வழிநடத்துதலை ஏற்றல்
என்னுடைய சிநேகிதி மிச்செல் என் மகளுக்கு குதிரை ஏற்றம் கற்றுக்கொடுத்தபோது, அந்த குதிரை லாயத்தில் இருந்த தோல் மற்றும் வைக்கோல் வாசனை காற்றில் வந்தது. மிச்செலின் வெள்ளைக் குதிரையின் வாயில் எப்படி கயிற்றின் வளையத்தைப் பொறுத்தவேண்டும் என்று கற்றுக்கொடுத்தபோது, அந்த குதிரை வாயை திறந்து காண்பித்தது. அதன் காதுகளுக்கு மேல் கடிவாளத்தை இழுத்தபோது, குதிரையை மெதுவாக நகர்த்துவதற்கும் இடது அல்லது வலது பக்கம் அதை இயக்குவதற்கும் அனுமதித்ததால், அந்த கடிவாளத்தில் இருக்கும் அந்த வளையம் மிகவும் முக்கியமானது என்று மிச்செல் விளக்கினார்.
குதிரையின் வாயோராமாய் இருக்கும் அந்த வளையம் மனிதனின் நாக்கைப் போன்று முக்கியமானது. இரண்டும் பெரிய ஒன்றை கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. அந்த சிறு கடிவாள வளையம் குதிரையையும், சிறிய நாக்கு மனிதனின் வார்த்தைகளையும் கட்டுப்படுத்துகிறது (யாக்கோபு 3:3,5).
நம்முடைய வார்த்தைகள் அனைத்து திசைகளுக்கும் தீவிரமாய் பரம்பும். “அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்” (வச. 9). ஆனால், வார்த்தைகள் இருதயத்திலிருந்து புறப்படுவதால், நாவை கட்டுப்படுத்துவது கடினம் என்று வேதம் நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது (லூக்கா 6:45). ஆனால் நமக்கும் வாசமாயிருக்கும் கர்த்தருடைய ஆவியானவர், பொறுமை, நற்குணம், இச்சையடக்கம் ஆகிய ஆவியின் சுபாவங்களில் வளருவதற்கு நமக்கு உதவிசெய்கிறார் (கலாத்தியர் 5:22-23). ஆவியானவரோடு நாம் ஒத்துழைத்தால், நம்முடைய இருதயத்தில் மாற்றம் ஏற்படுகிறது. அது நம்முடைய வார்த்தைகளை கட்டுப்படுத்துகிறது. வீணான வார்த்தைகள் துதியின் சத்தமாய் மாறுகிறது. பொய்யானது சத்தியமாய் மாறுகிறது. விமர்சன உதடுகள் ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை பேச எத்தனிக்கிறது.
நாவை அடக்குவது என்பது சரியான வார்த்தைகளை பேசுவதற்கான பயிற்சி மட்டுமன்று. அது ஆவியானவருடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டு, உலகத்திற்கு தேவையான தயவும் ஊக்கப்படுத்தும் வார்த்தைகளையும் நம்மிலிருந்து பிறப்பிக்கச் செய்யும் ஆவியானவருடைய கிரியை.

ஆச்சரியங்களின் தேவன்
அந்த கன்வென்ஷன் ஹால் முழுவதும் இருளாக்கப்பட்டது. அதில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் அர்ப்பணிப்பு ஜெபத்திற்காய் தங்கள் தலைகளை தாழ்த்தினர். வெளிநாட்டில் ஊழியம் செய்ய அழைக்கப்பட்டவர்களை அவர் வரவேற்றபோது, என் தோழி லினெட் தனது இருக்கையை விட்டு எழுந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. அவள் பிலிப்பைன்ஸில் வாழ்ந்து ஊழியம் செய்வதாக உறுதியளித்தார். ஆனாலும் எனக்கு நிற்க ஆசை வரவில்லை. எனது சொந்த நாட்டில் உள்ள தேவைகளைப் பார்த்து, என் நாட்டு மக்களுக்கே தேவனுடைய அன்பைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். ஆனால் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, நான் வேறொரு நாட்டில் என் வீட்டை உருவாக்கி, தேவன் எனக்குக் காண்பிக்கும் மக்களுக்கு அவருடைய அன்பைக் குறித்து சொல்லுவேன். நான் எதிர்பார்த்ததை விட வித்தியாசமான ஊழியத்திற்கு தேவன் என்னை அழைத்தார் என்பதை உணர்ந்தவுடன், என்னுடைய வாழ்க்கையை நான் எப்படி வாழப்போகிறேன் என்னும் என்னுடைய எண்ணம் மாறியது.
