அனைத்து துதிகளுக்கும் பாத்திரர்
ஃபெரான்டே மற்றும் டீச்சர் குழுவினர், சிறந்த பியானோ டூயட் குழுவாக பலர் கருதுகின்றனர். அவர்களின் கூட்டு முயற்சி அழகான இசையை வருவித்தது. எனவே அவர்களின் பாணி, நான்கு கைகள் ஆனால் ஒரே சிந்தை என்று புகழப்பட்டது. அவர்களின் இசையைக் கேட்கிறவர்கள், அவர்கள் எந்த அளவிற்கு கடினமாகப் பிரயாசப்பட்டிருக்கக்கூடும் என்பதை அறியக்கூடும்.
ஆனால் அதுமட்டுமில்லை. அவர்கள் அதை நேசித்து செய்கிறார்கள். அவர்கள் 1989இல் ஓய்வு பெற்ற பிறகும், ஃபெரான்டே மற்றும் டீச்சர் எப்போதாவது ஒரு உள்ளூர் பியானோ ஸ்டோரில் அவ்வப்போது எதிர்பாராத இசை நிகழ்ச்சியை நடத்துவார்கள். அவர்கள் இசையை முழுவதுமாய் விரும்பினார்கள்.
தாவீதும் இசையமைப்பதை விரும்பினார். ஆனால் அவர் தனது பாடலுக்கு ஒரு உயர்ந்த நோக்கத்தைக் கொடுக்க தேவனோடு இணைந்து செயல்பட்டார். அவரது சங்கீதங்கள் அவரது போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையையும், கர்த்தரைச் சார்ந்து வாழ வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் உறுதிப்படுத்துகின்றன. ஆயினும்கூட, அவரது தனிப்பட்ட தோல்விகள் மற்றும் குறைபாடுகளுக்கு மத்தியில், அவர் ஏறெடுத்த துதிகள் இருள் சூழ்ந்த நேரத்திலும் அவருடைய மகத்துவத்தைப் பிரதிபலித்து ஆவிக்குரிய சுருதியை நேர்த்தியாக்கியது. தாவீதின் துதிகளுக்கு பின்பாக இருக்கும் அவருடைய மனதை சங்கீதம் 18:1 பிரதிபிலிக்கிறது: என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.
மேலும் தாவீது, “துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்” (வச. 3) என்றும் “எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்(டேன்)” (வச. 4) என்று தேவனிடத்தில் திரும்புகிறார். நம்முடைய சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், நாமும் அவ்வாறே நம் தேவனைத் துதிக்கவும் மகிமைப்படுத்தவும் நம் இருதயங்களை உயர்த்துவோம். அவரே சகல துதிகளுக்கும் பாத்திரர்!
நன்றிசெலுத்தும் ஆசீர்வாதம்
2016 ஆம் ஆண்டில், வாண்டா டென்ச் தனது பேரனை நன்றி தெரிவிக்கும் விருந்துக்கு அழைப்பதாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். ஆனால் அவருடைய பேரன் தன்னுடைய தொலைபேசி என்னை சமீபத்தில் மாற்றியதை அவர் அறியவில்லை. அதற்குப் பதிலாக ஜமால் என்ற வேறொரு நபருக்கு அந்த குறுஞ்செய்தி போய்விட்டது. ஜமால் தான் யார் என்பதை தெளிவுபடுத்திய பிறகும், நான் இரவு உணவிற்கு உங்களோடு சேர்ந்துகொள்ளலாமா என்று கேட்டார். “நிச்சயமாக” என்று வாண்டா அவரை வரவேற்றார். ஜமால் குடும்ப விருந்தில் சேர்ந்தார். அது அவருக்கு வருட பாரம்பரியமாகிவிட்டது. ஒரு தவறான அழைப்பு, வருடாந்திர ஆசீர்வாதமாக மாறியது.
