
உயிருள்ளவரை நண்பர்கள்
வில்லியம் கூப்பர் (1731–1800) எனும் ஆங்கில கவிஞரும், அவரது போதகரும் முன்னாள் அடிமை வியாபாரியுமான ஜான் நியூட்டனும் (1725–1807) நண்பர்களானார்கள். மன அழுத்தத்தாலும், கவலையாலும் பாதிக்கப்பட்ட கூப்பர், இருமுறை தற்கொலைக்கு முயன்றார். நியூட்டன் அவரை சந்திக்கும்போதெல்லாம், இருவரும் தேவனைப் பற்றிப் பேசிக்கொண்டே நீண்டதூரம் ஒன்றாய் நடப்பார்கள். கூப்பரின் கவிதை எழுதும் திறனைத் தட்டியெழுப்பும் வகையில், தனக்காகப் பாடல்களை எழுதும்படி ஊழியக்காரர் கேட்டுக்கொண்டார். கூப்பர் சம்மதித்து, "தேவன் அறிவுக்கெட்டாத வகையில் செயல்படுகிறார்" என்ற பிரபலமான பாடல் உட்பட அநேக பாடல்களை இயற்றினார். நியூட்டன் வேறு சபைக்கு மாறுதலாகிச் சென்றபோதிலும், அவரும் கூப்பரும் உற்ற நண்பர்களாய் கூப்பரின் மரணம் வரைக்கும் கடிதங்களில் உறவாடினார்கள்.
கூப்பர் மற்றும் நியூட்டன் ஆகிய இருவரின் நட்பை நான் பழைய ஏற்பாட்டின் தாவீது மற்றும் யோனத்தானுக்கு இடையேயான நட்போடு தொடர்புப்படுத்திப் பார்க்கிறேன். தாவீது கோலியாத்தை வென்றபின், "யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்." (1 சாமுவேல் 18:1). யோனத்தான் சவுல் ராஜாவின் குமாரனாய் இருந்தாலும், ராஜாவின் கோபத்திற்கும் பொறாமைக்கும் தாவீதை தற்காக்கிறான், தாவீது ஏன் கொல்லப்பட வேண்டுமென்று தன் தந்தையிடமே கேள்வி எழுப்புகிறான். அதற்கு மாறுத்தரமாகச் சவுல்: அவனைக் குத்திப்போட அவன்மேல் ஈட்டியை எறிந்தான் (20:33). ஆயுதத்திற்குத் தப்பிய யோனத்தானுக்கு தன் தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது மனநோவாயிருந்தது. (வ.34).
இந்த இரண்டு ஜோடி நண்பர்களும், உயிருள்ளவரை இணைந்திருந்து, தேவனை நேசிக்கவும் ஊழியம் செய்யவும் ஒருவரை ஒருவர் உந்தித்தள்ளினர். இதுபோல நீங்களும் இன்று உங்கள் நண்பரை எவ்வாறு ஊக்குவிப்பீர்கள்?

பாவிகளுக்கான மருத்துவமனை
காத்மாண்டுவில் உள்ள எனது நண்பனின் சபைக்குச் சென்றிருந்தேன், ஆலயவாசலில் அவன் வைத்திருந்த குறிப்பைக் கண்டேன். அதிலே, "சபையென்பது பாவிகளுக்கு மருத்துவமனையேயன்றி, பரிசுத்தவான்களின் அருங்காட்சியகமல்ல" என்றிருந்தது. அருங்காட்சியகம் என்ற சொல்லாடல் எனக்கு விகற்பமாயிருப்பினும், மருத்துவமனை என்ற மேற்கோள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுவே சரி என்பது என் தனிப்பட்ட கருத்து.
மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாக ஊழியர்கள். நோயாளிகள் எனப் பலரைக் கொண்டதுதான் மருத்துவமனை. ஒரு மருத்துவமனையில், நாம் அறிந்த அனைத்து வகையான உணர்ச்சிகளையும் காணலாம். மருத்துவர்களும், செவிலியர்களும் நோயாளிகளின் பேரில் நாட்டமுடையவர்களாக, அவர்களுடைய மனப்பான்மைக்கேற்றவாறு மாறுகிறார்கள். அநேகர் இப்படி சேவை செய்கிறார்கள்.