மீன்பிடித்துக்கொண்டிருந்த தன்னுடைய சீஷர்கள் உட்பட இயேசு தாம் சந்தித்த யாவரையும் ஆச்சரியப்படுத்தினார். மீன்களைப் பிடிக்கும் ஒரு புதிய யுக்தியை இயேசு கற்றுக்கொடுத்தபோது, பேதுருவும் அந்திரேயாவும் தங்களுடைய வலைகளை விட்டுவிட்டு, அவரைப் பின்பற்றினார்கள் (மத்தேயு 4:20). யாக்கோபும் யோவானும் தங்களுடைய படகை விட்டுவிட்டு அவருக்கு பின்சென்றனர் (வச. 22). இயேசு அவர்களுக்கு கொடுத்த ஆச்சரியத்தை பின்பற்றி, எங்கு போகிறோம் என்பதை அறியாமல் அவர்கள் புறப்பட்டு சென்றார்கள்.
தேவன் பெரும்பாலானவர்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே ஊழியம் செய்யும்படிக்கு அழைப்பு விடுக்கிறார். நாம் தரித்திருந்து ஊழியம் செய்கிறோமோ அல்லது வேறிடத்திற்கு புறப்பட்டுபோய் ஊழியம்செய்கிறோமோ, நாம் சற்றும் கற்பனை செய்யாத வழியில் அவர் நம்மை ஆச்சரியத்தினால் நிரப்பி வழிநடத்துவார்.

தயவான செய்கைகள்
கருச்சிதைவு ஏற்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, வலேரி ஒரு சில பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்தாள். சில மைல்களுக்கு அப்பால் இருந்த அவளுடைய ஜெரால்ட் என்னும் கைவினையாளர் ஒருவர் அவள் விற்ற குழந்தை தொட்டிலை ஆர்வத்துடன் வாங்கினார். அதை வாங்கும்போது, வலேரியிடம் பேசிய அவரது மனைவியின் வாயிலாக, வலேரியின் பெரும் இழப்பைக் குறித்து அறிந்துகொண்டார். வீட்டிற்கு செல்லும் வழியில் அவளது நிலைமையைக் கேள்விப்பட்ட ஜெரால்ட், தொட்டிலைப் பயன்படுத்தி வலேரிக்கு ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்க முடிவு செய்தார். ஒரு வாரம் கழித்து, அவர் கண்ணீருடன் ஒரு அழகான பெஞ்சை அவளுக்கு பரிசளித்தார். “இங்கே நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள், அதற்கான ஆதாரம் இங்கே இருக்கிறது" என்று வலேரி பெருமிதப்பட்டாள்.
வலேரியைப் போலவே, ரூத்தும் நகோமியும் பெரும் இழப்பை தங்களுடைய வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்தது. நகோமியின் கணவரும் அவளுடைய இரண்டு குமாரர்களும் மரித்துபோய்விட்டனர். தற்போது அவளும் அவளுடைய மருமகளான ரூத்தும் ஆதரவற்று நிர்க்கதியாய் நிற்கின்றனர் (ரூத் 1:1-5). அங்கே தான் போவாஸ் வருகிறார். போவாஸின் நிலத்தில் சிந்தியிருக்கும் கதிர்களை பொறுக்குவதற்கு போன ரூத்தைக் குறித்து போவாஸ் கேள்விப்படுகிறார். அவள் யார் என்று அறிந்த பின்பு அவளுக்கு தயைபாராட்டுகிறார் (2:5-9). “எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயைகிடைத்தது” (வச. 10) என்று ரூத் ஆச்சரியத்துடன் கேட்கிறாள். அதற்கு போவாஸ், “உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், ... எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது” (வச. 11) என்று பதிலளிக்கிறான்.
போவாஸ் ரூத்தை மணந்துகொண்டு, நகோமியின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறான் (வச. 4). அவர்களுடைய அந்த திருமணத்தின் மூலம், முற்பிதாவான தாவீது மற்றும் இயேசுகிறிஸ்து அவர்களின் வம்சாவளியில் தோன்றுகின்றனர். ஜெரால்டையும் போவாஸையும் தேவன் பயன்படுத்தி மற்றவர்களின் கண்ணீரை தேவன் துடைப்பார் என்றால், வேதனையில் உள்ளவர்களின் கண்ணீரை துடைக்க தேவன் நம் மூலமாகவும் கிரியை செய்ய முடியும்.

நான் ஒன்றுமில்லை! நீ யார்?
“நான் ஒன்றுமில்லை! நீ யார்?" என்று தொடங்கும் எமிலி டிக்கின்சனின் ஒரு கவிதையில், அடையாளம் இல்லாமல் இருப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை விடுத்து, யாரோ ஒருவராய் தாங்கள் இருக்கவிரும்பும் மக்களின் சிந்தையை அவர் சவால்விடுகிறார். “யாரோ ஒருவராய் இருப்பதற்கு ஏன் மந்தமாக உணரவேண்டும்! – தவளைபோல் யாரோ ஒருவராய் வாழ்வதற்கு ஏன் யோசிக்கிறோம்.”
