சிறை கம்பிகளின் பின்
ஒரு நட்சத்திர தடகள வீரர் மேடையில் ஏறினார், அது விளையாட்டரங்கம் அல்ல. சிறைச்சாலையில் உள்ள முந்நூறு கைதிகளிடம் ஏசாயாவின் வார்த்தைகளைப் பகிர்ந்துகொண்டார்.
எனினும் இந்த தருணம், ஒரு பிரபலமான விளையாட்டு வீரரைக் காட்சிப்படுத்தல் பற்றியது அல்ல, மாறாக உடைந்து புண்பட்டிருக்கும் கடல் போன்ற திரள் ஆத்துமாக்களைப் பற்றியது. இந்த சிறப்பான தருணத்தில், தேவன் கம்பிகளுக்குப் பின்பே காட்சியளித்தார். இதை ஒரு பார்வையாளர் இனையதளத்தில் , “சிறைச்சாலை ஆராதனையாலும், துதியாலும் பொங்கி வழிந்தது” என்று பதிவிட்டார். ஆண்கள் ஒன்றாக அழுது ஜெபித்தனர். இறுதியில், சுமார் இருபத்தேழு கைதிகள் கிறிஸ்துவுக்கு தங்கள் வாழ்வை ஒப்புக்கொடுத்தனர்.
ஒருவகையில் நாம் எல்லோருமே பேராசை, சுயநலம் மற்றும் அடிமைத்தனத்தின் கம்பிகளுக்குப் பின்னால் சிக்கி, நாமே உருவாக்கிய சிறைகளில் இருக்கிறோம். ஆனால் ஆச்சரிய விதமாக, தேவன் காட்சியளிக்கிறார். அன்று காலையில் சிறையில் முக்கிய வசனம், “இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா?” (ஏசாயா 43:19) என்பதே. “முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்” (வ.18) என்று இந்த பகுதி நம்மை ஊக்குவிக்கிறது, ஏனெனில் தேவன், “நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப் போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்” (வ.25) என்று கூறுகிறார்.
ஆயினும் தேவன் தெளிவாகக் கூறுகிறார்: “என்னையல்லாமல் ரட்சகர் இல்லை” (வ.11). கிறிஸ்துவுக்கு நம் வாழ்வைக் கொடுப்பதன் மூலமே நாம் விடுதலை பெறுகிறோம். நம்மில் சிலர் அதைச் செய்ய வேண்டும்; நம்மில் சிலர் அதைச் செய்துள்ளோம், ஆனாலும் நம் வாழ்வின் எஜமான் யார் என்பதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். கிறிஸ்து மூலம் தேவன் உண்மையிலேயே “ஒரு புதிய காரியத்தை” செய்வார் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். அப்படியானால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!

வரவேற்பு விரிப்பு
எனது உள்ளூரின் நவீன அங்காடியில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு விரிப்புகளைப் பார்த்துக்கொண்டே நடக்கையில், அவற்றின் மீது பதிக்கப்பட்டிருந்த வாசகங்களைக் கவனித்தேன். “வணக்கம்!”, இதய வடிவில் “இல்லம்” போன்றவை. நான் வழக்கமான ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன், “வரவேற்பு” அதை வீட்டில் வைத்த பின்னர், என் உள்ளதை ஆராய்ந்தேன். தேவன் விரும்புவதை உண்மையிலேயே என் இல்லம் வரவேற்கிறதா? துன்பப்படும் அல்லது குடும்ப பிரச்சனையால் துயரப்படும் சிறுபிள்ளையை? தேவையோடிருக்கும் அண்டை வீட்டாரை? அவசரமாக அழைக்கும் வெளியூரிலிருந்து வந்திருக்கும் குடும்ப அங்கத்தினரை?
மாற்கு 9 இல், அவரது பரிசுத்த பிரசன்னத்தைக் கண்டு பிரமித்து நின்ற பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானை விட்டு (வ.1-13) கீழே பிசாசு பிடித்திருந்த தனது மகன் குணமாவான் என்ற நம்பிக்கை இழந்த தகப்பனைக் கண்டு மகனைக் குணமாக்க, இயேசு மறுரூப மலையிலிருந்து இறங்கினார் (வ.14-29). பின்னர் இயேசு சம்பவிக்கப்போகும் தனது மரணத்தைப் பற்றிய தனிப்பட்ட படிப்பினைகளைச் சீடர்களுக்கு வழங்கினார் (வ.30-32). அவர்களோ அவருடைய கருத்தை மிகவும் தவறாகப் புரிந்துகொண்டனர் (வ.33-34). மறுமொழியாக, இயேசு ஒரு சிறுபிள்ளையை தம் மடிமீது அமர்த்தி, “இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்” (வ. 37). இங்கு ஏற்றுக்கொள்ளுதல் என்ற சொல்லுக்கு விருந்தினராகப் பெறுவதும், ஏற்பதும் என்று பொருள். தம்முடைய சீடர்கள் அனைவரையும் வரவேற்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். மதிக்கப்படாதவர்களையும், அசௌகரியம் உண்டாக்குகிறவர்களையும் கூட நாம் அவரை வரவேற்பது போல ஏற்றுக்கொள்ளவேண்டும்.
