
ஆவியானவரோடு நடத்தல்
பத்தாயிரம் மணி நேரம். எந்த ஒரு கைத்தொழிலிலும் கைதேர்ந்தவராக வேண்டுமெனின், இவ்வளவு நேரத்தை, அதற்குச் செலவிட வேண்டுமென, எழுத்தாளரான மால்காம் கிளாட் வெல் பரிந்துரைக்கிறார். மிகச் சிறந்த கலைஞர்களும், இசைஞர்களும் நிபுணத்துவத்தை அடைவதற்கு, அவர்களின் சுபாவத் திறமைமட்டும் போதுமானதாக இல்லை. அவர்கள், ஒவ்வொரு நாளும், தங்களின் கலையில் மூழ்கி, பயிற்சி எடுத்தப் பின்னரே இத்தகைய நிலையை அடைய முடிந்தது.
பரிசுத்த ஆவியின் வல்லமைக்குள் வாழக் கற்றுக் கொள்வதற்கும், இத்தகைய ஒரு மனநிலையே நமக்குத் தேவை என்பது, சற்று வினோதமாகத் தோன்றலாம். கலாத்தியரில், உங்களை தேவனுக்கென்று பிரித்துக்கொள்ளுங்கள் என்று கூறி, பவுல் சபையின் மக்களை ஊக்கப்படுத்துகின்றார். வெறுமனே சட்ட திட்டங்களை கைக்கொள்வதன் மூலம் இதனை அடைய முடியாது, நாம் பரிசுத்த ஆவியானவரோடு நடக்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார். “நடத்தல்” என்பதற்கு, கலாத்தியர் 5:16 ல் பவுல் பயன் படுத்திய கிரேக்க வார்த்தை (peripateo), ஒன்றினைச் சுற்றி சுற்றி நடத்தல் அல்லது பயணித்தல் என்பதாகப் பொருள்படும். எனவே, ஆவியானவரோடு நடத்தல் என்பதன் மூலம் பவுல் கூற விரும்புவதென்னவெனின், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை ஒரு முறை மட்டும் அநுபவிப்பதல்ல, அனுதினமும் அவரோடு பயணம் செய்வதேயாகும்.
பரிசுத்த ஆவியானவர் நம்மோடிருந்து, அவர் நமக்குச் சொல்லும் வேலையை நாம் செய்யும் படி, நமக்கு ஆலோசனை தந்து, வழிநடத்தி, தேற்றும்படி, அவர் நம்மை முழுவதும் நிரப்புமாறு நாம் ஜெபிப்போம். இவ்வாறு நாம் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படும் போது (வ.18), அவருடைய வார்த்தையை கேட்பதிலும், அவருடைய வழிகாட்டலின்படி நடப்பதிலும் நாளுக்கு நாள் முன்னேற்றம் காண்போம். பரிசுத்த ஆவியானவரே, இன்றைக்கும், இனிவரும் நாட்களிலும் நான் உம்மோடு நடக்க, எனக்கு உதவியருளும்.

காலத்தின் வேகத்தைக் குறைத்துக்கொள்ளல்
1840 ஆம் ஆண்டு, மின்சாரக்கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, அநேக மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. நாம் இப்பொழுது, ஸ்மார்ட் கைக்கடிகாரங்களிலும், ஸ்மார்ட் அலைபேசிகளிலும், மடிக்கணினிகளிலும் நேரத்தைப் பார்க்கின்றோம். வாழ்க்கை வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது, நம்முடைய “ஓய்வு நேர” நடையின் வேகம் கூட அதிகரித்து விட்டது, முக்கியமாக, பட்டணங்களில் இந்நிலையைக் காணலாம். இது நம்முடைய உடல் நிலையை பெரிதும் பாதிக்கும் என அறிவாளிகள் சொல்கின்றார்கள். “நாம் வேக வேகமாக பயணம் செய்கின்றோம், நம்மால் இயன்ற மட்டும், சீக்கிரமாக மக்களைச் சந்திக்கின்றோம். எல்லா காரியங்களும் இப்பொழுதே நடந்து விட வேண்டுமென, நம்மை நினைக்கத் தூண்டுகின்றது” என்கின்றார், ஓர் அமெரிக்க பேராசிரியர்.
