
இணைக்கும் ஈட்டிகள்
இராணுவத்தில் ஒரு வீரர் எதிரிகளல்லாத தனது சொந்த படைகளால் எதிர்பாராதவிதமாகத் தாக்கப்படுவதை "நண்பர்களின் தாக்குதல்" என்றழைப்பர். ராணுவத்தில் இது எதிர்பாராதவிதமாக நடக்கலாம், ஆனால் நமது சொந்த வாழ்வில் சிலசமயம் "நண்பர்களின் தாக்குதல்கள்" திட்டமிட்டே நிகழ்கின்றன. மற்ற கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் நம்மைக்குறித்து கடினமான, பொய்யான காரியங்களைக் கூறுகையில்; நம்முடைய இருதயம் ஈட்டிகளாலும், அம்புகளாலும் பிளக்கப்பட்டதைப்போல உணருகிறோம்.
இப்போது இதைக் கற்பனை செய்துபாருங்கள். நீங்கள் இயேசுவின் கரங்களில் இருக்கிறீர்கள், ஒரு தகப்பன் தன் பிள்ளையைச் சுமப்பதுபோல அவர் உங்களை ஏந்தி, தமது இருதயத்தினருகே உங்களை வைத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இருக்கும் உங்கள்மீது யாராயினும் அம்பு எய்யவோ அல்லது ஈட்டியால் துளைக்கவோ முயன்றால் (வேதாகம நாட்களில் நடப்பதுபோல) உங்கள் இதயத்தில் பாயும் அம்புகளும் ஈட்டிகளும், அவருடைய இதயத்திலும் பாயுமல்லவா? அந்த அநீதியாலும் வேதனையாலும், உங்கள் இதயத்தைத் துளைத்த ஈட்டிகளையும், அம்புகளையும் பிடுங்கியெடுத்து, எதிர்த்தாக்குதல் நடத்த நீங்கள் விழையலாம். ஆனால் அதை நீங்கள் செய்ய மறுக்கையில், உங்கள் இதயத்தையும் இயேசுவின் இதயத்தையும் துளைத்த அதே அம்போ, ஈட்டியோ உங்கள் இதயத்தை அவரோடே இணைக்கிறது. உங்கள் பிணைப்பு ஆழமாகிறது.
எனவே அடுத்தமுறை உங்களை யாராவது தவறாக, இழிவாக அல்லது அவதூறாகப் பேசினால், அதற்காகத் தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். ஏனெனில் இயேசுவின் இருதயத்தோடு நீங்கள் நெருங்கும் வாய்ப்பு அது. மேலும் உங்களைக் காயப்படுத்தி வேதனைப்படுத்துபவருக்காக ஜெபியுங்கள்.

விசுவாசத்தால் உறுதியாய் நிலைத்தல்
1998 ஆம் ஆண்டு உலகிலேயே அதிகம் விற்பனையாகும் அலைபேசி உற்பத்தி நிறுவனமாக நோக்கியா உயர்ந்து, 1999 ஆம் ஆண்டு சுமார் நான்கு பில்லியன் டாலர்கள் லாபத்தை ஈட்டியது. ஆனால் 2011 ஆம் ஆண்டு அதின் விற்பனை தோய்ந்து, தோல்வியின் விளிம்பை நோக்கிப் போய்க்கொண்டிருந்த இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. நோக்கியா அலைபேசி பிரிவின் தோல்விக்கு முக்கிய காரணி, சந்தை நிலவரத்தைக் கண்டு பயந்ததால் எடுக்கப்பட்ட மோசமான தீர்மானங்கள். அதின் மேலாளர்கள் தங்கள் வேலை பறிபோகுமோவென்று, நோக்கியா அலைபேசியிலிருந்த மென்பொருள் மற்றும் வடிவமைப்பு குறைபாடுகளைக் குறித்துப் பேச தயங்கினர்.
யூத ராஜாவான ஆகாஸின் இருதயமும் அவன் ஜனத்தின் இருதயமும் பயத்தினால் காட்டிலுள்ள மரங்கள் காற்றினால் அசைகிறதுபோல் அசைந்தது (ஏசாயா 7:2). இஸ்ரவேலின் ராஜாவும், சீரியாவின் ராஜாவும் ஒரே அணியாகப் படைகளை ஒன்றுதிரட்டி, யூதாவின்மேல் யுத்தம் பண்ண வந்தார்கள் (வ.5–6). தேவன் ஏசாயாவைக்கொண்டு ஆகாஸின் எதிரிகளின் ஆலோசனை நிலைநிற்பதில்லை, அதின்படி சம்பவிப்பதுமில்லை (வ.7) என்று அவனை ஊக்கப்படுத்தினபோதும், மதியிழந்த தலைவன் பயத்தின் காரணமாக அசீரியா ராஜாவோடு கூட்டணி வைத்து, அந்த பராக்கிரமமான ராஜாவுக்குக் கீழ்ப்படுகிறான் (2 இராஜாக்கள் 16:7–8). நீங்கள் விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் (ஏசாயா 7:9) என்று தனக்குச் சொன்ன தேவனை அவன் நம்பவில்லை.
இன்றைக்கும் விசுவாசத்தால் உறுதியாய் நிற்பதென்பதை புரிந்துகொள்ள, எபிரெய ஆக்கியோன், "நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே"' (10:23) என்பதைக் கருத்தில் வைக்க நம்மை அறிவுறுத்துகிறார். நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற (வ.39) இயேசுவில் நம்பிக்கைவைக்க, பரிசுத்த ஆவியானவர் நம்மை பெலப்படுத்துவார்.