நான் எனது வரவேற்பு கம்பளத்தை மனதிற்கொண்டு, அவருடைய அன்பை நான் எப்படி மற்றவர்களுக்கு வழங்குகிறேன் என்று சிந்தித்தேன். இது இயேசுவைப் பொக்கிஷமான விருந்தினராக வரவேற்பதன் மூலம் தொடங்குகிறது. அவர் விரும்பும் வழியில் பிறரை வரவேற்கும்பொருட்டு, என்னை வழிநடத்திட நான் அவரை அனுமதிப்பேனா?

ஒரு வைர தாட்கட்டை
"ஜேக்கப் டயமண்ட்" உலகின் ஐந்தாவது பெரிய வைரமாகக் கருதப்படுகிறது. இந்த நிறமற்ற வைரம், ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் தனது மறைந்த தந்தையின் காலணியில் அதைக் கண்டுபிடிக்கும் வரை பல ஆண்டுகளாக இந்த விலைமதிப்பற்ற கல் தொலைந்து போனதாகவும் மறக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. வினோதமாக, நிஜாம் இந்த அரிய பொக்கிஷத்தை இந்திய ரிசர்வ் வங்கியால் 108 கோடி ரூபாய்க்குப் பாதுகாக்கும் வரை, பல ஆண்டுகளாக தாட்கட்டையாக பயன்படுத்தினார். அவரது தந்தை தனது காலணியில் விட்டுச்சென்ற வைரத்தின் மூலம் நிஜாமின் வாழ்க்கையைச் செழிப்பாக்கினார்.
அப்போஸ்தலனாகிய பவுல், கொரிந்து சபையாரின் கவனத்தை இயேசுவிடமாய் திருப்புகிறார்; அவர் நம்முடைய பிதாவாகிய தேவனால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட விலையேறப்பெற்ற பொக்கிஷம் (வ.4). கொரிந்தியர்கள் இயேசுவோடு அவருடைய ஆவியின் மூலம் கொண்டிருந்த ஐக்கியத்தின் காரணமாக அவர்கள் "சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டனர்" என்று பவுல் எழுதுகிறார் (வ.5-9). கிறிஸ்து என்ற இந்த விலைமதிப்பற்ற ஈவை மதிக்கும்படி அவர் அவர்களைத் தூண்டுகிறார். அவர்கள் அவரை உடையவர்களாய் இருந்தால், அவர்களுக்கு ஒன்றும் குறைவிருக்காது என்பதையும் அவர் நினைவுபடுத்துகிறார். இது தவிர, தேவன் அவர்களுக்கு வழங்கிய பல "ஆவிக்குரிய வரங்களை" கருத்தில் கொள்ளுமாறு பவுல் சபையாரை வலியுறுத்துகிறார் (வ.5-7). கிறிஸ்துவாகிய இந்தப் பொக்கிஷத்தைச் சபையானது பாதுகாக்கும் போது, அவர் திரும்பும் நாள் வரை குற்றமற்றவர்களாக இருக்க அது அவர்களுக்கு உதவும் என்று அவர் நம்புகிறார்.
வாழ்க்கையில் நாம் அதிருப்தி அடையும்போது, குறிப்பாக நம்மிடம் இல்லாததைப் பற்றி முணுமுணுக்கும்போது, நாம் இயேசுவைக் கொண்டிருப்பதால் நாம் உள்ளார்ந்த ஐசுவரியவான்கள் என்பதை நினைவில் கொள்வோம். இழப்பு, நிதி நெருக்கடி, குடும்பக் கஷ்டம் அல்லது வேறு ஏதேனும் கொந்தளிப்பு ஏற்படும் நேரங்களில், நாமும் நம் தகப்பனால் எல்லா வகையிலும் உண்மையிலேயே "சம்பூரணம்" அடைந்துள்ளோம் என்பதை நினைவில் கொள்வோம். பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தின் மூலம் கிறிஸ்தென்னும் பொக்கிஷத்தை அவர் நம்மில் விதைத்துள்ளார் (2 கொரிந்தியர் 1:22).

