
சாக்ரடிக் கிளப்
1941 இல், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சாக்ரடிக் கிளப் என்று ஒன்று நிறுவப்பட்டது. இது கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள் மற்றும் அஞ்ஞானவாதிகள் ஆகியோருக்கு இடையே விவாதத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு தோற்றுவிக்கப்பட்டது.
ஒரு மதச்சார்பற்ற பல்கலைக்கழகத்தில் மார்க்கத்தைக் குறித்த விவாதம் புதியது அல்ல. ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சாக்ரடிக் கிளப்பின் பதினைந்து ஆண்டுகள் தலைவராக இருந்தவர், சிறந்த கிறிஸ்தவ அறிஞர் சி. எஸ். லூயிஸ். கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையானது, கடும் எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடியது என்று அவர் நம்பினார். இயேசுவை நம்புவதற்கு சரியான பகுத்தறிவு ஆதாரம் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.
ஒரு விதத்தில், உபத்திரவத்தினால் சிதறிக் கிடக்கும் திருச்சபை விசுவாசிகளுக்கு பேதுருவின் ஆலோசனையை லூயிஸ் நடைமுறைப்படுத்தியிருக்கக்கூடும், “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்” (1 பேதுரு 3:15). பேதுரு இரண்டு முக்கிய குறிப்புகளை கூறுகிறார்: கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பதற்கு நமக்கு நேர்த்தியான காரணங்கள் உள்ளன. மேலும் நமது நியாயத்தை “சாந்தத்தோடும் வணக்கத்தோடும்” முன்வைக்க வேண்டும்.
கிறிஸ்துவை நம்புவது என்பது மார்க்கத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியோ அல்லது சுய விருப்பமோ கிடையாது. நம்முடைய விசுவாசமானது, சரித்திரப்பூர்வமாகவும், இயேசுவின் உயிர்த்தெழுதலின் ஆதாரங்களினாலும், சிருஷ்டிகரைப் பிரதிபலிக்கும் சிருஷ்டிப்புகளினாலும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாம் தேவனுடைய ஞானத்தையும் அவருடைய ஆவியின் பெலத்தையும் சார்ந்துகொள்ளும்போது, நம்முடைய மேன்மையான விசுவாசத்தை நம்புவதற்கான காரணங்களை நாம் அறியக்கூடும்.

தேவன் உன்னை அறிந்திருக்கிறார்
ஒரு முறை பள்ளியில் சில பிரச்சனைகளுக்கு பிறகு, என்னை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் என் விரக்தியான முகத்தை மறைக்க முயன்றேன். “என்ன விஷயம்?” என்று என் அம்மா கேட்டார். அவர் மேலும், “அது ஒன்றுமில்லை என்று சொல்வதற்கு முன், நான் உன்னுடைய அம்மா என்பதை நினைவில் வைத்துக்கொள். நான் உன்னைப் பெற்றெடுத்தேன், நீ உன்னை அறிவதை விட உன்னை நான் நன்றாக அறிவேன்” என்று சொன்னார். நான் எப்படிப்பட்டவன் என்பதைக் குறித்த என்னுடைய அம்மாவின் அந்த தெளிவான அறிவு, என்னுடைய துக்கமான நேரங்களில் அவர்களின் ஆதரவு எனக்கு தேவை என்பதை நினைப்பூட்டுகிறது.
கிறிஸ்தவர்களாகிய நாம், நம்மை நன்றாய் அறிந்த ஒரு தேவனால் பராமரிக்கப்படுகிறோம். சங்கீதக்காரன் தாவீது, தேவன் அவருடைய பிள்ளைகளின் வாழ்வில் கொண்டிருக்கும் அக்கறைக்காக தேவனைத் துதிக்கிறார், “கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்” (சங்கீதம் 139:1-2). நாம் யார் என்பதையும், நம்முடைய எண்ணம், ஆசை மற்றும் செயல் ஆகியவற்றையும் தேவன் அறிந்திருப்பதால், அவருடைய அபரிவிதமான அன்பு மற்றும் பாதுகாப்பின் எல்லையைத் தாண்டி நாம் எங்கும் செல்ல முடியாது (வச. 7-12). மேலும், “நான்… சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும்” (வச. 9-10) என்று தாவீது பாடுகிறார். வாழ்க்கையில் நாம் எங்கிருந்தாலும், ஜெபத்தில் தேவனை கூப்பிடும்போது, அவர் நமக்குத் தேவையான அன்பையும், ஞானத்தையும், வழிகாட்டுதலையும் தருவார் என்று உறுதியாய் நம்பலாம்.

