ஜீவன் வெளிப்பட்டபோது
1986 இல், உக்ரைனில் செர்னோபில் அணுசக்தி விபத்து, உலகின் கவனத்தை மிகவும் ஈா்த்தது. பேரழிவின் ஆற்றல் அப்பட்டமாகத் தெரிந்ததால், கதிர்வீச்சைக் கட்டுப்படுத்தும் முக்கியமான அத்தியாவசியப் பணியில் அதிகாரிகள் விரைந்து பணியாற்றினர். அதிக கதிரியக்க குப்பைகளிலிருந்து வரும் ஆபத்தான காமா கதிர்கள், குப்பைகளைச் சுத்தம் செய்த ரோபோக்களை அழித்துக்கொண்டே இருந்ததது.
ஆகையால் அவர்கள் மனிதர்களை ”மனிதா்களை இயந்திரங்களாக" பயன்படுத்த வேண்டியிருந்தது! தொண்ணூறு வினாடிகள் அல்லது அதற்கும் குறைவான வேலை நேரத்தில், அபாயகரமான பொருட்களை அகற்றி, ஆயிரக்கணக்கான வீரமிக்க தனிநபர்கள் "செர்னோபில் அணுமின் நிலைய கலைப்பாளர்களாக" மாறினார்கள். தொழில்நுட்பம் செய்ய முடியாததை, தனிப்பட்ட துணிவுடன் மக்கள் செய்தனர்.
நீண்ட காலத்திற்கு முன்பு, தேவனுக்கு எதிரான நமது கலகமும் ஒரு பேரழிவை உண்டாக்கியது, அது மற்ற எல்லா பேரழிவுகளுக்கும் வழிவகுத்தது (ஆதியாகமம் 3 ஐப் பார்க்கவும்). ஆதாம் மற்றும் ஏவாள் மூலம், நாம் நமது சிருஷ்டிகரைப் பிரிந்திடத் தெரிந்துகொண்டோம், மேலும் அந்த செயல்முறையில், நம் உலகையே ஒரு நச்சுக் குப்பைகூளமாக மாற்றினோம். அதை நாமே சுத்தம் செய்ய முடியவே முடியாது.
அதுதான் கிறிஸ்துமஸின் முழு கருத்தே. அப்போஸ்தலன் யோவான் இயேசுவைப் பற்றி, “அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்தும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்திமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்” (1 யோவான் 1:2) என்றெழுதினார். பின்னர் யோவான், “அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (வ. 7) என்று அறிவித்தார்.
தம்முடைய சிருஷ்டிகளால் இயலாததை, இயேசு அருளியுள்ளார். நாம் அவரை விசுவாசிக்கும்போது, அவர் நம்மை தம்முடைய பிதாவுடன் சரியான உறவிற்கு மீட்டெடுக்கிறார். அவர் மரணத்தையே கலைத்துவிட்டார். ஜீவன் தோன்றியது.
தேவன் என்னை அறிவார்
எங்கள் குழந்தைப்பருவ கதைப் புத்தகத்தை என் சகோதரி கண்டுபிடித்தபோது, இப்போது எழுபதுகளில் இருக்கும் என் அம்மா மகிழ்ச்சியடைந்தார். தேனைத் திருடிய கரடியைக் கோபமான தேனீக் கூட்டம் துரத்திய கதையின் அனைத்து வேடிக்கையான சம்பவங்களும் அவருக்கு நினைவிலிருந்தன. மேலும், கரடி தப்பிப்பிழைப்பதை எதிர்பார்த்து நானும் என் சகோதரியும் எவ்வாறு சிரித்தோம் என்பதையும் அவள் நினைவு கூர்ந்தாள். "நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது எப்பொழுதும் கதைகளைச் சொன்னதற்காக நன்றி" என்று நான் என் அம்மாவிடம் சொன்னேன். சிறுவயதில் நான் எப்படி இருந்தேன் என்பது உட்பட எனது முழு கதையும் அவளுக்குத் தெரியும். இப்போது நான் வளர்ந்த பின்னும், அவள் இன்னும் என்னை அறிந்திருக்கிறாள், புரிந்துகொள்கிறாள்.
