அந்த வன வழிகாட்டியைப் பின் தொடர்ந்து சென்று, மிகவும் பழமை வாய்ந்த, பஹாமியன் காட்டிலுள்ள தாவரங்களைக் குறித்து, அவர்  கொடுக்கும் குறிப்புகளை வேகமாக எழுதிக் கொண்டேன். சில மரங்களின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றார். அந்தக் காட்டிலுள்ள ஒரு நச்சு மரம் கருமையான, ஒரு வகை திரவத்தை வெளியிடும். அது நம்மேல் பட்டால் வலியையும், ஊறலையும், தடிப்பையும் கொண்டு வரும். ஆனால் அதனைக் குறித்து கவலை கொள்ள வேண்டாம், ஏனெனில், இதற்கான மாற்று மருந்து அம்மரத்தின் அருகிலேயே கிடைக்கும். “எலீமி மரத்தின் சிவந்த பட்டையை சற்று வெட்டினால், அவ்விடத்தில் ஒரு வகை பிசின் சுரக்கும். அதை ஊறல் உள்ள இடத்தில் தடவினால், ஊறல் உடனே மறைந்து விடும்” என்றார்.

நான் ஆச்சரியத்தில் திகைத்து நின்றேன். நான் இத்தகைய ஒரு மீட்பின் செய்தியை இந்தக் காட்டினுள் எதிர்பார்க்கவேயில்லை. எலிமி மரப்பிசினில் நான் இயேசுவைக் கண்டேன். பாவமாகிய நச்சு நம்மைத் தீண்டும் போது, பரிகாரியாகிய இயேசு நம்மண்டை ஆயத்தமாக இருக்கின்றார். அந்த மரத்தின் பட்டையைப் போன்று, இயேசுவின் இரத்தம் நமக்கு சுகத்தைத் தருகின்றது.

மனித குலம் சுகத்தைப் பெற்றுக்கொள்ள ஏங்கி நிற்பதை ஏசாயா தீர்க்கதரிசி புரிந்து கொண்டார். பாவத்தின் விளைவு நம்மை வியாதிக்கு உட்படுத்தியது. நம்முடைய பாடுகளை தன்மீது ஏற்றுக்கொண்ட தேவக் குமாரனின் துன்பத்தின் வழியாக நமக்குத் தேவையான சுகம் வருகிறது என ஏசாயா தீர்க்கன் வாக்களிக்கின்றார் (ஏசா. 53:4). அந்த தேவக் குமாரன் தான் இயேசு கிறிஸ்து. நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் அவர் காயப்பட்டார், நாம் அவர் மீது நம்பிக்கை வைக்கும் போது, நம்முடைய பாவத்தின் ஆக்கினையிலிருந்து மீட்கப்பட்டு, சுகம் பெறுவோம் (வச. 5) நம்முடைய பாவங்களை கண்டுணர்ந்து, அவற்றை தள்ளி விட்டு, நமக்குத் தரப்பட்டுள்ள புதிய அடையாளத்தை பெற்றுக் கொண்டவர்களாய், பாவ வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றவர்களாய் வாழ, நம் வாழ்நாளெல்லாம் செலவிட்டாலும், அது இயேசுவிடமிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.