கிறிஸ்துவுக்கென நன்மதிப்பு
புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரி நாட்களில், சார்லி வார்டு இரண்டு விளையாட்டுகளில் மாணவர் அணி வீரராக இருந்தார். 1993 ஆம் ஆண்டில், இளம் பந்தெறி வீரனாக, கல்லூரி அளவில் நாட்டின் சிறந்த அமெரிக்கக் கால்பந்து வீரராக ஹெய்ஸ்மேன் கோப்பையை வென்றார். மேலும் அவர் கூடைப்பந்து அணியிலும் சிறந்து விளங்கினார்.
ஒருநாள் போட்டிக்கு முன்னான உரையாடலில், அவரது கூடைப்பந்து பயிற்சியாளர் தனது வீரர்களுடன் பேசும்போது சில மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இது சார்லிக்கு பிடிக்கவில்லை என்பதைக் கவனித்த அவர், "சார்லி, என்னவாயிற்று ?" என்று கேட்க, வார்டு, “அய்யா, உங்களுக்குத் தெரியும், பயிற்சியாளர் பவுடன் [கால்பந்து பயிற்சியாளர்] இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை, மேலும் அவர் எங்களை மிகவும் கடினமாக விளையாட வைப்பார்" என்றார்.
கிறிஸ்துவை பிரதிபலிக்கும் சார்லியின் சுபாவம், இந்தப் பிரச்சினையைப் பற்றி அவரது கூடைப்பந்து பயிற்சியாளரிடம் மென்மையாகப் பேசச் செய்தது. உண்மையில், அவர் சார்லியிடம் பேசியதை குறித்து: "ஒரு தூதன் உங்களைப் பார்ப்பது போல் இருந்தது" என்று அந்த பயிற்சியாளர் ஒரு நிருபரிடம் கூறினார்.
அவிசுவாசிகளிடம் நல்மதிப்பையும், கிறிஸ்துவுக்கென உண்மையுள்ள சாட்சியையும் பேணுவது கடினம். ஆனால் அதே சமயம், அவர் நமக்கு உதவி செய்து வழிநடத்தும்போது, இயேசுவின் விசுவாசிகள் அவரைப் போலவே மேலும் வளர முடியும். தீத்து 2ல், வாலிபரும், மற்றும் பொதுவாக அனைத்து விசுவாசிகளும், "தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும்" (வ.6) மற்றும் "நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பே(சவும்)சுகிறவனுமாயிருப்பாயாக” (வ.8) அழைக்கப்படுகிறார்கள்.
கிறிஸ்துவின் பெலத்தால் நாம் அவ்வாறு வாழும்போது, அவரைக் கனப்படுத்துவது மட்டுமல்லாமல், ஒரு நன்மதிப்பையும் உருவாக்குவோம். தேவன் நமக்குத் தேவையான ஞானத்தை வழங்குவதால், நாம் சொல்வதற்குச் செவிகொடுக்க ஜனங்களுக்கு நியாயமான காரணம் உண்டாயிருக்கும்.
ஒரு நன்றியுளள்ள மறுமொழி
தீமோத்தேயு என்ற ஆஸ்திரேலிய மாலுமி பச்சையான மீன் மற்றும் மழைநீர் இவற்றைக் கொண்டே மூன்று மாதங்கள் உயிர் வாழ்ந்தார். பசிபிக் பெருங்கடலில், நிலத்திலிருந்து 1,200 மைல் தொலைவில், புயலால் உருக்குலைந்த தனது கட்டுமரத்தோடு ஒரு தீவில் தனியாகச் சிக்கிக்கொண்டார். ஆனால், மெக்சிகன் நாட்டு டுனா படகின் ஊழியர்கள், மோசமாகச் சேதமடைந்திருந்த அவரது படகைக் கண்டு, அவரை மீட்டனர். பின்னர், மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டு மெலிந்திருந்த அவர், "என் உயிரைக் காப்பாற்றிய கப்பல் தலைவருக்கும் மீன்பிடி நிறுவனத்திற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்!" என்றார்.