முகமறியாத புதிய நபரை இரவு உணவிற்கு அழைத்த வாண்டாவின் கருணை, லூக்காவின் நற்செய்தியில் இயேசுவின் ஊக்கத்தை எனக்கு நினைவூட்டுகிறது. ஒரு பிரபலமான பரிசேயரின் வீட்டில் இரவு விருந்தின் போது (லூக்கா 14:1), அழைக்கப்பட்டவர்கள் யார் என்பதையும் அவர்கள் தங்களுக்கான இருக்கைக்காய் எவ்விதம் போராடினார்கள் என்பதையும் இயேசு பார்த்தார் (வச. 7). விருந்துபண்ணுகிறவனிடம், மற்றவர்கள் பதிலுக்கு என்ன செய்வார்கள் என்று எதிர்பார்த்து அவர்களை விருந்துக்கு அழைத்தால் ஆசீர்வாதம் குறைவாய் இருக்கும் என்கிறார் (வச. 12). ஆனால் ஏழைகளையும் இயலாதவர்களையும் அழைப்பித்து அவர்களுக்கு விருந்துபண்ணினால், மேன்மையான ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கக்கூடும் (வச. 14) என்று சொல்லுகிறார்.
வாண்டாவைப் பொறுத்தவரை, நன்றி தெரிவிக்கும் இரவு உணவிற்கு ஜமாலை தனது குடும்பத்துடன் சேர அழைத்ததன் விளைவாக நீடித்த நட்பின் எதிர்பாராத ஆசீர்வாதம் அவரது கணவரின் மரணத்திற்குப் பிறகு அவருக்கு பெரும் ஊக்கமாக இருந்தது. நாம் மற்றவர்களை அணுகும்போது, நாம் எதைப் பெறலாம் என்னும் நோக்கத்தோடு அல்லாமல், கிறிஸ்துவின் அன்பு நம்மூலமாய் வழிந்தோடுவதால், நாம் அதிக ஆசீர்வாதத்தையும் ஊக்கத்தையும் பெறுகிறோம்.
பிரகாசிக்கும் சுடர்கள்
அந்த நகரத்தைப் பற்றி நான் முதலில் கவனித்தது அதன் ஏழ்மை. அடுத்து, அதன் மதுபானக் கடைகள், "சேரிகள்," மற்றும் மக்களிடமிருந்து பணத்தை சம்பாதிக்க என்னும் நுகர்வோர் உற்பத்தியாளர்களுக்கான மாபெரும் விளம்பர பலகைகள். நான் இதற்கு முன்பு இதுபோன்ற பல நகரங்களுக்குச் சென்றிருந்தபடியால், இந்த நகரம் ஒரு புதிய தாழ்வை எட்டியது போல் எனக்குத் தோன்றியது.
இருப்பினும், மறுநாள் காலை ஒரு டாக்ஸி டிரைவரிடம் பேசியபோது என் மனநிலை பிரகாசமாக இருந்தது. “எனக்கு உதவ விரும்பும் நபர்களை எனக்கு அனுப்புமாறு நான் ஒவ்வொரு நாளும் தேவனிடம் கேட்கிறேன்,” என்று அவர் கூறினார். “அடிமைகள், விபச்சாரிகள், உடைந்த வீடுகளில் இருப்பவர்கள் கண்ணீருடன் தங்கள் பிரச்சினைகளை என்னிடம் கூறுவார்கள். நான் காரை நிறுத்தி, அவர்கள் சொல்வதைக் கேட்டு அவர்களுக்காக நான் ஜெபம் செய்வேன். இது என்னுடைய ஊழியம்” என்று அவர் சொன்னார்.
நம்முடைய விழுந்துபோன உலகத்திற்கு இயேசுவின் சந்ததிகளைக் குறித்து விவரித்த பிறகு (பிலிப்பியர் 2:5-8), அப்போஸ்தலர் பவுல் கிறிஸ்துவின் விசுவாசிகளுக்கு ஒரு அழைப்பைக் கொடுக்கிறார். நாம் தேவனுடைய சித்தத்தைப் பின்தொடர்ந்து (வச. 13), “ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு” (வச. 16), “கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு” (வச. 15), “உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற” (வச. 14) அனுபவத்திற்குள் நாம் கொண்டுவரப்படுகிறோம். அந்த டாக்ஸி டிரைவரைப் போல, இயேசுவின் ஒளியை இருளுக்குள் கொண்டு வருவோம்.
கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒருவர் உலகை மாற்றுவதற்கு உண்மையாக வாழ வேண்டும் என்று வரலாற்றாசிரியர் கிறிஸ்டோபர் டாசன் கூறுகிறார். ஏனெனில் அந்த வாழ்க்கையில், “தெய்வீக வாழ்வின் அனைத்து மர்மங்களும் அடங்கியுள்ளன” என்று கூறுகிறார். உலகின் இருண்ட இடங்களில் அவருடைய ஒளியைப் பிரகாசித்து, கிறிஸ்துவின் சந்ததியாய் உண்மையாக வாழ நமக்கு அதிகாரம் அளிக்க கர்த்தருடைய ஆவியானவரிடம் கேட்போம்.
தேவனுக்கு விலையேறப்பெற்றது
சிறுவனாக இருந்தபோது, ஜீவன் தனது தந்தையை மிகவும் கடுமையானவராகவும் தூரமாகவும் கண்டான். ஜீவன் உடல்நிலை சரியில்லாமல், குழந்தை மருத்துவரைப் பார்க்க நேரிட்டபோதும், அவனுடைய அப்பா, தொந்தரவாய் கருதி முணுமுணுத்தார். ஒருமுறை அவனுடைய பெற்றோர் சண்டையிடும்போது, அவனை கருக்கலைப்பு செய்ய தீர்மானித்ததை அவன் தகப்பன் சொல்ல கேட்டான். அவன் ஒதுக்கப்பட்ட குழந்தை என்னும் உணர்வு அவன் வளர்ந்த பிறகும் அவனை நெருக்கியது. ஜீவன் இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டபோது, தேவனை தகப்பனாய் அடையாளப்படுத்துவதற்கு அவனுக்கு கடினமாகவே இருந்தது.
ஜீவனைப் போல, நம்முடைய மாம்ச தகப்பனை நாம் நேசிக்காவிடில், தேவனுடனான நம்முடைய உறவில் நமக்கு அவ்வப்போது சந்தேகங்கள் எழக்கூடும். நான் அவருக்கு பாரமாயிருக்கிறேனா? அவர் என்னைப் பற்றி கவலைப்படுகிறாரா? என்று ஒருவேளை நாம் ஆச்சரியப்படலாம். ஆனால் நமது பூமிக்குரிய தகப்பன்மார்கள் மௌனமாகவும் தூரமாகவும் இருந்திருக்கையில், பரலோகத் தகப்பனாகிய தேவன் நம் அருகில் வந்து, “நானும் உன்னைச் சிநேகித்தேன்” (ஏசாயா 43:4) என்று கூறுகிறார்.
ஏசாயா 43இல், தேவன் நம்முடைய சிருஷ்டிகராகவும் தந்தையாகவும் பேசுகிறார். அவருடைய குடும்பத்தின் அங்கத்தினராய் நீங்கள் வாழவேண்டும் என்று அவர் விரும்புவாரோ என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால், அவர் தன்னுடைய ஜனங்களைப் பார்த்து என்ன சொல்கிறார் என்பதைக் கேளுங்கள்: “தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும்... கொண்டுவா என்பேன்.” எந்த விதத்தில் அவருடைய அழைப்பிற்கு நாம் தகுதியானவர்கள் என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால், அவருடைய உறுதிமொழியைக் கேளுங்கள்: “நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்” (ஏசாயா 43:4).
தேவன் நம்மை அதிகமாய் நேசித்தபடியினால், அவருடைய குமாரனாகிய இயேசுவை நமக்காக மரிக்க ஒப்புக்கொடுத்து, அவரை விசுவாசிக்கிற நாம் என்றென்றும் அவருடையவர்களாய் வாழ தயை செய்தார் (யோவான் 3:16). அவர் சொன்னதையும் அவர் நமக்காய் செய்ததையும் வைத்து, அவர் நம்மை விரும்பகிறார் என்று நாம் உறுதியாய் நம்பமுடியும்.
