வகை  |  odb

தேவனின் பார்வையில் ஒவ்வாதது அல்ல

வருடாந்திர தேசிய கால்பந்து போட்டிகளுக்கான தேர்வுகளின் போது, ​​தொழில்முறை கால்பந்து அணிகள் புதிய வீரர்களைத் தேர்வு செய்கின்றன. வருங்கால வீரர்களின் திறமை மற்றும் உடல் தகுதியை மதிப்பிடுவதற்குப் பயிற்சியாளர்கள் ஆயிரக்கணக்கான மணிநேரங்களைச் செலவிடுகின்றனர். 2022 இல், ப்ராக் பர்டி கடைசி 262வது இடத்தைப் பிடித்தார் மற்றும் "திரு. ovvvadhavar” என்று முத்திரை குத்தப்பட்டார். கடைசியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் புனைபெயர் அது. வரும் போட்டி தொடரில் அவர் விளையாடுவார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், சில மாதங்களுக்குப் பிறகு, பர்டி தனது அணியை இரண்டு பிளேஆஃப் (சமநிலை உடைக்கும் போட்டிகள்) வெற்றிகளுக்கு வழிநடத்தினார். உண்மை என்னவென்றால், அணியின் நிர்வாகிகள் எப்போதும் திறனைக் கண்டறியும் வேலையைத் திறம்படச் செய்வதில்லை. நாமும் அப்படிதான்.

பரீட்சயமான பழைய ஏற்பாட்டுக் கதை ஒன்றில், ஈசாயின் குமாரரிலிருந்து இஸ்ரேலின் அடுத்த ராஜாவைத் தேர்ந்தெடுக்க சாமுவேல் தீர்க்கதரிசியைத் தேவன் அனுப்பினார். சாமுவேல் அந்த ஆண்மக்களைப் பார்த்தபோது, ​​அவர்களின் உடல் தோற்றத்தால் அவர் சற்றே தடுமாறினார். ஆனால் தேவன் அவரிடம், "நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்" (1 சாமுவேல் 16:7) என்றார். மாறாக, தேவன் அவரை மூத்தவனையோ அல்லது பராக்கிரமசாலியையோ தெரிந்துகொள்ளும்படி வழிநடத்தாமல்,  இளையவனும் வெளித்தோற்றத்தில் பொருத்தமற்றவனாகவும் தோன்றும் தாவீதையே தேர்ந்தெடுக்கும்படி வழிநடத்தினார். இவரே பின்னர் இஸ்ரவேலின் மிகப் பெரிய பூமிக்குரிய ராஜாவானார்.

மக்களை மதிப்பிடுவதில் அடிக்கடி நாம் ஏன் மோசமாகத் தவறுகிறோம்? " மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்" (வ.7) என்பதை நமது வேதாகம பகுதி நமக்கு நினைவூட்டுகிறது. ஒரு பணிக்குழுவில் பணியாற்றவோ அல்லது ஒரு தன்னார்வ குழுவில் சேவைசெய்யவோ எவரையாகிலும் தேர்ந்தெடுக்கும்படி நாம் கேட்கப்படும்போது, ​​தேவனுக்குமுன்  விலையேறப்பெற்ற சுபாவங்களின் அடிப்படையில் தேர்வுகளைச் செய்வதற்கான ஞானத்தைத் தரும்படி அவரிடம் கேட்கலாம்.

 

கிறிஸ்துவில் ஒரு பண்பட்ட வாழ்வு

நாங்கள் எங்கள் வீட்டைக் கட்டியபோது, ​​​​அது ஒரு சரளைக்கல் சாலையின் முடிவிலே, சேறும் காலியுமான இடத்தை விடச் சற்று உயரமாக இருந்தது. சுற்றியிருந்த மலையடிவாரங்களுக்கு ஏற்ப பொருந்துவதற்குப் புற்கள், மரங்கள் மற்றும் புதர்கள் எங்களுக்குத் தேவைப்பட்டன. புல்வெளி வெட்டும் கருவிகளை எடுத்துக்கொண்டு வேலைக்குச் செல்லும்போது, ​​மனிதர்களுக்காகக் காத்திருந்த முதல் தோட்டத்தைப் பற்றி நான் நினைத்தேன்: “நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை.. நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை” (ஆதியாகமம் 2:5).