யாரோ ஒருவராய் வாழ்வதற்கான தேவையை விட்டுவிடுவதில் ஏற்படும் சுதந்திரத்தை அனுபவிப்பது என்பது பவுல் அப்போஸ்தலரின் சாட்சியை நினைவுபடுத்துகிறது. பவுல் இயேசுவை சந்திக்கும் முன்பு, வெளியரங்கமாய் மக்களை ஈர்க்கும் மத அங்கீகாரங்களையும் மாம்சத்தின் மீது நம்பிக்கை வைப்பதற்கான நியாயமான காரணங்களையும் பவுல் கொண்டிருந்தார் (பிலிப்பியர் 3:4).
ஆனால் இயேசுவை சந்தித்த பின்பு அனைத்தும் மாறியது. கிறிஸ்துவின் தியாகமான அன்பின் ஊடாய் தன்னுடைய மார்க்க ரீதியான சாதனைகளை பார்க்க பழகிய பவுல், “என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், ... கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்... (வச. 8) என்று அறிக்கையிடுகிறார். “நான் அவரை... அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்” (வச. 10) வாழ்வதே தன்னுடைய வாழ்க்கையின் முதன்மைக் குறிக்கோள் என்று சொல்லுகிறார்.
யாரோ ஒருவராய் நாம் மாற முயற்சிப்பது மந்தமான வாழ்க்கை. ஆனால் கிறிஸ்துவின் தியாகமான அன்பின் நிழலில் நம்முடைய சுயத்தை இழப்பது என்பது, ஜீவியத்தை புதுப்பிக்கும் புதுவாழ்வை நமக்கு அறிமுகப்படுத்துகிறது (வச. 9).

“எல்லாம் எனக்கு எதிராய் இருக்கிறது”
“இன்று காலையில் பணத்திற்கு பெரிய மதிப்பு இருப்பதாக நான் நினைத்ததுண்டு. ஆனால் இப்போது என்னிடத்தில் ஒரு டாலர் கூட இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” முன்னாள் அமெரிக்க அதிபர் யுலிஸஸ் கிராண்ட் தனது வாழ்நாள் சேமிப்பை ஒரு வியாபார கூட்டாளியின் மோசடியால் மொத்தமாய் இழந்தபோது இவ்வார்த்தைகளை கூறினார். சில மாதங்களுக்குப் பிறகு, கிராண்டிற்கு குணப்படுத்த முடியாத புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவரது குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாய் உதவுவதற்கு தீர்மானித்த அவர், அவரது நினைவுக் குறிப்புகளை எழுதி வெளியிடுவதற்காக எழுத்தாளர் மார்க் ட்வைன் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார். அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அதை முடித்தார்.
கடுமையான கஷ்டங்களைச் சந்தித்த மற்றொரு நபரைப் பற்றி வேதம் நமக்குச் சொல்கிறது. யாக்கோபு தனது மகன் யோசேப்பை “துஷ்டமிருகம்.. பட்சித்துப்போட்டது” (ஆதியாகமம் 37:33) என்று நம்பினான். பின்னர் அவரது மகனான சிமியோன் அந்நிய தேசத்தால் சிறைபிடிக்கப்பட்டான். மேலும் தன்னுடைய குமாரனான பென்யமீனும், தன்னிடத்திலிருந்து போய்விடுவானோ என்று யாக்கோபு அஞ்சினான். “இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது” என்று சொல்லி கதறுகிறான் (42:36).
ஆனால் அவன் எண்ணியது தவறு. அவனுடைய குமாரனாகிய யோசேப்பு உயிரோடிருக்கிறான் என்பதையும், தன்னுடைய குடும்பத்தை பாதுகாக்கும் பணியில் தேவன் திரைக்கு பின்னாலிருந்து செயல்படுகிறார் என்பதையும் பின்னர் அறிகிறான். நம்முடைய கடினமான சூழ்நிலைகளிலும் தேவனுடைய கரத்தை பார்க்கமுடியாவிட்டாலும், தேவனை ஏன் நம்பவேண்டும் என்பதை இக்கதை நமக்கு வலியுறுத்துகிறது.
அமெரிக்க அதிபர் கிராண்டின் நினைவுக் குறிப்புகள் பெரும் வெற்றியைப் பெற்றது. மேலும் அவருடைய குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்தனர். அதைப் பார்ப்பதற்கு அவர் உயிரோடில்லையெனினும், அவருடைய மனைவி அதை நேர்த்தியாய் அனுபவிக்க நேர்ந்தது. நம்முடைய பார்வை குறைவுள்ளது. ஆனால் தேவனுடைய பார்வை அப்படியில்லை. இயேசு நம்முடைய நம்பிக்கையாய் இருக்கும்போது, “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? (ரோமர் 8:31). அவர் மீது நம்முடைய நம்பிக்கையை இன்று வைப்போம்.