கிறிஸ்துமஸின் அற்புதம்
விற்பனை நிலையத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பைக் கண்டேன். அதிலிருந்த குழந்தை இயேசுவின் சிற்பத்தில், குழந்தையின் வடிவம் அச்சசலாக செதுக்கப்பட்டிருந்தது. இந்த புதிதாய் பிறந்த குழந்தை, துணியால் சுற்றப்பட்டு, கண்கள் மூடியது போலில்லாமல், அதின் கண்கள் திறந்தும், கைகளை விரித்து சற்றே துணிகளை அகற்றியும், கரங்கள் அகற்றி, விரல்கள் நீட்டப்பட்டிருந்தது. "இதோ இங்கே இருக்கிறேன்" என்று சொல்வது போலிருந்தது.
இந்தச் சிறிய சிலை கிறிஸ்துமஸின் அற்புதத்தைப் பறைசாற்றியது. தேவன் தமது குமாரனை மனு உருவில் உலகத்திற்கு அனுப்பினார். குழந்தையான இயேசு வளருகையில் அவருடைய சிறு கைகள் பொம்மைகளோடு விளையாடினது, பின்பு வேதத்தை ஏந்தினது, பின்னர் ஊழியம் செய்யும் வரைக்கும் மரச்சாமான்களை உருவாக்கியது. அவர் பிறந்தபோது மிருதுவான பூரணமான அவருடைய கால்கள், ஓரிடம் விட்டு வேறிடம் சென்று போதிக்கவும், சுகமாக்கவும் அவரை சுமந்தது. அவருடைய வாழ்வின் முடிவிலே, இந்த கைகளும் கால்களும் ஆணிகளால் கடாவப்பட்டு, அவருடைய உடலைச் சிலுவையில் சுமந்தது.
தமது குமாரனை நமது பாவங்கள் போக்கும் பலியாகத் தேவன் அருளி, நம்மீதிருந்த பாவத்தின் ஆளுகைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்று ரோமர் 8:3 சொல்கிறது. நாம் இயேசுவின் பலியை நமது பாவங்களுக்கான பிராயச்சித்தமாக ஏற்றுக்கொண்டு, நமது வாழ்வை அவருக்கு அர்ப்பணிக்கையில் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைவோம். தேவ குமாரன் நமக்காகக் குழந்தையாகப் பிறந்ததால், நாம் தேவனோடு ஒப்புரவாக வழியுண்டு, அவரோடு நித்தியகாலம் வாழும் நிச்சயமும் உண்டு.

இது போதும்
ஒரு திரைப்படத்தில், ஏழை விவசாயி ஒருவர் தன்னுடைய மூன்று மகள்களுக்குத் திருமணம் முடிக்கச் சிரமப்படுகிறார். தேவனிடம், தனது பொருளாதாரத்தைக் குறித்து இப்படிச் சொல்கிறார்: "தேவனே நீர் அநேக ஏழைகளைப் படைத்துள்ளீர். ஏழையாய் இருப்பது அவமானமல்ல என்று புரிகிறது, ஆனால் அதில் பெருமையும் இல்லையே. எனவே எனக்குச் சிறிது ஆஸ்தி இருப்பதில் தவறென்ன, நான் ஐசுவரியவானாய் இருந்தால் உமது பிரம்மாண்டமான நித்திய திட்டம் நிறைவேறாதோ?"
ஷோலேம் அலெய்க்கேம் என்ற இத்திரைப்பட வசனகர்த்தா இந்த விவசாயி மூலம் இவ்வார்த்தைகளைப் பேசுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, ஆகூர் இதேபோல யதார்த்தமான ,சற்று வித்தியாசமான ஜெபத்தைத் தேவனிடம் ஏறெடுப்பதை நீதிமொழிகள் புஸ்தகத்தில் பார்க்கலாம். ஆகூர் தேவனிடம் தனக்குச் செல்வத்தையும் வறுமையையும் தரவேண்டாமென்றும், மாறாகத் தனது படியை அளந்து போஷிக்குமாறும் கேட்கிறார் (நீதிமொழிகள் 30:8-9). அதிகமாக இருந்தால் பெருமையடைந்து தேவனை மறுதலிப்பவனாக மாறிவிடக்கூடும், தரித்திரனாக விட்டால் தான் பிறரிடம் திருடி தேவனின் நாமத்திற்கு அவமரியாதை உண்டாக்கக்கூடும் என்றும் அறிந்திருந்தார் (வ.9). தன்னை போஷிப்பவர் தேவனே என்பதை ஆகூர் புரிந்துகொண்டார். எனவே, தனது அனுதின தேவைகளுக்கு "படியை அளந்து" போடுமாறு கேட்கிறார். தேவனைப் பின்தொடர்வதையும், அவரால் மட்டுமே உண்டாகும் நிறைவையும் ஆகூரின் ஜெபம் வெளிக்காட்டுகிறது.
ஆகூரின் இந்த மனநிலை நமக்கும் இருப்பதாக, தேவன் ஒருவரே நம்மை போஷிக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்வோமாக. அவருடைய நாமம் மகிமைப்படும் விதத்தில் பொருளாதார உயர்வுகளை நாடுகிற நாம், அவருக்குமுன் மனநிறைவோடு வாழவும் பழகலாம். ஏனெனில் அவர் "அளந்து போடுகிறவர்" மட்டுமல்ல, அதற்கும் மேலாகவே அளிப்பவர்.
