
சாப்பிடு, மீண்டும் சாப்பிடு
கெரி, பால் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்ட போது, இருவருக்குமே சமைக்கத் தெரியாது. ஒரு நாள் மாலை கெரி, மெக்ரொனி வகை உ.ணவை அதிகமாக தயாரித்தாள். எனவே அந்த தம்பதியர் மறுநாளும் அதே உணவையே எடுத்துக் கொண்டனர். மூன்றாம் நாள் பால் அதிக அளவு பாஸ்தாவை தயாரித்தார். எனவே அவர்கள் அந்த வாரம் இறுதி வரை அதே உணவையே எடுத்துக்கொள்ளலாமெனத் திட்டமிட்டனர். அன்று இரவு அவர்கள் சாப்பிட உட்கார்ந்த போது கெரி, “இவ்வகை உணவு எனக்கு சலித்துவிட்டது’’ என்றாள்.
இஸ்ரவேலர் நாற்பது ஆண்டுகள் ஒரே வகை உணவைச் சாப்பிட்டார்களென்றால், அது எப்படி இருந்திருக்கும். ஒவ்வொரு நாள் காலையும், தேவன் அவர்களுக்களித்த இனிமையான உணவைச் சேகரித்தனர். (மறுநாள் ஓய்வு நாளாயிருந்தாலன்றி, மீதமொன்றும் வைக்க கூடாது (யாத். 16:23-26). அவர்களுடைய திறமையினால் அதைச் சுட்டனர், வேக வைத்தனர் (வச. 23), ஆனாலும், எகிப்தில் தாங்கள் அநுபவித்த கொடுமைக்கும், அடிமைத்தனத்திற்கும் பலனாகக் கிடைத்த அந்த அற்ப உணவிற்காக அவர்கள் ஏங்கினர்! (வச. 3, எண். 11:1-9).
நாமும் கூட, சில வேளைகளில் நம் வாழ்வு முன்பிருந்தது போல இல்லையே என ஏங்கினதுண்டு, அல்லது ஒரு வேளை ஒரே வகையான வாழ்க்கை முறை நம்மை சலிக்கச் செய்யலாம். இஸ்ரவேலர்கள் தேவன் மீது நம்பிக்கை வைக்கவும், ஒவ்வொரு நாளும், அவரையே சார்ந்திருக்கும் படியும், தேவன் அவர்களின் தேவைகளனைத்தையும் உண்மையாய் கொடுத்து வந்தார் என்பதை யாத்திராகமம் 16ஆம் அதிகாரம் விளக்குகின்றது.
நம்முடைய தேவைகளனைத்தையும் தருவதாக தேவன் வாக்களித்துள்ளார். அவர் நம்முடைய ஏக்கங்களை நிறைவேற்றுவார், -நம்முடைய ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறார்
(சங். 107:8).

உடனடி பரிகாரம்
அந்த வன வழிகாட்டியைப் பின் தொடர்ந்து சென்று, மிகவும் பழமை வாய்ந்த, பஹாமியன் காட்டிலுள்ள தாவரங்களைக் குறித்து, அவர் கொடுக்கும் குறிப்புகளை வேகமாக எழுதிக் கொண்டேன். சில மரங்களின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றார். அந்தக் காட்டிலுள்ள ஒரு நச்சு மரம் கருமையான, ஒரு வகை திரவத்தை வெளியிடும். அது நம்மேல் பட்டால் வலியையும், ஊறலையும், தடிப்பையும் கொண்டு வரும். ஆனால் அதனைக் குறித்து கவலை கொள்ள வேண்டாம், ஏனெனில், இதற்கான மாற்று மருந்து அம்மரத்தின் அருகிலேயே கிடைக்கும். “எலீமி மரத்தின் சிவந்த பட்டையை சற்று வெட்டினால், அவ்விடத்தில் ஒரு வகை பிசின் சுரக்கும். அதை ஊறல் உள்ள இடத்தில் தடவினால், ஊறல் உடனே மறைந்து விடும்” என்றார்.