சி.எஸ்.லூயிஸ், "நீங்களிருக்கும் அதே மருத்துவமனையில் நான் உங்கள் சகநோயாளி என்றெண்ணிக்கொள்ளுங்கள், நான் உங்களுக்கு சற்றுமுன்னரே அனுமதிக்கப்பட்டேன். ஆகையால் உங்களுக்கு ஆலோசனை சொல்கிறேன்" என்றார். "எனக்கு நோயில்லை, இனிமேலும் நோய்வாய்ப்படமாட்டேன்" என்பதுபோல அந்த பரிசேயன் சுயநீதியின் ஆணவத்தால் மேட்டிமையின் பீடத்தில் பேசினது போலல்லாமல், தன்னை சகநோயாளியாக பாவித்து, எந்த வகையிலும் தான் சிறந்தவனல்ல என்பதுபோல சொன்னார்.
எந்தவொரு பாவமும் அறியாத இயேசு பாவிகளுக்கும் ஆயக்காரர்களுக்கும்
சிநேகிதரானார். அவருடைய இரக்கமும் கிருபையும் தேவைப்படும் பாவிகளுக்கு நாம் சிநேகிதரா? என்பதே கேள்வி.

வாழ்வின் அர்த்தம்
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆர்க்கே லூயிஸ் போர்க்கஸ் என்பவர் எழுதிய ஒரு சிறுகதையில் ரோம போர் சேவகனாக இருக்கும் மார்க்கஸ் ரூபஸ் எனும் கதாபாத்திரம், "மனிதர்களுக்கு சாவாமை தரும் ரகசிய நதியின்" தண்ணீரைக் குடிக்கிறான். சாவாமைக்குள் கடந்துபோகும் அவன் காலப்போக்கில், தான் சாவாமை குறித்து எண்ணியவையெல்லாம் தவறு என்பதையும், குறிக்கோளற்ற இந்த எல்லையில்லா வாழ்வு அர்த்தமற்றது என்றும் புரிந்துகொள்கிறான். அதற்கு மாற்றுமருந்தாக ஒரு தெளிவான நீரூற்றைக் கண்டுபிடிக்கும் மார்க்கஸ், அதிலே பருகியவுடன் மீண்டும் சாதாரண மனிதனாகிறான். அதை உறுதிப்படுத்த முள்ளில் தன் கையை தேய்க்க, அவனுக்கு ரத்தமும் வருகிறது.
மார்கஸை போலவே நாமும் சிலநேரம் வாழ்வின் முடிவையும் மரணத்தின் எதிர்பார்ப்பையும் எண்ணி விரக்தியடைகிறோம் (சங்கீதம் 88:3). மரணம் வாழ்விற்கு அர்த்தம் தருவதாக நாம் எண்ணுகிறோம், ஆனால் இதில் தான் நாம் தவறுகிறோம். மார்கஸை போலல்லாமல், கிறிஸ்துவின் மரணத்தில் நமது வாழ்வின் உண்மையான அர்த்தத்தை நாம் கண்டடைவோம். அவர் தம்முடைய ரத்தத்தைச் சிலுவையில் சிந்தி (கிறிஸ்து) மரணத்தை வென்று, அதை ஜெயமாக விழுங்கினார் (1 கொரிந்தியர் 15:54). நமக்கான மாற்றுமருந்து ஜீவ நீரூற்றாகிய (யோவான் 4:10) இயேசுவிடம் உள்ளது. நாம் அதைப் பருகுவதால், மரணம் வாழ்வு மற்றும் சாவாமை ஆகியவற்றின் விதிகள் மாறுகின்றன (1 கொரிந்தியர் 15:52).
உடல்ரீதியாக நாம் மரிப்பது மெய்தான். ஆனால் அது முடிவில்லை. மரணம், வாழ்க்கை இவைகளைக்குறித்த நமது விரக்தியை இயேசு தலைகீழாக்கி விட்டார் (எபிரெயர் 2:11–15). கிறிஸ்துவுக்குள் நமக்குப் பரலோக நம்பிக்கையும், அவருடனே கூட அர்த்தமுள்ள நித்தியஜீவ சந்தோஷமும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