தேவனை பற்றிக்கொள்ளுதல்
ரேகாவை பற்றி சுமதி கூறும்போது, அவள் தன் தோழியின் “தேவன் மீதான ஆழமான, காலத்தால் சோதிக்கப்பட்ட விசுவாசம்” மற்றும் நாட்பட்ட பலவீனமான நிலையில் வாழும் போதும் அவள் வளர்த்துக் கொண்ட சகிப்புத்தன்மையைப் பெரிதாகப் பேசுவாள். பதினைந்து வருடங்களுக்கும் மேலாக, ரேகா தனது அறையின் சிறிய ஜன்னலிலிருந்து நிலவைக் கூட பார்க்க முடியாமல் படுத்த படுக்கையாய் கிடந்தாள். ஆனால் அவள் நம்பிக்கையை இழக்கவில்லை; அவள் தேவனை நம்புகிறாள்; வேதாகமத்தைப் படிக்கிறாள், கற்கிறாள். இதை, “மனச்சோர்வுக்கு எதிரான கடுமையான யுத்தத்தின் போது எவ்வாறு உறுதியாக நிற்பது என்று அவள் அறிவாள்” எனச் சுமதி விவரிக்கிறாள்.
ரேகாவின் உறுதியையும் விடாமுயற்சியையும், பெலிஸ்தியரிடமிருந்து தப்பியோட மறுத்த தாவீது ராஜாவின் காலத்திலிருந்த எலெயாசார் எனும் வீரனோடு சுமதி ஒப்பிடுகிறாள். முறிந்தோடிய படைகளோடு சேருவதற்குப் பதிலாக, அவன் “எழும்பித் தன் கைசலித்து, தன் கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளுமட்டும் பெலிஸ்தரை வெட்டினான்” (2 சாமுவேல் 23:10). தேவனுடைய வல்லமையின் மூலம், “அன்றையதினம் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்” (வச. 10). சுமதி அவதானிப்பதுபோல், எலெயாசார் உறுதியுடன் வாளை பற்றிக்கொண்டதுபோல, ரேகாவும் “தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தை” (எபேசியர் 6:17) பற்றிக்கொள்கிறாள். அதிலே, தேவனிலே, அவள் தன் பெலனைக் காண்கிறாள்.
நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தாலும் சரி அல்லது நாள்பட்ட நோயால் மனச்சோர்வடைந்தாலும் சரி, நம் நம்பிக்கையின் களஞ்சியத்தை ஆழப்படுத்தவும், சகிக்கும்படி நமக்கு உதவவும் நாமும் தேவனை நோக்கிப் பார்க்கலாம். கிறிஸ்துவில் நாம் நமது பலத்தைக் காண்கிறோம்.

கிரியையில் அன்பு
கணவனைப் பிரிந்த அந்த தாயார், ஐந்து வருடங்களுக்கும் மேலாக நற்குணசாலியான முதியவரின் வீட்டருகே வசித்து வந்தார். ஒரு நாள், அவள் நலனில் அக்கறை கொண்டு, அவள் வீட்டுக் கதவைத் தட்டினார். “ஒரு வாரமாக உன்னைப் பார்க்கவில்லையே, உன்னை நலம் விசாரிக்கவே வந்தேன்” என்று அவர் கூறினார். அவரது “கரிசனையான விசாரிப்பு” அவளை ஊக்கப்படுத்தியது. சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால், தன்னையும் தன் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும் அன்பான மனிதனைப் பாராட்டினாள்.
இலவசமாகக் கொடுப்பதற்கும் விலையேறப்பெற்றதாய் பெறுவதற்குமான இரக்கம் எனும் வெகுமதியால், வெறுமனே நலலவர்களாக இருப்பதைக் கடந்து கிறிஸ்துவின் அன்பைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் பிறருக்கு ஊழியம் செய்கிறோம். எபிரேயரின் எழுத்தாளர், இயேசுவை விசுவாசிப்பவர்களிடம், “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்” (எபிரெயர் 13:15) என்றார். பின்னர் தங்கள் விசுவாசத்தை வாழ்ந்து காண்பிக்கும் பொருட்டு, “அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்” (வ. 16) என்று ஆக்கியோன் எழுதினார்.
இயேசுவின் நாமத்தை அறிக்கையிட்டு, அவரை ஆராதிப்பது மகிழ்ச்சியும் பாக்கியமும் ஆகும். ஆனால் இயேசுவைப் போல நாம் அன்பு செலுத்தும்போது, தேவன் மீதான உண்மையான அன்பை வெளிப்படுத்துகிறோம். நம் சொந்தக் குடும்பங்களுக்குள்ளும் அதற்கு அப்பாலும் பிறரை நன்றாக நேசிக்க நம்மை ஆற்றல் படுத்தவும், அப்படிப்பட்ட வாய்ப்புகள் குறித்து உணர்வுள்ளவர்களாக்கவும் பரிசுத்த ஆவியானவரிடம் மன்றாடலாம். அத்தகைய ஊழிய தருணங்களின் மூலம், கிரியை செய்யும் அன்பின் வல்லமையான செய்தியின் மூலம் இயேசுவைப் பகிர்ந்து கொள்வோம்.