தனது மிகவும் விரும்பத்தகாத அனுபவத்திற்குப் பின்னர் தீமோத்தேயு நன்றி கூறினார். ஆனால் தீர்க்கதரிசி தானியேல், ஒரு நெருக்கடிக்கு முன்னும், பின்னும், அதின் மத்தியிலும் தனது நன்றியுள்ளத்தை வெளிக்காட்டினார். மற்ற யூதர்களுடன் யூதாவிலிருந்து பாபிலோனுக்கு சிறைப்பட்டுப்போன (தானியேல் 1:1-6) தானியேல் மேலான அதிகாரத்திற்கு உயர்ந்தார். ஆனாலும் அவரைக் கொல்ல விரும்பும் மற்ற தலைவர்களின் அச்சுறுத்தல் இருந்தது (6:1-7). அவருடைய எதிரிகள், பாபிலோன் ராஜாவிடம் சென்று, "ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும்" நோக்கி எவன் விண்ணப்பம்பண்ணினாலும் , "அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட" (வ. 7) ஆணையில் கையெழுத்திடச் செய்தனர். ஒன்றான மெய்தேவனை நேசித்து, சேவித்த மனிதனாகிய தானியேல் என்ன செய்வார்? அவர் “முன் செய்துவந்தபடியே , . . . தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்” (வ. 10). அவர் நன்றி செலுத்தினார், மேலும் தேவன் அவரது உயிரைக் காப்பாற்றி, அவருக்கு கனத்தைக் கொடுத்து (வ. 26-28) அவரது நன்றியுள்ள உள்ளத்திற்கு வெகுமதி அளித்தார்.
அப்போஸ்தலன் பவுல் எழுதியது போல், "எஎல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்(ய)யுங்கள்" (1 தெசலோனிக்கேயர் 5:18) தேவன் நமக்கு உதவுவாராக. நாம் ஒரு நெருக்கடியை எதிர்கொள்கிறோமோ அல்லது அதிலிருந்த மீண்டு வந்தோமோ, நன்றியுடன் கூடிய பிரதிபலன் அவரைக் கனப்படுத்துகிறது, மற்றும் நம் விசுவாசம் நிலைக்க உதவுகிறது.
தடை உத்தரவு
நீதிமன்றத்தில், ஒரு நபர் தேவனுக்கு எதிரான தடை உத்தரவிற்காக மனுத் தாக்கல் செய்தார். தேவன் தன்னிடம் குறிப்பாக இரக்கமற்றவராகவும், கடுமையான எதிர்மறையான அணுகுமுறையை கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். தலைமை நீதிபதி, இவ்வழக்கைத் தள்ளுபடி செய்தார். அந்த நபருக்கு நீதிமன்றத்தின் உதவி அல்ல, மாறாக அவருக்கு மனநல உதவி தேவை என்று கூறினார். இது ஒரு நகைச்சுவையான உண்மைக் கதை, ஆனால் சோகம் நிறைந்தது.
நாம் என்ன விதிவிலக்கானவர்களா? நமக்கும் சில சமயங்களில், "எனக்கு போதும் தேவனே, தயவாய் நிறுத்தும்" என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா? இதையே யோபு செய்தார். அவர் தேவனை வழக்கிற்குட்படுத்தினார். சொல்லொண்ணா துயரங்களைத் தனிப்பட்ட முறையில் சகித்த பிறகு, யோபு, "தேவனோடே நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன்" (யோபு 13:3) என்கிறார், தேவனோடு நீதிமன்றத்தில் வழக்காடுவதைக் கற்பனை செய்கிறார் (9:3). "உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக" (13:21) என்று அவர் ஒரு தடை உத்தரவையும் போடுகிறார். தான் குற்றமற்றவர் என்பது மட்டும் யோபின் வழக்கு வாதம் அல்ல, ஆனால்,"நீர் என்னை ஒடுக்கி.. பார்க்கிறது நமக்கு நன்றாயிருக்குமோ?" (10:3) என்று தேவன் தன்னிடம் நியாயமற்ற கடுமையோடு இருப்பதாகப் பார்த்தார்.
சில சமயங்களில் தேவன் நியாயமற்றவர் என்பதுபோல உணர்கிறோம். உண்மையில், யோபின் கதை சிக்கலானது, எளிதான பதில்கள் அதிலில்லை. இறுதியில் தேவன் யோபுக்குண்டான அனைத்தையும் மீட்டெடுக்கிறார், ஆனால் அது எப்போதும் நமக்கான அவரது திட்டம் அல்ல. யோபுவின் இறுதி ஒப்புதலில் சில தீர்ப்பை நாம் காணலாம்: "ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன்" (42:3). கருப்பொருள் யாதெனில், நாம் அறியவே முடியாத காரணங்கள் தேவனிடம் உள்ளன, அதில் அற்புதமான நம்பிக்கை இருக்கிறது.
தேவனால் மன்னிக்கப்படுதல்
தேசிய விடுமுறையான நன்றிசெலுத்தும் நாளையொட்டி, அமெரிக்க ஜனாதிபதி கருணை மன்னிப்பு வழங்கும் முன், இரண்டு வான்கோழிகளை வெள்ளை மாளிகைக்கு வரவேற்கிறார். நன்றியறிதல் நாளுக்கான பாரம்பரிய உணவில் பிரதானமாக வழங்கப்படுவதற்குப் பதிலாக, அவை தங்கள் ஆயுளெல்லாம் பாதுகாப்பாக ஒரு பண்ணையில் வளர்கின்றன. வான்கோழிகளால் தங்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தைப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், வித்தியாசமான இந்த வருடாந்திர பாரம்பரியமானது, மன்னிப்பிலுள்ள ஜீவனளிக்கும் வல்லமையை எடுத்துக்காட்டுகிறது.