நான் ஆச்சரியத்தில் திகைத்து நின்றேன். நான் இத்தகைய ஒரு மீட்பின் செய்தியை இந்தக் காட்டினுள் எதிர்பார்க்கவேயில்லை. எலிமி மரப்பிசினில் நான் இயேசுவைக் கண்டேன். பாவமாகிய நச்சு நம்மைத் தீண்டும் போது, பரிகாரியாகிய இயேசு நம்மண்டை ஆயத்தமாக இருக்கின்றார். அந்த மரத்தின் பட்டையைப் போன்று, இயேசுவின் இரத்தம் நமக்கு சுகத்தைத் தருகின்றது.
மனித குலம் சுகத்தைப் பெற்றுக்கொள்ள ஏங்கி நிற்பதை ஏசாயா தீர்க்கதரிசி புரிந்து கொண்டார். பாவத்தின் விளைவு நம்மை வியாதிக்கு உட்படுத்தியது. நம்முடைய பாடுகளை தன்மீது ஏற்றுக்கொண்ட தேவக் குமாரனின் துன்பத்தின் வழியாக நமக்குத் தேவையான சுகம் வருகிறது என ஏசாயா தீர்க்கன் வாக்களிக்கின்றார் (ஏசா. 53:4). அந்த தேவக் குமாரன் தான் இயேசு கிறிஸ்து. நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் அவர் காயப்பட்டார், நாம் அவர் மீது நம்பிக்கை வைக்கும் போது, நம்முடைய பாவத்தின் ஆக்கினையிலிருந்து மீட்கப்பட்டு, சுகம் பெறுவோம் (வச. 5) நம்முடைய பாவங்களை கண்டுணர்ந்து, அவற்றை தள்ளி விட்டு, நமக்குத் தரப்பட்டுள்ள புதிய அடையாளத்தை பெற்றுக் கொண்டவர்களாய், பாவ வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றவர்களாய் வாழ, நம் வாழ்நாளெல்லாம் செலவிட்டாலும், அது இயேசுவிடமிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.

நான் யார் ?
டேவ், தன்னுடைய வேலையை ஆர்வத்தோடு செய்து கொண்டிருந்தான். ஆனால், நீண்ட காலமாக அவன் ஏதோவொன்றை நோக்கி இழுக்கப் படுவதை உணர்ந்தான். இப்பொழுது ,அவன் தன் கனவினை நனவாக்க, தேவபணி செய்யும் படி காலெடுத்து வைத்துள்ளான். ஆனால் அவனுக்குள் அநேக சந்தேகங்கள் தோன்றிக் கொண்டேயிருந்தன.
அவன் தன் நண்பனிடம்,” நான் இந்த பணிக்குத் தகுதியானவன் அல்ல” என்றான். “இந்தப் பணிக் குழு என்னுடைய உண்மையான குணத்தை அறிந்திருக்கவில்லை. நான் நல்லவனல்ல” என்று கூறினான்.
டேவ்வைப் போன்ற ஒருவரான மோசேயை நினைத்துப் பார்ப்போம். அவருடைய தலைமைத்துவ பண்பும், பெலனும், பத்து கட்டளைகளுமே நம் நினைவிற்கு வருகின்றன. ஆனால் மோசே, ஒரு மனிதனைக் கொன்று விட்டு வனாந்திரத்திற்கு ஓடிப்போனதை நாம் மறந்து விடுகிறோம். அவருடைய முன் கோபத்தையும், தேவன் அழைத்த போது உடனே சரியெனக் கூறத் தயங்கியதையும் நாம் பெரியதாக நினைப்பதில்லை.
தேவன் புறப்படும் படி கட்டளை கொடுத்த போது (யாத். 3:1-10), மோசே தனக்கு போதிய தகுதி இல்லையென தட்டிக் கழிக்கின்றான். அவன் தேவனோடு நீண்ட வாக்கு வாதங்களைச் செய்கின்றான். தேவனிடம், “நான் எம்மாத்திரம் ?” (வச. 11) எனக் கேட்கின்றான். தேவன் அவனிடம் “நான் இருக்கிறவராக இருக்கிறேன்” (வச. 14) என்கின்றார். இந்த மர்மப்பெயரை நம்மால் விளக்க முடியாது. நம்முடைய விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட தேவன் தன்னுடைய முடிவில்லாத தன்மையை மோசேக்கு விளக்குகின்றார்.