தேவனும் நம்மை அறிவார். நம்மைக் காட்டிலும், எந்த மனிதனைக் காட்டிலும் ஆழமாக அறிவார். அவர் நம்மை, "ஆராய்ந்து அறிந்திருக்கி(றார்)றீர்" (சங்கீதம் 139:1) என்று தாவீது கூறுகிறார். தமது அன்பினால் அவர் நம்மை ஆராய்ந்து, நம்மை முழுமையாகப் புரிந்துகொள்கிறார். தேவன் நம் நினைவுகளை அறிவார், நாம் வார்த்தைகளின் காரணங்களையும் அர்த்தங்களையும் புரிந்துகொள்கிறார் (வ. 2, 4). நம்மை நாமாக்கும் ஒவ்வொரு காரணிகளையும் அவர் அந்தரங்கமாக அறிந்தவர், மேலும் நமக்கு உதவ இந்த அறிவை பயன்படுத்துகிறார் (வ. 2-5). நம்மை அதிகம் அறிந்தவர் வெறுத்து விலகாமல், தமது அன்புடனும் ஞானத்துடனும் நம்மை நெருங்குகிறார்.
நாம் தனிமையானவராக, கண்டுகொள்ளப்படாதவராக அல்லது மறக்கப்பட்டவராக உணரும்போது, தேவன் எப்போதும் நம்முடன் இருக்கிறார், நம்மைக் காண்கிறார், நம்மை அறிவார் என்ற சத்தியத்தில் நாம் இடரற்றிருக்க முடியும் (வ. 7-10). பிறர் அறியா நமது அனைத்து பக்கங்களையும், இன்னும் பலவற்றையும் அவர் அறிவார். தாவீதைப் போலவே நாமும் நம்பிக்கையுடன், “நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர். . . . . உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்” (வ. 1, 10) எனலாம்.
ஊக்கமளிக்கும் மக்கள்
"தீவரமான ஊக்கம்", லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் எனும் காவிய தொகுப்பை எழுதும்போது ஜே.ஆர்.ஆர். டோல்கியன், தனது நண்பரும் சக எழுத்தாளருமான சி.எஸ்.லூயிஸ் தனக்களித்த தனிப்பட்ட ஆதரவை விவரிக்கப் பயன்படுத்திய சொற்றொடர் இது. இந்த எழுத்து தொடரில், டோல்கீனின் பணி கடினமானதாகவும் பிழையற்றதுமாக இருந்தது, மேலும் அவர் தனிப்பட்ட முறையில் இரண்டு முறைக்கு மேல் நீண்ட கையெழுத்துப் பிரதிகளைத் தட்டச்சு செய்தார். அவர் அவைகளை லூயிஸிடம் அனுப்பியபோது, "நீண்ட வருடங்கள் அதற்காக நீங்கள் செலவழித்தது நியாயமானது" என்று லூயிஸ் பதிலளித்தார்.
வேதாகமத்தில் நன்கு அறியப்பட்ட ஊக்குவிப்பாளர், சீப்புருவை சேர்ந்த யோசே ஆவார். அவர் பர்னபா ("ஆறுதலின் மகன்" என்று பொருள்) என்று அழைக்கப்படுகிறார், அப்போஸ்தலர்கள் அவருக்குக் கொடுத்த பெயர் (அப்போஸ்தலர் 4:36). பவுலுக்காக அப்போஸ்தலர்களிடம் வாதிட்டவர் பர்னபா (9:27). பின்னர், யூதரல்லாத விசுவாசிகள் இயேசுவில் நம்பிக்கை வைக்கத் தொடங்கியபோது பர்னபா, "சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான்" (11:23) என்று லூக்கா நமக்கு கூறுகிறார். லூக்கா அவரை, "அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்" என்று விவரிக்கிறார், மேலும் அவரால் "அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்" (வச. 24) என்கிறார்.
