டங்களைப் பார்வையாளர்களுக்கு நினைப்பூட்டுகிறது. ஆனால்,
ஒளிவட்டம் பிரகாசமாக ஒளிர்ந்து இஸ்ரவேலர்களோடே தேவன் இருப்பதையும் நினைவூட்டுகிறது. இந்த ஓவியம் உண்டாக்கிய உணர்ச்சிகளின் தாக்கம் இன்றும் எதிரொலிக்கின்றன, காரணம் அநீதிக்கு எதிரான போராட்டம் இன்றும் தொடர்கின்றது. உலகெங்கும், அநேகர் தங்கள் வலிமையை உபயோகித்து ஆண்களையும், பெண்களையும், சிறுவர்களையும் ஒடுக்குகின்றனர். இவ்வாறு துன்பப்படுபவர்கள், “சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்” (சங்கீதம் 9:9) என்று தேவனை நோக்கி அபயமிடுகின்றனர். தேவன் அவர்களின் கூக்குரலுக்கு உதவும்படி அவர்களுக்காக நாமும் மன்றாடலாம். மேலும், மோசேயை போல ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக விருப்பத்துடன் செயலாற்றலாம்.

தேவனுக்கென்று இன்னும் கனிகொடுத்தல்
ஒரு பழைய நாட்டுப்புறக் கதையில், ஒரு பெண் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வருவாள், ஒரு நீளமான குச்சியின் இருமுனைகளிலும் இருவாளிகள் இருக்கும், ஒன்று புதிய உறுதியான வாளி, மற்றொன்று விரிசலுள்ள பழைய வாளி. அவள் வீட்டுக்கு வருகையில், புதிய வாளி நிறைந்திருக்கும், ஆனால் பழைய வாளியோ கிட்டத்தட்ட காலியாக இருக்கும். பழைய வாளி குற்ற உணர்ச்சியோடு அவளிடம் மன்னிப்பு கேட்டது. அதைத் திரும்பிப் பார்த்த அந்த பெண், அவளுடைய வழிப்பாதையை அதற்குச் சுட்டிக்காட்டி, “நீ இருக்கும் திசையில், இந்த வழியெங்கும் பூத்திருக்கும் பூக்களைக் கண்டாயா? நீ அவற்றிற்குத் தினமும் நீர்பாய்ச்சுகிறாய், நதிக்குப் போகும் என் பயணத்தையே நீ அழகாக்கிவிட்டாய்” என்றாள்.
இளமையைப் போற்றி புகழும் ஒரு உலகில் நாம் வாழ்கிறோம். இது இளையது, உறுதியானது, வடுக்களற்ற புதியதும், திறனுள்ளதாயும் இருக்கிறது. எனினும் வேதாகமம்; விரிசலுள்ளதும், தண்ணீர் நிற்காததுமான பழையவற்றிலிருந்தும் வலுவற்றதிலிருந்தும் வெளிப்படும் நீதி நிறைந்த ஒரு அழகைக்குறித்து நமக்குச் சொல்கிறது. முதிர்ந்த பாடல் எழுத்தாளர், "நீதிமான் பனையைப் போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்" (சங்கீதம் 92:12) என்றார்.
இப்படியிருக்க, முதுமை என்றால் ஞானம் என்று எப்போதும் அர்த்தமாகாது. ஆனால், இளமை நம் வாழ்க்கைக்குத் தர இயலாத படிப்பினைகளை முதுமை கற்றுத்தரும். காரணம், முதியவர்கள் கொஞ்சம் அதிக காலம் வாழ்ந்துள்ளனர், கொஞ்சம் அதிக அனுபவம் கொண்டுள்ளனர், மேலும் தேவனுக்குள் செழிக்கும்படியான விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் கொஞ்சம் ஆழமாய் வேரூன்றியுள்ளனர். இத்தகைய முதியோர், “முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்” (வ.14).
நமது வாழ்க்கையில், முதியவர்கள் தொடர்ந்து அற்புதமான கனி தருகின்றனர். அதனைக் கவனிக்கவும், அவர்களுக்காக அக்கறைப்படவும் நேரம் ஒதுக்குவோமாக.