சிந்தனையும் ஜெபமும்
“உங்களுக்காக நான் நிச்சயமாய் ஜெபித்துக்கொள்கிறேன்.” இந்த வார்த்தைகளை நீங்கள் கேட்டிருப்பீர்களானால், அதைச் சொல்லும் நபர் உண்மையில் அதைச் சொல்கிறாரா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் எட்னா டேவிஸ் அதைச் சொல்லும்போது நீங்கள் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஒரு சிறிய நகரத்தில் உள்ள அனைவரும் எட்னாவின் மஞ்சள் நோட்டு புத்தகத்தை பக்கம் பக்கமாக அறிவர். அதில் எழுதப்பட்டிருக்கும் ஜெபக்குறிப்புகளை ஒவ்வொரு நாள் காலையிலும் சத்தமாக ஜெபப்பது அவரின் வழக்கம். அவருடைய ஜெபப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அனைவருக்கும் ஜெபத்திற்கான பதில் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் எட்னாவின் மரணத்தில், சாட்சிட்ட மக்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் தெய்வாதீனமான ஏதோ ஒன்று அவருடைய ஜெபத்தின் மூலமாகவே நடந்தது என்று சாட்சியளித்தனர்.
பேதுருவின் சிறைச்சாலை அனுபவத்தில், ஜெபத்தின் வல்லமையை தேவன் வெளிப்படுத்தினார். ஏரோது ராஜாவின் மனிதர்களால் பிடிக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்ட பிறகு, “வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான்” (அப்போஸ்தலர் 12:4). அவன் தப்பிக்கும் வாய்ப்பிற்கு இடமேயில்லை. ஆனால் “சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்” (வச. 5). அவர்கள் பேதுருவை தங்கள் சிந்தையில் வைத்து ஜெபித்தனர். தேவன் ஆச்சரியமான ஒன்றை செய்தார். சிறைச்சாலையில் இருந்த பேதுருவுக்கு ஒரு தேவதூதன் வெளிப்பட்டு, அவனுடைய சங்கிலிகளிலிருந்து அவனை விடுவித்து, சிறைக்கு வெளியே பாதுகாப்பாக அவனை அழைத்துச் சென்றார் (வச. 7-10).
சிலர் தங்களுடைய “சிந்தனைகளையும் ஜெபங்களையும்” வீணாய் பயன்படுத்தலாம். ஆனால் நம்முடைய பரமபிதா நம்முடைய சிந்தையை அறிந்திருக்கிறார். நம்முடைய ஜெபங்களைக் கேட்கிறார., அவருடைய பரிபூரண சித்தத்தின்படி நமக்காகச் செயல்படுகிறார். சர்வ வல்லமையுள்ள ஆண்டவருக்கு நாம் ஊழியம் செய்யும்போது, நாம் மற்றவர்களுக்காக ஜெபிப்பதும், மற்றவர்கள் நமக்காக ஜெபிப்பது சிறிய காரியமல்ல.

முன்னேறு! விலகிச் செல்லாதே!
“ஓய்வு” என்ற கவிதையில், வேலை செய்வதிலிருந்து ஓய்வு நேரத்தை பிரிக்கும் நமது போக்கை கவிஞர் நயமாக சவால் விடுகிறார். உண்மையான உழைப்போடு வருவதுதான் உண்மையான ஓய்வாகுமல்லவா? நீங்கள் உண்மையான ஓய்வு நேரத்தை அனுபவிக்க விரும்பினால், வாழ்க்கையின் கடமைகளைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, “இன்னும் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்; - அதைப் பயன்படுத்துங்கள் - வீணாக்காதீர்கள்; இல்லையெனில் அது ஓய்வாய் கருதப்படாது” என்று ஆசிரியர் வலியுறுத்துகிறார். உனக்கு முன்பாக அழகு நிற்கிறது, அதைக் கண்டு உன் வேலையைச் செய்து, ஓய்வை அனுபவியுங்கள் என்று வரிகள் நீளுகிறது.
உண்மையான ஓய்வு மற்றும் மகிழ்ச்சி ஆகிய இரண்டும், அன்பு மற்றும் சேவையின் மூலமாகவே கிடைக்கிறது என்று கவிஞர் முடிக்கிறார். இது தெசலோனிக்கேயர்களுக்கு பவுலின் ஆலோசனையை நினைவுபடுத்துகிறது. தனது அழைப்பை விவரித்து, விசுவாசிகளை ஊக்குவித்த பிறகு, “தேவனுக்கு நீங்கள் பாத்திரராய் நடக்கவேண்டுமென்று” (வச. 11) விசுவாசிகளுக்கு தொடர்ந்து புத்தி சொல்லுகிறார்.
அத்தகைய வாழ்க்கையை, நேர்மை, அன்பு மற்றும் சேவை ஆகியவற்றைக் கொண்டு விளக்குகிறார். “ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து” (3:12) உங்களை ஆசீர்வதிப்பார் என்று பவுல் வேண்டிக்கொள்ளுகிறார். மேலும், “அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும்வேண்டுமென்று” சபையை ஊக்குவிக்கிறார் (4:11). தேவனை நேசித்து, அவர் நமக்கு எந்தெந்த விதங்களில் உதவியிருக்கிறாரோ, அதேபோன்று மற்றவர்களுக்கு உதவிசெய்து விசுவாச வாழ்க்கையின் அழகை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் வாழ்க்கை முறையே மெய்யான ஓய்வாகும் (வச. 12).
அல்லது கவிஞர் சொல்வது போல், உண்மையான மகிழ்ச்சி, “அன்பு மற்றும் சேவையில் நிலைத்திருக்கிறது.” அதுதான் உண்மையான ஓய்வு.