ஆதியாகமம் 1 இல் உள்ள சிருஷ்டிப்பின் விவரிப்பில், தேவன் "நல்லது" அல்லது "மிகவும் நன்றாயிருந்தது" (வ. 4, 10, 12, 18, 21, 25, 31) என்று மீண்டும் மீண்டும் தனது படைப்பை மதிப்பீடு செய்ததைக் கூறுகிறது. இருப்பினும், அது முழுமையடையவில்லை. ஆதாமும் ஏவாளும் நிலத்தைப் பண்படுத்த வேண்டியிருந்தது, தேவனின் படைப்பின் மீதான உக்கிராணத்துவத்தை  செயல்படுத்த வேண்டும் (வ.28). அவர்கள் நிலைமாறாத பரதீசில் அல்ல, மாறாகப் பராமரிப்பும் மேம்பாடும் தேவைப்படும் ஒன்றில் வாழ்வதற்காக ஏற்படுத்தப்பட்டனர்.

ஆதியிலிருந்தே, தேவன் தனது சிருஷ்டிப்பில் தன்னுடன் பங்காளியாக மனிதர்களை அழைத்தார். அவர் அதை ஏதேன் தோட்டத்தில் செய்தார்; மேலும் நாம் கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்போது, அவர் நம்மில் உண்டாக்கும் "புதிய சிருஷ்டியை" கொண்டும் அதைச் செய்கிறார் (2 கொரிந்தியர் 5:17). இரட்சிக்கப்படுகையில், நாம் பூரணம் ஆக்கப்படவில்லை. அப்போஸ்தலன் பவுல் சொல்வது போல், "இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்" (ரோமர் 12:2), “தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு” (8:29) அவருக்குப் பிரியமான வாழ்க்கையை நாம் நாடும்போது தேவன் நம்மில் செயல்படுகிறார்.

நிலத்தைப் பராமரிப்பதோ அல்லது கிறிஸ்துவில் நம்முடைய புதிய வாழ்க்கையைப் பராமரிப்பதோ, தேவன் நமக்கு வரமாக ஈந்துள்ளார் நாம் அதைப் பண்படுத்த வேண்டும்.

இயேசுவின் மீது நம் கண்களைப் பதித்தல்

வினிதாவின் கண்கள் அவள் அருகே இருந்த சாம்பல் நிற காரின் மீதே பதிந்திருந்தன. நெடுஞ்சாலையிலிருந்து வெளியேற அவள் பாதையை மாற்ற வேண்டியிருந்தது, ஆனால் ஒவ்வொரு முறையும் அவள் வாகனத்தை முந்திச் செல்ல முயலும்போது, ​​மற்ற ஓட்டுநரும் வேகத்தைக் கூட்டியதாகத் தோன்றியது. இறுதியாக, அவள் முன்னால் முந்த முடிந்தது. தன் அற்பமான வெற்றியின் தருணத்தில், வினிதா பின் கண்ணாடியில் பார்த்துச் சிரித்தாள். அதே சமயம், அவள் செல்லவேண்டிய இடத்தை, தான் கடந்து செல்வதைக் கவனித்தாள்.

ஒரு கசப்பான புன்னகையுடன், அவள்: "நான் முந்திச் செல்வதிலேயே நோக்கமாய் இருந்தேன், ஆகவே நான் வெளியேறும் வழியைத் தவறவிட்டேன்" என்று சொல்லிக்கொண்டாள்.

தேவனுடைய வழிகளில் நடக்க வேண்டும் என்ற நமது விருப்பத்திலும் இப்படிப்பட்ட சறுக்கல் ஏற்படலாம். யூத நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிக்காததற்காக மதத் தலைவர்கள் இயேசுவை நெருக்குகையில் (யோவான் 5:16), நியாயப்பிரமாணம் சுட்டிக்காட்டிய நபரைக் கவனிக்காமல்,  அவர்கள் நியாயப்பிரமாணத்தை படிப்பதிலும் செயல்படுத்துவதிலும் மிகவும் உறுதியாகிவிட்டனர் என்று எச்சரித்தார்: “என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (வ.39-40).