இயேசுவோடு ஒப்புரவாகுதல்
“விமானத்தில் ஏற தயாராகுங்கள்” என்ற அழைப்பு சத்தம் தொனித்தது. ஒரு வாலிபர் குழுவின் தலைவனாகவும், சிறப்புச் செய்தியாளராகவும் ஒரு மிஷனரி பயணத்திலிருந்தேன். நுழைவு சீட்டையும், கடவுச்சீட்டையும் எடுக்க என் பையில் துழாவி, அதிர்ந்தேன்! கடவுச்சீட்டு அதில் இல்லை.
என்னை விட்டுவிட்டு என் குழுவினர் விமானம் ஏறினர். புதிய கடவுச்சீட்டு பெற நான்கு நாட்கள் கடுமையாக முயன்றேன். நூற்றுக்கணக்கான தொலைப்பேசி அழைப்புகள், நாட்டின் தலைநகர் வரை பயனற்ற ஒரு பயணம், அங்கிருந்து மீண்டும் என் ஊருக்கு நீண்ட பயணம், பக்கத்து ஊரில் இரண்டு நாட்கள் தங்கியிருத்தல், பின்பு எங்கள் உள்ளூர் அரசியல்வாதியின் அலுவலக உதவியுடன் எனக்கு புதிய கடவுச்சீட்டு கிடைத்து, என் குழுவினரோடு இணைந்தேன்.
கடவுசீட்டு ஒரு எளிய, சிறிய புத்தகம் தான். ஆனால், என் பயணத்திற்கு இருந்த ஒரே உத்தரவாதி அதுமட்டுமே. புதிய கடவுசீட்டை பெற நான் கடினமாய் செயலாற்றினபோதும், இதனை எனது நித்திய பயண இலக்கோடு ஒப்பிடுகையில் மதிப்பற்றதாகவே தோன்றியது. அது இயேசுவின் மீதிருக்கும் விசுவாசமே, ஆம் நமது பாவங்களிலிருந்து இரட்சிப்படையவும், அவருடனான புதிய வாழ்விற்கும் நமக்குள்ள ஒரே உத்தரவாதி அதுவே.
"இப்பொழுதே இரட்சணிய நாள்" (2 கொரிந்தியர் 6:2) என்று வேதாகமம் சொல்கிறது. கிறிஸ்துவில் வெளிப்பட்ட இரட்சிப்பென்னும் விடியலைத்தான் பவுல் இங்கே விவரிக்கிறார். அவரை விசுவாசிக்கும்போது, நாம் தேவனுடைய அன்பையும், அனைத்து சிருஷ்டிக்குமான அவரது மீட்பையும், சீர்பொருத்தும் கிரியையையும் அனுபவிப்போம். இன்றே, “தேவனோடே ஒப்புரவாகுங்கள்” (5:20) என்பதின் பொருளை மெய்யாகவே அறிந்துகொண்டதை நிச்சயப்படுத்திக்கொள்வோம்.

மனம் தளராதீர்கள்
இளைப்பு. சத்யா, தனது புதிய வேலையில் ஒன்பது மாதத்திற்குப்பின் இதை உணர்ந்தான். இயேசுவின் விசுவாசியாக, தனது பணியைச் செய்யவும் சவால்களை எதிர்கொள்ளவும் தேவனின் நியமங்களையே பின்பற்றும்படி நாடினான். ஆனால், மனிதர்கள் சார்ந்த பிரச்சனைகள் நீடித்தன, நிர்வாகத்திலும் சிறிதளவே முன்னேற்றம் இருந்தது. தான் கையாலாகாதவனாக உணர்ந்தான்.
ஒருவேளை, சத்யாவைப் போல நீங்களும் சோர்ந்திருக்கலாம். உங்களுக்கு நல்லது எதுவெனத் தெரியும், ஆனாலும் அதைச் செய்வதற்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பெலனற்றவர்களாக உணரலாம். மனம் தளராதீர்கள். அப்போஸ்தலன் பவுல் நம்மை இந்த வார்த்தைகளால் ஊக்குவிக்கிறார்: "நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்" (கலாத்தியர் 6:9) இங்கே, ஒரு விவசாயியின் உருவகத்தைப் பயன்படுத்துகிறார். அநேக விவசாயிகள் அறிந்துள்ளதுபோல, விதைப்பது கடினமான வேலை.
“ஆவிக்கென்று” (வ.8) விதைப்பதும் கடினமான வேலையே. ஆவியானவரின் நடத்துதலைப் பின்பற்றி, அவரை கனப்படுத்தும் வாழ்வை வாழ நாடுகின்ற இயேசுவின் விசுவாசிகள் களைத்து, மனம் தளரக்கூடும். ஆனால், நாம் அவரது வாக்கைப் பற்றிக்கொண்டால், அறுவடையும் வரும். நாம் ”நித்தியஜீவனை” அறுப்போம் (வ.8. பார்க்க: யோவான் 17:3) கிறிஸ்து திரும்பி வருகையில் தேவ ஆசீர்வாதமாக நாம் பெறப்போகும் மகா விளைச்சல்; இந்த வாழ்க்கையிலும் அவரை அறிவதன்மூலம் உண்டாகும் நம்பிக்கையும் சந்தோஷமும் நமக்குண்டு. நாம் ஏற்ற காலத்தில் அறுப்போம், இந்த காலநேரமானது பருவங்களாலோ காலசூழ்நிலைகளாலோ அல்லாமல் பூரணமான தேவனுடைய சித்தத்தின்படியே தீர்மானிக்கப்படுகிறது. அறுவடை வரும்வரை, தேவபெலத்தால் நாம் தொடர்ந்து விதைப்போம்.