எருசலேமில் மீந்திருந்த இஸ்ரவேலர்களுக்கு ஒரு வலுவான எச்சரிக்கையை எழுதியபோது, மன்னிப்பின் முக்கியத்துவத்தைத் தீர்க்கதரிசி மீகா புரிந்துகொண்டார். தீமையை விரும்பி; பேராசை, அநீதி மற்றும் கொடுமையில் ஈடுபட்டதற்காக (6:10-15) ஒரு சட்டப்பூர்வமான புகாரைப் போலவே,தேவன் தேசத்திற்கு எதிராக சாட்சியமளிப்பதை மீகா பதிவு செய்தார் (மீகா 1:2).
இத்தகைய கலகங்கள் மத்தியிலும், தேவன் என்றென்றைக்கும் கோபமாக இரார், மாறாக "அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னி(ப்பார்)க்கிற" (7:18) என்ற வாக்கில் வேரூன்றிய நம்பிக்கையுடன் மீகா முடிக்கிறார். சர்வத்திற்கும் சிருஷ்டிகரும் நியாயாதிபதியுமாக, ஆபிரகாமுக்கு அவர் அளித்த வாக்கின் பொருட்டு (வ. 20) நமக்கு எதிரிடையாக நம்முடைய செயல்களை அவர் கணக்கிட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அவராலேயே அறிவிக்க முடியும். இறுதியில், இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் இது நிறைவேற்றப்பட்டது.
தேவனுடைய தரத்திற்கேற்ப வாழத் தவறிய எல்லா வழிமுறைகளிலிருந்தும் மன்னிக்கப்படுதல் என்ற பரிசுக்கு நாம் பாத்திரர் அல்லவே, எனினும் இது நமக்கு மகத்தான ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது. அவருடைய முழுமையான மன்னிப்பின் பலன்களை நாம் மேலும் மேலும் புரிந்து கொண்டு, நன்றியறிதலுடன் அவரை துதிப்போமாக.
கிறிஸ்துவின் ஒளி பிரகாசமாக ஒளிர்கிறது
மிச்சிகனில் உள்ள ஹைலேண்ட் பார்க் தெருக்களில் விளக்குகள் அணைந்தபோது, ஒளிக்கு மற்றொரு மூலமான சூரியன், அங்கு இரவில் ஒளியேற்றியது. மின் பயன்பாட்டு நிறுவனத்திற்குப் பணம் செலுத்த நிதியின்றி அந்நகரம் தவித்தது. மின்வாரியத்தினர் தெருவிளக்குகளை அணைத்து, 1,400 மின்கம்பங்களிலிருந்த மின்விளக்குகளை அகற்றினர். இதனால் நகரவாசிகள் பாதுகாப்பின்றி இருளில் மூழ்கினர். "இங்கே சில குழந்தைகள் பள்ளியிலிருந்து வருகிறார்கள், இங்கே விளக்குகள் இல்லை. அவர்கள் தெருவில் குத்துமதிப்பாகத்தான் நடக்க வேண்டும்" என்று ஒரு நகரவாசி செய்தி குழுவினரிடம் கூறினார்.
நகரத்தில் சூரிய சக்தியில் இயங்கும் தெருவிளக்குகளை நிறுவ ஒரு இலாப நோக்கற்ற குழு அமைக்கப்பட்டபோது, நிலைமை மாறியது. மனிதவள அமைப்பு ஒருங்கிணைந்து பணியாற்றி, எரிசக்தி கட்டணங்களில் நகரத்தின் பணத்தை மிச்சம் பிடித்தும், அதே நேரத்தில் நகரவாசிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் ஒளிக்கான ஆதாரத்தையும் பெற்றுத் தந்தது.
கிறிஸ்துவுக்குள்ளான நம் வாழ்வில், நமது நம்பகமான ஒளி ஆதாரம் தேவகுமாரனாகிய இயேசுவே. அப்போஸ்தலன் யோவான் எழுதியது போல், “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை” (1யோவான் 1:5). யோவான், "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்" (வ.7) என்று குறிப்பிட்டார்.
இயேசுவே தன்னை, "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” (யோவான் 8:12) என்று அறிவித்தார். தேவனின் பரிசுத்த ஆவியானவர் நம் ஒவ்வொரு அடியையும் வழிநடத்துகையில், நாம் ஒருபோதும் இருளில் நடக்க மாட்டோம். அவரது வெளிச்சம் எப்போதும் பிரகாசமாக ஒளிர்கிறது.