நம்மை பெலவீனனாக காட்டும் உணர்வு நமக்குள் வலுவாக உள்ளது. தேவன் நம்மை பயன்படுத்துவதற்குத் தடையாக நாம் இதனை பயன்படுத்துவோமாயின் நாம் அவரை துக்கப்படுத்துகின்றோம். நம்முடைய பெலவீனங்களைப் பெரிதாக்கி, அவருடைய பணியைச் செய்ய மறுக்கும் போது, தேவன் நமக்குப் போதுமானவராக இல்லை என கூறுகின்றோம்.
நான் யார்? என்பது கேள்வியல்ல, இருக்கிறவராக இருக்கிறேன் என்றவர் யார் என்பதே கேள்வி.

அதுவே அலுவலகமும் கூட
வடக்கு இங்கிலாந்தில் அமைந்துள்ள லங்காஷயரைக் கடந்து சென்ற போது, என் கண்கள் பசுமையான மலைத் தொடர்களையும், அதன் அடிவாரத்தில் கல்வேலிகளில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டு மந்தைகளையும் பார்த்தன. திரண்ட மேகங்கள் பிரகாசமான வானத்தில் நகர்ந்து கொண்டிருந்தன. இக்காட்சி என் மனதில் பதிந்துவிட்டது. நான் காணச் சென்ற தியான மையத்தில் பணிபுரியும் பெண்ணிடம் இக்காட்சியைக் குறித்து சொன்ன போது, அவள்,” என்னுடைய விருந்தாளிகள் இவற்றைக் குறித்துச் சொல்லும் போதேயன்றி, மற்றபடி நான் அவற்றை கவனிப்பதேயில்லை, ஏனெனில் நாங்கள் இப்பகுதி யிலேயே அநேக ஆண்டுகளாக வசிக்கின்றோம். நாங்கள் விவசாயிகளாக இருந்த போது, இக்காட்சிகள் தான் எங்கள் அலுவலகமும் கூட !” என்றாள்.
நம் கண்களுக்கு எதிரே இருக்கின்ற அழகினை- அதுவே நம் வாழ்வின் ஒரு பகுதியாக அமைந்து விடும் போது, நாம் அதைக் காணத் தவறி விடுகின்றோம். இயேசுவின் விசுவாசிகளான நாம், நம்முடைய ஆன்மீக கண்களைத் திறக்கும் படி ஆவியானவரைக் கேட்கும் போது, தேவன் நம்மில் செயல்படுகின்ற விதங்களை புரிந்து கொள்ள முடியும். இதனையே பவுலும் எபேசு சபை விசுவாசிகளுக்கு எழுதுகின்றார். இயேசு கிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர், தம்மை அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும், தெளிவையும் தருகின்ற ஆவியை அவர்களுகளுக்கு கொடுக்க வேண்டுமென கேட்கின்றார் (எபே. 1:17). மேலும், நமக்கு உண்டாயிருக்கிற சுதந்திரத்தினுடைய ஐசுவரியம் இன்னதென்றும், தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும் அறியும்படிக்கு தேவன் நமக்கு பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென வேண்டிக் கொள்கின்றார் (வ.18-19).
தேவன் நம்மிலும், நம் மூலமாகவும் செயல்படுவதை நாம் காணும் படி தேவனுடைய ஈவாகிய கிறிஸ்துவின் ஆவியானவர் நம்மை விழிப்புள்ள வர்களாக்குகின்றார். முன்னொரு நாள் அலுவலகமாக காட்சியளித்த்தை, இப்பொழுது தேவனுடைய ஒளியையும், மகிமையையும் வெளிப்படுத்தும் இடமாக உணர்த்துகின்றார்.