ஊக்கமளிக்கும் வார்த்தைகளின் மதிப்பை அளவிட இயலாது. விசுவாசமும் அன்பும் கொண்ட வார்த்தைகளை நாம் பிறரிடம் பகிருகையில், "நித்திய ஆறுதலை" (2 தெசலோனிக்கேயர் 2:16) அளிக்கும் தேவனானவர், ஒருவரின் வாழ்வை நித்தியகாலத்திற்கும் மாற்றிடும்படி நாம் பகிா்ந்துகொள்வதை வைத்து கிரியை செய்வாராக. இன்று ஒருவருக்கு ""தீவரமான ஊக்கம் " வழங்க அவர் நமக்கு உதவுவாராக!
கிறிஸ்துவுக்கென நன்மதிப்பு
புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரி நாட்களில், சார்லி வார்டு இரண்டு விளையாட்டுகளில் மாணவர் அணி வீரராக இருந்தார். 1993 ஆம் ஆண்டில், இளம் பந்தெறி வீரனாக, கல்லூரி அளவில் நாட்டின் சிறந்த அமெரிக்கக் கால்பந்து வீரராக ஹெய்ஸ்மேன் கோப்பையை வென்றார். மேலும் அவர் கூடைப்பந்து அணியிலும் சிறந்து விளங்கினார்.
ஒருநாள் போட்டிக்கு முன்னான உரையாடலில், அவரது கூடைப்பந்து பயிற்சியாளர் தனது வீரர்களுடன் பேசும்போது சில மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இது சார்லிக்கு பிடிக்கவில்லை என்பதைக் கவனித்த அவர், "சார்லி, என்னவாயிற்று ?" என்று கேட்க, வார்டு, “அய்யா, உங்களுக்குத் தெரியும், பயிற்சியாளர் பவுடன் [கால்பந்து பயிற்சியாளர்] இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை, மேலும் அவர் எங்களை மிகவும் கடினமாக விளையாட வைப்பார்" என்றார்.
கிறிஸ்துவை பிரதிபலிக்கும் சார்லியின் சுபாவம், இந்தப் பிரச்சினையைப் பற்றி அவரது கூடைப்பந்து பயிற்சியாளரிடம் மென்மையாகப் பேசச் செய்தது. உண்மையில், அவர் சார்லியிடம் பேசியதை குறித்து: "ஒரு தூதன் உங்களைப் பார்ப்பது போல் இருந்தது" என்று அந்த பயிற்சியாளர் ஒரு நிருபரிடம் கூறினார்.
அவிசுவாசிகளிடம் நல்மதிப்பையும், கிறிஸ்துவுக்கென உண்மையுள்ள சாட்சியையும் பேணுவது கடினம். ஆனால் அதே சமயம், அவர் நமக்கு உதவி செய்து வழிநடத்தும்போது, இயேசுவின் விசுவாசிகள் அவரைப் போலவே மேலும் வளர முடியும். தீத்து 2ல், வாலிபரும், மற்றும் பொதுவாக அனைத்து விசுவாசிகளும், "தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும்" (வ.6) மற்றும் "நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பே(சவும்)சுகிறவனுமாயிருப்பாயாக” (வ.8) அழைக்கப்படுகிறார்கள்.
கிறிஸ்துவின் பெலத்தால் நாம் அவ்வாறு வாழும்போது, அவரைக் கனப்படுத்துவது மட்டுமல்லாமல், ஒரு நன்மதிப்பையும் உருவாக்குவோம். தேவன் நமக்குத் தேவையான ஞானத்தை வழங்குவதால், நாம் சொல்வதற்குச் செவிகொடுக்க ஜனங்களுக்கு நியாயமான காரணம் உண்டாயிருக்கும்.