வேதாகமத்திலுள்ள மிகப்பழமையான சங்கீதங்களில் ஒன்றினை எழுதிய மோசே, நேரத்தைக் குறித்து சி ந்திக்கிறார். வாழ்க்கையின் வேகத்தை தேவன் கட்டுப்படுத்துகிறார், என அவர் கூறுகின்றார். “உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள் போலவும், இராச்சாமம் போலவும் இருக்கிறது” என எழுதுகிறார் (சங்.90:4).
காலத்தைக் கையாளுதலின் இரகசியம், வேகமாகச் செல்வதிலோ அல்லது மெதுவாகச் செல்வதிலோ இல்லை. அது எப்பொழுதும் தேவனோடிருத்தலாகும். அவரோடு அதிக நேரம் செலவிடுதலாகும். அப்படியாகும் போது, நாம் தேவனோடும், நம்மை உருவாக்கியவரோடும், (139:13) நாம் உருவாக்கப்பட்ட நோக்கத்தையும், திட்டங்களையும் அறிந்திருக்கிறவரோடும் ஒருமித்து செயல் பட ஆரம்பிப்போம். (வ.16)
இப்பூமியில், நாம் நிரந்தரமாக வாழப்போவதில்லை. ஆனாலும் நம்முடைய நாட்களை, நாம் ஞானத்தோடு திட்டமிடலாம். வெறுமனே கடிகாரத்தை கவனித்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு நாளையும் தேவனுடைய கரத்தில் கொடுத்து விடலாம். மோசே சொல்வது போல, “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும் (90:12) அப்பொழுது நாம் இப்பொழுதும், எப்பொழுதும் சதாகாலங்களிலும் தேவனோடு இருப்போம்.

அனைவருக்கும் தேவையானது இரக்கம்
இயேசு கிறிஸ்துவின் புதிய விசுவாசியான ஜீவன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு, வெளியே வந்து, ஒரு பெரிய எண்ணெய் தொழிற்சாலையில், வேலைக்குச் சேர்ந்தார். அந்த தொழிற்சாலையின் விற்பனையாளரான அவர், அநேக நாட்கள் பிரயாணம் செய்தார், அவருடைய பிரயாணங்களின் போது, அநேகருடைய கதைகளைக் கேட்க முடிந்தது, அவற்றில் பெரும்பாலானவை, உள்ளத்தை உடையச் செய்வதாக இருந்தது. அவருடைய வாடிக்கையாளர்களுக்குத் தேவை, எண்ணெய் அல்ல, இரக்கம் என்பதைத் தெரிந்து கொண்டார். அவர்கள் தேவனை அறிய வேண்டும். இந்த அநுபவம் ஜீவனை ஒரு வேதாகம கல்லூரிக்குச் சென்று, தேவனுடைய இருதயத்தைப் பற்றி கற்றுக்கொள்ளச் செய்தது. பின்னர், அவர் ஒரு போதகரானார்.