தேவனுக்கு முன்பாக நீதிபரராய் இருக்க முயன்றதில், மதத் தலைவர்கள் யூத நியாயப்பிரமணத்தை தாங்கள் பின்பற்றுவதுமின்றி, மற்றவர்களும் பின்பற்றுவதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தினர். அவ்வாறே, தேவனுக்கேற்ற வைராக்கியத்தில் சபை கூடுதல், வேத வாசிப்பு, சமூக சேவை போன்ற நல்ல காரியங்களை நாமும் செய்து, பிறரையும் நம்முடன் சேரச் செய்யலாம். ஆனால் நாம் அவைகளின் மீது அதிக கவனம் செலுத்தி, அவற்றை நாம் யாருக்காகச் செய்கிறோமோ, அந்த இயேசுவானவரையே கவனிக்கத் தவறக்கூடும்.

நாம் செய்யும் அனைத்திலும், கிறிஸ்துவின் மீதே நம் கண்களைப் பதிந்திருக்க உதவும்படி தேவனிடம் கேட்போம் (எபிரெயர் 12:2). அவர் ஒருவரே "வழியும் சத்தியமும் ஜீவனும்" (யோவான் 14:6) ஆனவர்.

தேவனின் விசாலமான இடம்

இறையியலாளர் டோட் பில்லிங்ஸ் குணப்படுத்த முடியாத இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தபோது, ​​தனது உடனடி மரணத்தைத் தொலைதூர அறைகளில் உள்ள விளக்குகள் அணைவது அல்லது அணையும்படி மினுமினுப்பது போலவும் இருப்பதாக விவரித்தார். "ஒன்று மற்றும் மூன்று வயதுக் குழந்தையின் தந்தையாக, நான் அடுத்த சில தசாப்தங்களை  ஒரு பரந்த வெளியாக நினைக்க முனைந்தேன். நேட்டியும் நத்தானியேலும் வளர்ந்து முதிர்ச்சியடைவதை நான் பார்ப்பேன் என்று கருதினேன். ஆனால் நோய் கண்டறியப்பட்டதில். ஒரு குறுகல் நடைபெறுகிறது"

இந்த வரம்புகளைப் பற்றிச் சிந்திக்கையில், பில்லிங்ஸ் சங்கீதம் 31 இல், தேவன் தாவீதை எப்படி "விசாலத்திலே" (வ.8) வைத்தார் என்பதையும் அவதானிக்கிறார். தாவீது தனது சத்துருக்களால் ஒடுக்கப்படுவதைப் பற்றிப் பேசினாலும், தேவனே தனது பலத்த துருகமும் அடைக்கலமான அரணுமானவர் என்று அவர் அறிந்திருந்தார் (வ.2). இந்த பாடலின் மூலம், சங்கீதக்காரன் தேவன் மீதான தனது நம்பிக்கைக்குக் குரல் கொடுத்தார்: "என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது" (வ.15).

தேவன் மீது நம்பிக்கை வைப்பதில், பில்லிங்ஸ் தாவீதை பின்பற்றுகிறார். இந்த இறையியலாளர், கணவன், தந்தை தனது வாழ்க்கையில் குறுகலை எதிர்கொண்டாலும், அவரும் ஒரு விசாலமான இடத்தில் வாழ்கிறார் என்பதை ஒப்புக்கொள்கிறார். ஏன்? ஏனென்றால், கிறிஸ்துவின் பலியின் மூலம் மரணத்தின் மீது தேவன் பெற்ற வெற்றி என்பது, “கற்பனைக்கு எட்டாத விசாலமான இடமான” கிறிஸ்துவில் நாம் வாழ்வதைக் குறிக்கிறது. அவர் விளக்குவது போல், "பரிசுத்த ஆவியானவரால் அவருடைய வாழ்க்கையில் பங்கெடுப்பதை விடப் பரந்த மற்றும் விசாலமானது எது?"

நாமும் புலம்பி அழலாம், ஆனால் நம்மை வழிநடத்தவும் வழிகாட்டவும்  தேவனிடம் அடைக்கலம் புகலாம் (வ.1,3). நாம் ஒரு விசாலமான இடத்தில் வாழ்கிறோம் என்பதை தாவீதுடன் உறுதிப்படுத்த முடியும்.