இயேசு கிறிஸ்து காட்டிய இரக்கத்தை ஜீவனும் காட்டினார். மத்தேயு 9:27-33 ல் கிறிஸ்து காட்டிய இரக்கத்தை, இரண்டு குருடர்களை அற்புதமாக சுகப்படுத்தியதிலும், பிசாசு பிடித்த மனிதனைக் குணப்படுத்தியதிலும் காண்கின்றோம். அவருடைய ஆரம்ப கால ஊழியத்தில், அவர் சகல பட்டணங்கள், மற்றும் கிராமங்களுக்கு சென்று, சுவிசேஷத்தை பிரசங்கித்ததோடு, சகல வியாதிகளையும் குணப்படுத்தினார் (வ.35). ஏன்? “அவர் திரளான ஜனங்களைக் கண்ட பொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தொய்ந்து போனவர்களும்,சிதறப்பட்டவர்களுமாய் இரு ந்தபடியால், அவர்கள் மேல் மனதுருகினார்” (வ.36)
இன்றைய உலகம் பிரச்சனைகளாலும், காயப்படுத்தும் மக்களாலும் நிறைந்து காணப்படுகின்றது. அவர்களுக்கு இரட்சகரின் கனிவான கவனம் தேவை. மேய்ப்பன் தன் ஆடுகளைப் பாதுகாத்து, பராமரித்து, வழிநடத்துவது போல, இயேசுவும் அவரிடம் வரும் யாவரிடமும் இரக்கத்தைக் காட்டுகிறார் (11:28). நாம் வாழ்க்கையில் எந்த இடத்தில் இருந்தாலும், எந்த பிரச்சனைகளைச் சந்தித்தாலும் சரி, நாம் அவரிடத்தில் வரும் போது, அவருடைய உள்ளம் நம்மீது கரிசனையினாலும், இரக்கத்தினாலும் பொங்கி வழிகிறது. அவருடைய அன்பின் இரக்கத்தை, நாம் பெற்றுக் கொண்டிருப்போமாயின், அதனைப் பிறருக்கும் தவறாது கொடுப்போம்.

எப்பொழுதும் அவரைப் போற்றும் வாழ்க்கைமுறை
வாலஸ் ஸ்டேக்னரின் தாயார் ஐம்பதாவது வயதில் மரித்துப் போனார். வாலஸ், தன்னுடைய எண்பதாவது வயதில், தன்னுடைய தாயாருக்கு ஒரு குறிப்பு எழுதினார். “மிகப் பிந்திய ஒரு கடிதம்” என்ற அந்த கடிதத்தில், மிக கடுமையான நாட்களில், வளர்ந்து, திருமணம் புரிந்து, இரண்டு மகன்களையும் வளர்த்த ஒரு பெண்ணின் குணங்களைப் பாராட்டியிருந்தார். அவள், ஒரு மனைவியாக, தாயாராக இருந்து, அனைவரையும், விரும்பத்தகாதவர்களையும் ஊக்கப்படுத்துவார். தன்னுடைய தாயார், தன்னுடைய குரலின் வாயிலாக வெளிப்படுத்தின வல்லமையை நினைத்துப் பார்த்தார். “நீங்கள் பாடுவதற்கு கிடைத்த எந்த வாய்ப்பையும் நழுவ விடவில்லை” என்று எழுதுகின்றார். அவருடைய தாயார் வாழ்ந்த நாட்களெல்லாம், சிறிதும் பெரிதுமான ஆசிர்வாதங்களுக்காக நன்றி செலுத்திப் பாடினார்.
சங்கீதக்காரனும், தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் பாடினார். அவர் மகிழ்ச்சியான நாட்களிலும் பாடினார், துன்ப நாட்களிலும் பாடினார். அந்தப் பாடல்கள் எந்த கட்டாயத்தின் பேரிலும் பாடப்படவில்லை, அவை, “வானத்தையும், பூமியையும் உண்டாக்கினவரையும்” (146:6), பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறவரையும்” (வ.7), “குருடரின் கண்களைத் திறக்கிறவரையும்” (வ.8), “திக்கற்ற பிள்ளையையும், விதவையையும் ஆதரிக்கிறவரையும்” (வ.9) போற்றிப் பாடப் பட்ட பாடல்கள். “யாக்கோபின் தேவனைத்” தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிறவர்களுக்கு, பெலனாக இருக்கிறவரும், “என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவரும்” ஆகிய தேவனைப் பாடுவதே உண்மையான, பாடலோடு கூடிய வாழ்க்கை முறை (வ.5-6).
நம்முடைய குரல் நன்றாயிருக்கின்றதற்காக அல்ல, நம்மை நன்மையால் நிரப்பினவரைப் போற்றிப் பாடுவதே, நம் வாழ்க்கை முறையாயிருக்கட்டும். ஒரு பழைய பாடலில் “என் உள்ளத்தில் ஒரு பாடலுண்டு” எழுதப் பட்டுள்ளதைப் போன்று, நம்முடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து பாடல்கள் எழும்பட்டும்.
